சாதி சொல்லி அவமதித்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்த மடில்டா!


சாதனைப் பெண் மடில்டா

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா ஊழியரான மடில்டா குள்ளு என்பவர் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளார்.

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடும் அமெரிக்கா நாட்டு போர்ப்ஸ் பத்திரிகை 2021-ம் ஆண்டின் 20 சூப்பர் இந்தியப் பெண்கள் பட்டியலையும் அண்மையில் வெளியிட்டது. இதில் வணிகம், அறிவியல், விளையாட்டு, சமூகப் பணி உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்துவரும் பெண்கள் முன்மொழியப்பட்டனர்.

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக தலைமையேற்று நான்காவது இடத்தைப் பிடித்து வரலாறு படைத்த ராணி ராம்பால் இதில் இடம்பெற்றிருந்தார். கரோனா வைரஸ் ஆர்டிபிசிஆர் பரிசோதனை வடிவமைத்த குழுவுக்குத் தலைமை தாங்கிய புனே வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் மருத்துவர் பிரியா அப்ரகாம், சூழலியல் போராளி திஷா ரவி, அமேசான் இந்தியக் கிளைத் தலைவர் அபர்ணா புரோகித் உள்ளிட்ட மேலும் 16 பெண்கள் இதில் அடையாளம் காணப்பட்டனர். அந்த வகையில் ஆஷா ஊழியர் ஒருவர் இந்த பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. யார் இந்த மடில்டா குள்ளு?

சைக்கிள் ராணி!

ஒடிசா சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள கர்காத்பகல் கிராமத்தைச் சேர்ந்தவர் மடில்டா குள்ளு (45). கரோனா பெருந்தொற்று உலகை அச்சத்தில் உறையவைத்த காலத்திலும் எல்லோரும் வீட்டடங்கியிருந்த நாட்களிலும் தனது சமூகக் கடமையாற்றிவந்த லட்சக்கணக்கான ஆஷா ஊழியர்களில் மடில்டாவும் ஒருவர். அதேநேரம் மற்றவர்கள் செய்யாததை மடில்டா செய்யத் துணிந்தார்.

தினந்தோறும் காலை 5:30 மணிக்கு எழுந்து தனது சைக்கிள் சக்கரம் நெடுந்தொலைவு பயணிப்பதற்கான காற்றுடன் தயார்நிலையில் உள்ளதா என்பதைச் சரி பார்த்துவிடுவார் மடில்டா. அடுத்து வீட்டு வேலைகளை அரக்கப்பறக்க முடித்து தனக்கான உணவு பொட்டலத்தையும் கட்டிக்கொள்வார். தான் விரும்பி அணியும் நீலப் புடவையைப் பாங்காக உடுத்திக் கொள்வார்.

தன்னுடைய பொறுப்பில் உள்ள 250 வீடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரின் சுகாதார நிலை தொடர்பான குறிப்புகள் அடங்கிய நோட்டுப்புத்தகம், அட்டவணை, பேனா ஆகியவற்றைப் பையில் எடுத்துவைத்துக் கொள்வார். முதலுதவிக்குரிய மருந்துப் பொருட்கள், கரோனா கிட்கள் உள்ளிட்டவற்றையும் கவனமாகக் கொண்டு செல்வார்.

கர்ப்பிணிகளை, பச்சிளம் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களைச் சோதிப்பது, மலேரியா பரிசோதனை மேற்கொள்வது, குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்ட பாலியல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகளைப் பெண்களுக்கு அளிப்பது, அங்கன்வாடி ஊழியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுதல் குறித்த கணக்கெடுப்பை வீடு தோறும் சென்று நடத்துவது உள்ளிட்ட பணிகள் மடில்டாவின் அன்றாடம். இத்தனையும் செய்ய காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டால் சில நாட்கள் இரவு 11 மணிவரை வேலை நீடிக்கும். கரோனா காலத்தில் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் மருத்துச் சேவையில் இப்படித்தான் ஈடுபட்டு வருகிறார்.

மருத்துவ சேவையில்...

துணையாக அமர்ந்த நாய்!

அதிலும் கரோனா பெருந்தொற்று தன் பகுதி மக்களை ஒருபோதும் அண்டக்கூடாது என்று கூடுதல் சமூக அக்கறையோடு மடில்டா தன் பணியை செய்துவந்தார். ஆனால், பாழாய்ப்போன சாதிய சமூகம் மடில்டாவையே அருகில் அண்ட அனுமதிக்கவில்லை. காரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த மடில்டா வீடுகளுக்குள் நுழைந்து தொற்று பரிசோதனை செய்ததினால்தான் தங்களுக்கு நோய் ஏற்பட்டதாகக்கூடச் சிலர் அவர் மீது பழி சுமத்தினர். குடிக்கத் தண்ணீர் கேட்டால் அவர் பருகிய குவளையைக் கையில் திரும்பி வாங்கப் பலர் மறுத்தனர். ஆனாலும் மடில்டா தான் ஏற்றுக் கொண்ட பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். தன் கிராம மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதை உறுதி செய்தார்.

பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிக்குத் துணையாக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவமனையின் தரையிலேயே உட்காரும்படி மடில்டாவுக்கு கட்டளை விடுக்கப்பட்டது. அப்போது தன் அருகில் அங்கு சுற்றித்திறிந்த ஒரு நாய் வந்தமர்ந்ததை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்று பேட்டி ஒன்றில் மடில்டா கண்கலங்கியபடி தெரிவித்தார்.

மலேரியா காய்ச்சல் வந்த நோயாளியை பரிசோதிக்கச் சென்றபோது அந்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், “உன் சாதிக்காரங்களுக்கெல்லாம் என்னதான் நினைப்பு” என்று அவமதித்திருக்கிறார். அப்போதும் மடில்டா தன் கடமையை செய்துவந்தார். பிறகு பல ஆண்டுகள் கழித்து தன் மருமகளின் பிரசவத்துக்கு மடில்டா உதவியபோதுதான் தன் தவறை உணர்ந்து அந்தப் பெண் மடில்டாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன்பின், மடில்டாவை தங்கள் வீட்டுக்குள் அழைத்துவந்து உடன் அமர்ந்து தேநீர் பருகுவதை அக்குடும்பத்தினர் வழக்கமாக்கினர் என்று மடில்டா நினைவுகூருகிறார்.

நிந்தனையை தன் செயலால் கடந்தவர்!

அதிலும் கரோனா காலத்தில் மடில்டா வேறுவிதமான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிவந்தது. முதலாவதாக, கரோனா நோய்த்தொற்று என்பதே ஒருவகை புரளி என்று பலரைப்போலவே நம்பினர் அம்மக்கள். அடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மரணித்துவிடுவோம் என்று அஞ்சினர். இப்படி சாதியமும் மூடநம்பிக்கையும் வேரூன்றிப் போன மக்களிடம் பொறுமை காத்து அவர்களை நல்வழிப்படுத்தினார் மடில்டா. ஒரு கட்டத்தில் கர்காத்பகல் கிராமத்தினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வழிநடத்தினார். தான் நிந்திக்கப்பட்டபோதும் அதே மக்களுக்காக அயராது உழைத்த மடில்டாவையும் கரோனா பாதித்தது. அப்போது வீட்டுத் தனிமையில் இருந்தவர் தான் மருந்து அளிக்க வேண்டிய காசநோயாளியை மனத்தில் நிறுத்தியே விரைவில் மீண்டெழுந்தார்.

இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகையின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தான் இடம்பெற்றிருப்பது ஆஷா ஊழியர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிய மரியாதையாகக் கருதுவதாக மடில்டா தெரிவித்துள்ளார்.

x