எல்லைச்சாமிக்கு ஓர் இரங்கற்பா!


இம்மண்ணுக்கு

இது போதாத நேரம்

ராணுவப் பறவையின் சிறகுகள்

சற்றே ஓய்ந்திருக்க

வானமே உதிர்ந்துவிட

இது

துயரத்தின் உச்சகாலம்

எங்கள் படைத் துப்பாக்கியின்

குண்டுகளில் உடல் கருகிய வாசம் வருகிறது

தைரியத்தின் எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டீர்கள்

உங்கள் சவப்பெட்டியின் கதவுகளை

நாங்கள் எந்த பலத்தில் மூடுவது?

உயரங்கள் உங்களுக்குப் புதிதல்ல

ஆனாலும் இவ்வளவு உயரம்போனது

எங்கள் சிந்தைக்கு எட்டாதது

முப்படைக்கான அறிவுசார் மூச்சு

கூடுதலாய் அறம் சார் மூச்சு

இன்னும் மிகுந்தமையாய்

அன்புசார் மூச்சு

முற்றாக ஓய்ந்துபோயிருக்கிறதே!

மரணச் செய்திகள்

பழகிவிட்ட இக்காலத்தில்

உங்கள் இழப்பு

எளிதில் கடக்கக்கூடியதா என்ன?

சிப்பாய்களின் மனதினுள்

சிம்மாசனமிட்ட சீர்மிகு சிங்கத்தின் குரல்

மரணம் எனும் இருளில் அல்லவா மறைந்துவிட்டது!

எல்லைச்சாமிகளின்

ஆயுதங்களைச் சும்மாவே வைத்திருந்த இப்பூமியில்

எங்களின் பேராயுதமும்

யாரிடமுமில்லாத

போராயுதமும் நீர்தானே!

உலகத்துள் உடைக்கு

ஒரு மரியாதையென்றால்

அது

நீவிர் அணிந்த

ராணுவ உடையல்லவா!

எல்லையைப் பாதுகாத்தவனையும்

சேர்த்தல்லவா பாதுகாத்தது உமது வீரம்!

இந்த அறிவு

இந்த ஆற்றல்

இந்த அனுபவம்

இப்படியோர் இதயம்

எப்போது இனி இங்கு எங்களுக்கு வாய்க்கும்?

போய் வாருங்கள் பேராற்றலே

பெரும்படையின் முதல் தளபதியே

எப்போதும் இந்திய மண்ணின்

வீரத்தின் அடையாளம் நீவிர்!

இந்தியா உம்மை மறக்காது

உச்சம் தொட்ட உமது தீரச்செயல்களை

உலகமும் மறக்க முடியாது!

x