ஜக்கு வரான்... கதவைச் சாத்துங்கோ!


பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்த அம்மிணி, பெரிதாய் ஒரு சவுண்டு விட்டார்.

"நீ தூக்காதே... இவரை கீழே வரச் சொல்றேன்."

அப்பவே எனக்கு உடம்பு ஆடிருச்சு. எனக்கு ஏதோ வேலை வருதுன்னு.

"கீழே போய் அந்த டப்பாவை எடுத்துட்டு வாங்க. ஜக்குக்கு கை வலி. பாவம்."

ஜக்கு, அம்மிணியோட பெரியப்பா பையன். டப்பாதானேன்னு அசால்ட்டா போனேன். ஆட்டோக்காரர்ட்ட ஜக்கு நரம்பு புடைக்க சண்டை போட்டுக்கிட்டிருந்தான்.

“கொடுக்கிறதைக் கொடுங்கன்னு சொல்லிட்டு இப்போ அநியாயமா கேக்கறியே.”

“ரெண்டு பெரிய லக்கேஜை கொண்டாந்துருக்கேன். மனசாட்சி வேணாமா.”

ரெண்டு லக்கேஜா. டப்பான்னு அம்மிணி சொன்னது தப்பா. ஆட்டோக்குள்ர எட்டிப் பார்த்தா, ஜக்கு ப்ளஸ் ஒரு ஃப்ரிட்ஜ் பேக் செஞ்சு வரும் அட்டைப் பெட்டி.

ஜக்குவை சிரமப்பட்டு ஆட்டோல இருந்து பிரிச்சு இறக்கிவிட்டேன். “அம்பது தான் தருவேன்”னு ஜக்கு விடாம சண்டை போட, நான் ஆட்டோக்காரர்ட்ட கெஞ்சுனேன்.

“பொட்டியை மேலே கொண்டு வரீங்களா... நீங்க கேக்கறத கொடுத்துடறேன்.”

“ஒங்க மூஞ்சிக்காக வரேன்”னு பொட்டியைத் தூக்கிட்டு வந்தார். ஜக்கு படியேறும்போது திட்டிக்கிட்டே ஏறினான்.

“என்னா கனம் கனக்குது. உள்ர என்னத்த வச்சிருக்கு.” ஆட்டோ டிரைவர் மனசுக்குள் ஜக்கு பேமிலியையே வாழ்த்துனது தெரிஞ்சுது.

பர்ஸை எடுத்துக்கிட்டு வந்தேன். ஆட்டோ சார்ஜ் 80, பொட்டி தூக்குனதுக்கு 100-ன்னு வாங்கிட்டுப் போயிட்டாரு.

”இந்தா... ஒரு வாய் காபி குடி”ன்னு ஜக்கில் ஜக்குக்கு காப்பி கொடுத்தாங்க. மடக்குன்னு குடிச்சுட்டு, கொண்டு வந்த லக்கேஜைக் காட்டுனான்.

“ஒனக்கு யூஸ் ஆவும்னு கொண்டு வந்தேன்கா.”

அம்மிணி முகமெல்லாம் பூரிப்பு. பொட்டியைத் தொறந்தா உள்ளே ப்ளாஸ்டிக் டப்பாக்கள். ஹோட்டல்ல, கல்யாண மண்டபத்துல சாப்பாடு பேக்கிங் செஞ்சு தர மாதிரி.

“போன தடவை சொன்னீல்ல... எவர்சில்வர் டப்பால கொடுத்தா திருப்பித் தர மாட்டேங்கிறாங்கன்னு. இதுல போட்டுக் கொடுத்துரு. போனாலும் நஷ்டம் இல்ல.”

அம்மிணி என் பக்கம் திரும்புனாங்க. “பாருங்க. பேச்சோடு பேச்சா சொன்னதை ஞாபகம் வச்சுக்கிட்டு எப்படிக் கொண்டு வந்துருக்கான்னு.”

அதுல இருக்கிற டப்பாவை வச்சு அம்மிணி தன் ஆயுசுக்கும் கொடுக்கலாம். மிச்சம் கூட இருக்கும்.

“ஹோல்சேல்ல வாங்குனேன்க்கா. கடைல ஒரு டப்பா வாங்குனா 20 ரூவா. ஹோல்சேல்ல பாதி ரேட்டுதான்.”

ஜக்கு நாசுக்கா பணம் கேக்குறான்னு அம்மிணிக்கும் புரிஞ்சிருச்சு. “அவரு தருவார்டா. எவ்வளவுன்னு சொல்லு.”

அவன் வந்த செலவையும் சேர்த்தே வாங்கிட்டான். வாசல்ல கார்ப்பரேஷன் மினி லாரியோட பாட்டு கேட்டுச்சு. மக்கும் குப்பை மக்கா குப்பைன்னு. அம்மிணி என்னைப் பார்த்தாங்க.

“இன்னிக்கு குப்பை எடுக்காம போயிட்டான். கேட்டா ஒங்க வீட்டுல விழுவற குப்பை மொத்த ப்ளாட்லயும் விழுவற குப்பையை விட அதிகமா இருக்குன்னு முனகல்.”

ஜக்கு கிடைச்ச சான்ஸை விடுவானா. “இப்ப என்ன... குப்பையை வைக்க கேரி பேக் இருந்தா நல்லா இருக்கும். அதானே.”

அம்மிணி முகத்துல தன் சொந்தக்காரங்க மூளையோட பவரை நினைச்சு புளகாங்கிதம்.

“எனக்கும் தொல்லை இருக்காதுடா. மொத்தக் குப்பையும் ஒரு கேரி பேக்ல போட்டுட்டா வேலை ஈசி”ன்னாங்க.

“கவலையை விடு. நாளைக்கே கொண்டு வந்து எறக்கிடறேன்”னு சொல்லிட்டு சிட்டாப் பறந்துட்டான்.

மறுநாள் ஒரு பெரிய மூட்டை வந்துச்சு. “நீ தெனம் ஒரு பையில் போட்டு வைக்கலாம். தீர்ந்துருச்சுன்னா சொல்லு இன்னொரு பண்டல் எறக்கிடறேன்.”

ஜக்கு அம்மிணியைப் பார்த்தான். அம்மிணி என் பர்சைப் பார்த்தாங்க. ஜக்கு பாக்கெட்ல வெயிட் கூடுச்சு.

“இருடா. உப்புமா செஞ்சுருக்கேன். சாப்பிட்டுப் போ”ன்னு அம்மிணி சொல்லவும், ஜக்கு முகத்துல லைட்டா பயம் வந்துச்சு.

“நீ மளிகை சாமான் எங்கே வாங்கற”ன்னு அடுத்த பிட்டைப் போட்டான். அம்மிணி சொன்னதும், “லிஸ்ட்டைக் கொடு. தரமான சாமான் உன் வீடு தேடி வரும். அதுவும் நீ எதிர்பார்க்காத ரேட்ல.”

அவ்ளோதான். அம்மிணி ஒக்கார்ந்து லிஸ்ட்டை எழுதினாங்க. “மாசாமாசம் ரெகுலரா வாங்கற சாமான்”னு சொல்லவும் “ஒண்ணாந்தேதியே வந்துரும்”னு ஜக்கு வாக்குறுதி கொடுத்தான்.

எனக்கு ஒண்ணு அப்பதான் புரிஞ்சிது. ஒவ்வொரு தடவை வரும்போதும் அம்மிணி வாயைப் பிடுங்கி தேவை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதையே அடுத்த அஜெண்டாவா ஆக்கிடறான்னு.

ரெண்டு மாசம் ஓடுச்சு. ஹால் ஏற்கெனவே சிறுசுன்னு முனகுவேன். இப்போ ஜக்குவோட அடிக்கடி விஜயத்துல ஒரு ஏரியா ஹால் ரொம்பிருச்சு.

எங்க வீட்டுல வேலை செய்யற அம்மிணிக்கு ஒரே குஷி. பாதி எடம் பெருக்க துடைக்க வேண்டாம். அது மட்டும் இல்லை. மீதி எடத்து குப்பையையும் நைசா இந்தப் பொட்டிகளுக்கு அடியில தள்ளிவிட ஆரம்பிச்சுட்டாங்க.

அம்மிணி வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம அக்கம்பக்கத்துல ஜக்கு பெருமையைச் சொல்லவும், “அம்மிணி ஒரு டப்பா இருந்தாக் கொடேன். டிபன் கட்டிக் கொடுக்கணும்”, “ஒரு கேரிபேக் கொடு”ன்னு உரிமையா வந்து நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

“எப்படிப் பணம் கேக்கறது”ன்னு அம்மிணி கூச்சப்பட்டது இன்னும் வசதியா போச்சு. அடுத்த தெருவுலேர்ந்துல்லாம் வர ஆரம்பிச்சாங்க. ஜக்கு வந்தப்போ பாதி எடம் காலியா இருக்கவும் அவனே மிரண்டு போனான்.

“உன் நல்ல மனசை அவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க. நீ மட்டும் சும்மாவா வாங்கற. இனிமே கறாரா சொல்லிரு”ன்னு ஏத்தி விட்டான்.

நாங்களா மளிகை வாங்கும்போது கைவசம் இருக்கிறதை தவிர்த்துட்டு வாங்குவோம். ஜக்கு நூல் புடிச்சாப்ல கொண்டுவந்து போட்டதுல ஒரே ஐட்டம் அஞ்சாறு பாக்கெட் சேர்ந்து போச்சு. அதையும் தெரிஞ்சுக்கிட்டு அக்கம்பக்கம் வாங்கிட்டுப் போனாங்க.

“ஒனக்கு வீணாத்தானே போவுது. பூச்சி வச்சிருச்சுன்னா யாருக்கும் யூஸ் இல்ல. தூக்கிப் போடறதுக்கு ஆக்கிப் போடலாம்ல”ன்னு பஞ்ச் டயலாக் விட்டாங்க. எப்படி நிறுத்தறதுன்னு தடுமாறினேன்.

அம்மிணி போன்ல ஜக்குட்ட கத்துனது கேட்டுச்சு.

“ஏதாச்சும் வேணும்னா நானே சொல்றேன். நான் கேக்காம இனிமே எதுவும் கொண்டு வராதே.”

மகனார் என்னைப் பார்த்து கண்ணடிச்சாரு.

“ஜக்கு உன்னை நல்லா ஏமாத்துறாருன்னு அம்மாக்கு சொன்னேன்.”

என்னால முடியாததை மகனார் சாதிச்சுட்டார்ல!

x