நிழற்சாலை


மழைச் சொந்தம்


இந்த மழையும்

சொந்த ஊர் மழையும் ஒன்றல்ல


இந்த மழை

பரண் மீது கிடந்த

எனது பால்ய நினைவுகளை

தட்டி எழுப்பவில்லை


இந்த மழை

சின்னச் சின்ன

சந்தோஷங்கள் அளித்து - எனை

சிலிர்க்கச் செய்யவில்லை


இந்த மழைக்கு

என் காதல் ரணங்களுக்கு

மருந்திடத் தெரியவில்லை


இந்த மழை

எனக்கு ஒரு போதும்

கவிதைகளைப் பரிசளித்ததில்லை


இந்த மழை

வெறும்

நீர்களின் கூட்டணி


சொந்த ஊர் மழை

என் எண்ணங்களின் பேரணி!


- ப்ரணா

வயிற்றுக்குள்ளிருந்து வரும் குரல்கள்


பார்த்துப் பார்த்து

செலவு செய்த காலமும்

முடிந்துவிட்டது

வெறும் பர்ஸோடு

ஒரு முழு நாளை நகரத்தில்

நகர்த்துவது சாத்தியமா

தேனீர் குடிக்க தோன்றி

நீர் அருந்திச் செல்வது

என்ன மாதிரி சமநிலை

மதியம் கிடைக்காத

தக்காளி சோறு பற்றி

பேச என்ன இருக்கிறது

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

மீசை முறுக்குகையில் தோன்றுகிறது

எல்லாம் வல்ல கவிதை வயிற்றில்

நல்லவேளை

செரிக்காத சிந்தனைகள்

இன்னும் மிச்சமிருக்கின்றன


- கவிஜி

பாவனையின் ருசி

வார்த்தை சவுக்குகளில்

சிக்கி கண்களில் பொங்கியதை

லாவகமாய்

விரல்நுனியில் மறைத்துவிடுகிறாள்

வாங்க வாங்க என்றழைத்து நாற்காலி இடுகிறான் அவன்

பலகாரம் வாங்கி வர பிள்ளை கடைக்கு ஓடுகிறது

காபி போட்டு வருவதாய்

சமையலறைக்குள் நுழைந்தவளை பின்தொடர்ந்து போனவனின்

குரல் வேண்டுமென்றே கிசுகிசுக்கிறது

கிடைத்த இடைவெளியில்

ஒரு வெட்கம்

மெல்ல அவிழத் தொடங்க

ஊடலுக்கு இனியென்ன வேலை

விருந்தாளியோடு

வெளியே

அமர்ந்திருப்பதைத் தவிர.

-ந.சிவநேசன்

செவி முளைத்த துளி


கொட்டித் தீர்த்தது மழை

தாத்தாவின் கதை முடிந்தும்

தூங்கிய பேரனுக்காக

‘ம்’ கொட்டுகிறது

தாழ்வாரத்தில் சொட்டும் நீர்!


-தஞ்சை சதீஷ்

அழகின் புன்னகை

கிள்ளி பறித்தால்

செடிக்கு வலிக்குமென்று

ஒரு முறை சொல்லியிருந்தாள் பாப்பா

பறிக்காது பூவை

தன் கூந்தலோடு ஒற்றிப்பிடித்து

அழகாயிருக்காப்பா என்று

அவள் வினவிய கணம்

பூவோடு சேர்த்து

குட்டி தேவதையையும்

காய்த்திருந்தது பூச்செடி

- மகேஷ் சிபி

மிட்டாய் மனது

பெற்ற குழந்தையைப் போலத்

தோளில் நாள் முழுதும்

பஞ்சு மிட்டாய்ப் பொதிகள் கோர்த்த

மூங்கில் கம்பைச்

சுமந்தலையும் அவரது

கண்கள் சிறுவர்களைத் தேடியபடி

அலை பாய்கின்றன

சிறு மணியை ஒலித்தபடி

காதிற்குச் சுவை கூட்டி

அழைக்கும் அவரிடம்

வாங்கும் இனிப்பானது

சிறு புன்னகையொன்றில்

வண்ணம் பெற்று விடுகிறது

இளஞ்சிவப்பாக...


- கி.சரஸ்வதி

வாழ்வின் எச்சங்கள்

இப்போதெல்லாம்

காண முடியவில்லை

கிராமங்களில்

அவற்றின்

சுவடுகள் இன்னுமிருக்கின்றன

மனிதநேய உரையாடல்களில்

தழைத்த மனிதத்தின் வளமை

நம் நினைவுகூரல்களில்

நங்கூரமிடுகின்றன

சிதிலமடைந்த நிலையில்

அவ்வப்போது வந்துசெல்லும்

சிட்டுக்குருவிகளும்

சிறகடிக்க மறந்து திகைக்கின்றன

எப்போதோ பூட்டப்பட்ட

வீடொன்றின் திண்ணையில்

தலையசைத்தபடி வரவேற்கின்றன

எருக்கன் செடிகள்.

- கா.ந.கல்யாணசுந்தரம்

கலைப் பசி


பூந்தொட்டிக்குள்‌

புகுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

ஒரு காட்டை

அதில்

விலங்குகளைத்தான்

காணவில்லை

மீன் தொட்டிக்குள்

புகுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

ஒரு சமுத்திரத்தை

அதில்

அலைகளே இல்லை

மழைநீர்த் தொட்டிக்குள்

புகுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

ஒரு வானத்தை

அதில்

வானவில்லைத்தான் காணவில்லை...

எப்படியும் ஒரு கர்ஜனையை

விதைத்து

ஒரு அலையை நீந்தவிட்டு

ஒரு வானவில்லையாவது செங்கல்லோடு

வைத்துப் பூசிவிட வேண்டும்

இல்லையெனில் என்னாவது

இயற்கை நேசன்

எனும் என் பிம்பம்!


- கெளந்தி மு

பசியின் நிறங்கள்

பெருநகரத்தின் பாலத்தினடியில்

தங்கிவிட்டவர்களின்

பசியை

வண்ணமாகவே

வைத்திருக்கின்றன

நிறமிழந்த பாலச் சுவர்களில்

ஒட்டப்படும் சினிமா போஸ்டர்கள்.

- ச.ஜெய்

x