மற்றுள்ளவருக்கு வேண்டி நம்முடே சொப்னங்கள நஷ்டப்படுத்தேண்ட ஆவஸ்யம் இல்ல சாரே..!


இந்துஜா

இந்துஜா பிரகாஷ் சொல்வதைக் கேட்டாலே நமக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். அதிக உடல் எடை கொண்ட இவர் அதனாலேயே பலரின் உருவக்கேலிக்கும் உள்ளாகி இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் துடைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு மாடலிங் துறையில் அசத்தும் பெண்ணாக வலம் வருகிறார் இந்த கேரளத்து மங்கை!

எர்ணாகுளம் அருகே இரும்பனம் என்ற பகுதியில் இருக்கிறது இந்துஜாவின் வீடு. அந்தப் பகுதிவாசிகள் யாரைக் கேட்டாலும் இந்துஜாவின் வீட்டுக்கு பக்குவமாய் பாதை காட்டி விடுகிறார்கள். தனது மிதமிஞ்சிய உடல் எடையால் பார்ப்பவர்களால் கேலிக்கு உள்ளான இந்துஜா, அதற்காக சோர்ந்துபோய் விடவில்லை. தான் படித்த டிப்ளமோ சிவில் படிப்பை விட்டு விலகி, மாடலிங் துறையில் கோலோச்சி வருகிறார். அதீத உடல் பருமன் கொண்டவர்கள் மத்தியில் நம்பிக்கை வெளிச்சக் கீற்றையும் படரவிடுகிறார்.

இந்துஜாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகம் ததும்ப பேசத் தொடங்கினார். “நான் குண்டாக இருப்பதைப் பார்த்துவிட்டு பலரும் கண்டதை எல்லாம் இஷ்டத்துக்கு வாரி வழித்து உள்ளே தள்ளுவேனோ எனத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் நான் அப்படியான பெண் இல்லை. ரொம்ப சராசரியான அளவுக்குத்தான் சாப்பிடுவேன். உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றிய போதும் என் உடல் எடை குறைந்ததே இல்லை. இதற்கு ஜெனடிக் பிரச்சினையும் ஒரு காரணம்.

இயல்பாகவே என் அம்மா வழியில் பலரும் குண்டாக இருப்பார்கள். அதனாலேயே நானும் குண்டாக இருக்கிறேன். அதுவுமில்லாமல், எனக்கு தைராய்டு பிரச்சினையும் இருக்கிறது. ஆனால், எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நம் மனதின் அடி ஆழத்தில் ஒரு விருப்பம் இருக்கும் அல்லவா? எனக்கு அந்த விருப்பம் நடிப்பு. சினிமா தான் என் லட்சியம். அதற்கு நான் கண்டுபிடித்த எனக்கான வாசல்தான் மாடலிங்!

இந்த உலகில் அனைவருமே ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் இல்லையே! கருப்பு, வெள்ளை என மனித இனங்களில் எப்படி நிறம் இருக்கிறதோ அப்படித்தான் மெலிதான, தேகம், தடித்த தேகம் எனவும் இருக்கிறார்கள். இதை நாம் தீர்மானிக்க முடியாது; இறைவன் அருளியது! பொதுவாக பலரும் ஸ்லிம்மான பெண்களுக்காக மாடலிங் செய்வார்கள். ஆனால் நான், என்னைப் போல பருமனாக இருக்கும் பெண்களுக்கான உடைகளுக்கு மாடலிங் பெண்ணாக இருக்கிறேன். மாடலிங் என்றாலே மெல்லிய தேகம் என வரையறை ஒன்றும் கிடையாது” என படபடத்தார் இந்துஜா.

மலையாளத்தில் ‘தொட்டப்பன்’, ‘விக்ருதி’ என்ற 2 படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இந்துஜா. அடுத்து ஒரு வெப்சீரிஸிலும், 2 மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். சினிமா, மாடலிங் துறை மீது கொண்ட ஆர்வத்தால், 136 கிலோ எடையில் இருந்த இந்துஜா இப்போது 105 கிலோவாக உடல் எடையைக் குறைத்திருக்கிறார். “இந்த எடை குறைப்புக்கும் நடிப்பின் ஊடே ஆன நடனப் பயிற்சியே காரணம்” என்று விழிகள் விரிக்கிறார் இந்துஜா.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், “என்னோட அப்பா பிரகாஷ் சில வருஷங்களுக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அம்மா கீதா இல்லத்தரசிதான். என் தங்கை சிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யுறா. நான் டிப்ளமோ சிவில் படிச்சேன். படிப்பை முடிச்சுட்டு ஒரு கம்பெனியில் வேலை செஞ்சேன். வேலைக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் வழியில் தென்படும் இளைஞர்கள் ‘குண்டு...குண்டு’ என என்னை உருவ கேலி செய்வார்கள். அதுபோன்ற உடல்ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது தாங்க முடியாத துயரம் துரத்தும். அதற்காக பலநாட்கள் தனிமையில் அழுதிருக்கிறேன். யாராவது தானே விரும்பி உடல் எடையைக் கூட்டிக் கொள்வார்களா? ஆனால், பொதுசமூகம் அதுபற்றி சிந்திக்காமல் கேலி பேசும் போது மனம் ரொம்பவும் வருந்தும்.

இந்துஜா

பேருந்து நிலையத்திலோ, ரயில் ஏற காத்திருக்கும்போதோ கூட முன்பின் தெரியாதவர்களும் பக்கத்தில் வந்து, ‘நீ பெண் பிள்ளையல்லவா... உனக்குத் திருமணம் செய்ய வேண்டுமல்லவா... உடல் எடையைக் குறைக்கக் கூடாதா?’ என அறிவுரை சொல்வார்கள். அது அத்தனை ரணமாக இருக்கும். இந்த உலகில் இலவசமாக கிடைக்கும் ஒன்று அறிவுரை மட்டுமே.

என்னை அனைவரும் எதிர்மறையாக செய்த விமர்சனங்களையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக நான் தேர்வு செய்தது தான் இந்த மாடலிங் துறை. படித்த படிப்பை விட்டு விட்டு மாடலிங் துறைக்குச் செல்லும் விருப்பத்தை முதலில் வீட்டில் சொன்னேன். முதலில் சம்மதிக்கவில்லை; கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், அதற்குள் இருந்த எனக்கான நியாயத்தைப் புரிந்துகொண்டு சம்மதித்தார்கள். நான் நினைத்தபடியே, என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை வைத்தே இப்போது நான் முன்னுக்கு வந்துவிட்டேன்.

எனக்கு தமிழும் நன்கு பேசவரும். தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கும். விக்ரம், சூர்யா படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். அவர்கள் படத்தில் சின்ன ரோலில் வாய்ப்பு கிடைத்துவிடாதா என அதற்கும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்.

சினிமாவுக்குள் வந்த புதிதில் தனுஷ், விஜய் சேதுபதி எல்லாம் எப்படி இருந்தார்கள். அவர்களைப் பற்றிய அன்றைய மதிப்பீடு எப்படி இருந்தது? இப்போது அவர்கள் அடைந்திருக்கும் இடத்தைப் பாருங்கள். அதேபோலத்தான் குண்டுப் பெண்ணாக என்னைக் கேலி செய்பவர்கள் எதிர்காலத்தில் எனது நடிப்புத்திறனைப் பார்த்து பிரமிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் தான் ஓடுகிறேன்.

லைப் ஸ்டைலை மையப்படுத்திய யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன். இப்போது, உடல் பருமனான பெண்களுக்கான ஜீன்ஸ், டாப், சேலை ஆகியவற்றுக்கான மாடல் ஆர்ட்டிஸ்டாக உள்ளேன். செலிபிரேட்டிகளுக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெஸினா கடவேலின் மாடலிங் குழுவிலும் இருக்கிறேன். சினிமாவில் நடிக்க விரும்பித்தான் மாடலிங்குக்கு வந்தேன். இப்போது 23 வயது தானே ஆகிறது. கூடிய சீக்கிரமே சினிமாவில் எனக்கான இடத்தைத் தக்கவைப்பேன்’’ என்றார் தீர்க்கமாக.

இந்துஜா

இந்துஜா முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர் இல்லை. ஆனாலும் நடனத்தில் அசத்துகிறார். வெயிட்டான உடம்பைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதில் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தவர், போகப் போக நடனத்தையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.

நேர்காணலை நாம் முடிக்கும் தருணத்தில், “மற்றுள்ளவருக்கு வேண்டி நம்முடே சொப்பணங்களை நஷ்டப்படுத்தேண்ட ஆவஸ்யம் இல்ல சாரே... கேலி செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருப்பார்கள். நாம் வீரியத்தோடு இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் நம் சாதனையை அவர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்’’ என்று நமக்கு விடை கொடுத்தார் இந்துஜா

இதைச் சொன்னபோது அவரது முகத்தில் அத்தனை பளிச்!

x