தென்காசி மாவட்ட நூலகத்துக்கு உதவும் குடும்பம்: திருமண நாளில் புரவலராக இணைந்த மணமக்கள்!


தென்காசி: தென்காசி மாவட்ட நூலக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சு.சண்முக சுந்தரம். இவரது தந்தை சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற நூலகர். இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த அனைத்து நூலகங்களிலும் புரவலாக இணைந்து நூலக வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளனர். மேலகரம், தச்சநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு, செங்கோட்டை, திருநெல்வேலி டவுன் நூலகங்களில் இவர்கள் புரவலர்களாக உள்ளனர்.

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலரான சண்முகசுந்தரம் 50-வது புரவலராகவும், இவரது மனைவி தனலட்சுமி 100-வது புரவலராகவும், மருமகள் கோமதி 150-வது புரவலராகவும், தந்தை சுப்பிரமணியன் 200-வது புரவலராகவும் இணைந்து பெருமை சேர்ந்துள்ளனர். மேலும், சுப்பிரமணியனின் 81-வது பிறந்த நாளில் இவரது பேத்திகள் சிதம்பரலட்சுமி, காயத்ரி தேவி ஆகியோர் தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் புரவலர்களாக இணைந்தனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நூலகர் சுப்பிரமணயனின் பேத்தியும், தென்காசி மாவட்ட மைய நூலுகர் சண்முக சுந்தரத்தின் மகளுமான சிதம்பர லட்சுமி திருமண விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் மணமக்கள் சிதம்பரலட்சுமி, சண்முகசுந்தரம் ஆகியோர் நூலக ஆணைக் குழு கண்காணிப்பாளர் திருமலைக்குமாரசாமி, தென்காசி மாவட்ட மைய நூலக அலுவலர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் தலா ரூ.1000 செலுத்தி நூலக புரவலர்களாக இணைந்தனர்.

அப்போது திருநெல்வேலி நூலுக கண்காணிப்பாளர் சங்கரன், நூலக ஆய்வாளர் கணேசன், நூலிருப்பு சரிபார்ப்பு அலுவலர் ரவிச் சந்திரன், இரண்டாம் நிலை நூலகர் அண்ணாமலைச்சாமி, நூலகர்கள் செங்கோட்டை ராமசாமி, தென்காசி ஜூலியா ராஜசெல்வி, நிஹ்மதுனிஸா, ஓய்வு பெற்ற நூலகர் பிரம நாயகம் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு நூலகங்களில் தொடர்ந்து புரவலர்களாக இணைந்து குடும்பத்தோடு நூலக வளர்ச்சிக்கு உதவி புரியும் இவர்களது குடும்பத்தினருக்கு வாசகர் வட்ட நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.