பஞ்சாப் ஸே ஆயா ஹூம்!


அலாரம் இல்லாமல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட கர்வத்தில் இருந்த பாச்சா, பால்கனியில் நின்று பல்விளக்கியபடி, கீழே தெருவில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தவர்களை நோக்கி கையசைத்துக்கொண்டிருந்தான். அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த பைக், “இதெல்லாம் ஓவரா தெரியல? ‘வேதா இல்லம்’ கைக்கு வந்த சந்தோஷத்துல திக்குமுக்காடிப்போன தீபா மாதிரி... இதென்ன அலம்பல்?” என்று கேட்டது. வகைதொகையாக பங்கம் செய்யப்பட்டதை உணர்ந்த பாச்சா, வழக்கம்போல அதைக் காட்டிக்கொள்ளாமல் களமிறங்கத் தயாரானான்.

முதலாமவர் சீமான்.

“நமக்குத் தெரிஞ்ச தம்பி ஒருத்தர் ஸ்டேஷனுக்கு வந்திருக்காரு... இல்லல்ல சார், அரெஸ்ட்தான் பண்ணிருக்காங்க. ஆனா, அவரே முறைப்படி தன்னோட ஆதரவாளர்களோட கார்ல அடக்கமா வந்து சேர்ந்திருக்காரு... அவர் நம்மளையும் தூத்திப் பேசுன ஆளுதான். நமக்குத் தூரத்துத் தம்பி முறைங்க... ஆமாங்க” என்று துஷ்பெஷ்கிஸ்தான்(!) தூதரக அதிகாரியிடம் தூய தமிழில் பேசிக்கொண்டிருந்தார் சீமான்.

அருகில் இருந்த தம்பிகள் அதை பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பாச்சா அங்கே பிரசன்னமானான்.

“அதெப்படி சார், சர்ச்சைக்குரிய ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணியே சமூக வலைதளங்கள்ல ட்ரெண்ட் ஆகுறீங்க?” என்று கேட்ட பாச்சாவை, முறைப்படி முறைத்த சீமான், “ஆவோ பாச்சா பாய்! மே அபி பஞ்சாப் சே ஆயா ஹூம். கிசானோ(ம்) கா பியார் பாயா ஹூம்” என்று தந்தியடிப்பதுபோல் இந்தியில் அவர் பேச, அதிர்ச்சியில் கண் பிளந்து நின்றான் பாச்சா.

“எதுவா இருந்தாலும் ஒருநாள் மட்டும் போய்ட்டு வந்துட்டா போதும்... அதை வெச்சே பில்டப் பண்ணி அசத்திடுறீங்களே எப்படி சார் இது?” என்று அடுத்துக் கேட்டதும், ‘போதும் போதும். அண்ணன் இனி பஞ்சாபியில படபடக்க ஆரம்பிச்சிடுவாரு’ என்று கண் ஜாடையிலேயே கதறினார்கள் அருகில் இருந்த தம்பிகள்.

“சரி விடுங்க. ப்ளூ குர்த்தா ஒயிட் போர்டு சகிதம், அவ்ளோ பேரை ஆன்டி இந்தியன்ஸ்(!)னு அதட்டிட்டு இருந்த மாரிதாஸை அரெஸ்ட் பண்ணினதுக்கு நீங்க காட்டுன எதிர்ப்புதான் இப்ப லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் ஸ்டேட்டஸா ஃபேஸ்புக்ல ட்விட்டர்ல ஓடிட்டு இருக்கு. தார்மிக சப்போர்ட் கொடுத்ததால, தம்பிகள் கட்சியான நாதக-வைத் தாமரைக் கட்சியான பாஜகவோட (ரைமிங் செட்டாகுதுல்ல!) இணைச்சு வெச்சுப் பேசுறாங்க இணைய உ.பிக்கள்” என்றதும், “பேசுறதுதானேய்யா அரசியல். அவர் தப்பா பேசுனா... அரசு சார்புல பதிலுக்கு இன்னும் தப்பா பேசுற மாதிரி ஒரு ஆபீஸரை அப்பாயின்ட்மென்ட் பண்ண வேண்டியதுதானே. அதுக்காண்டி அரெஸ்ட் பண்றதா?” என்று சீனியர் தம்பி ஒருவரின் ஆமோதிப்பை எதிர்பார்த்தபடி சீறிப்பாய்ந்தார் சீமான்.

அடுத்து தினகரன்.

பல மாதங்களாக ஆள் அட்ரெஸ்ஸே தெரியாததால், வழி தெரியாமல் வானத்திலேயே வட்டமடித்து ஒருவழியாக அவரது இல்லத்தில் தரையிறங்கினான் பாச்சா. “என் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தடபுடல் ஏற்பாடுகள் வேண்டாம். போஸ்டர்கள் வேண்டாம். புகழுரைகள் வேண்டாம். ஆளுயர மாலைகள் அறவே வேண்டாம்... சொல்றது புரியுதா?” என்று கான்ஃபரன்ஸ் காலில் கட்சியினருக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் தினகரன்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்... தினகரன் சாரைப் பார்க்க முடியும்ங்களா?” என்று ஆள் அடையாளம் தெரியாமல், அவரிடமே கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான் பாச்சா.

“வாப்பா. எங்கே ஆளையே காணோம்?” என்று கேட்ட தினகரனிடம், “தமிழ்நாடே அதைத்தான் சார் உங்ககிட்ட கேட்குது” என்று சொன்ன பாச்சா, “இந்த கேப்ல டி.ராஜேந்தர்கிட்ட டியூஷன் போனீங்களா? ‘குடும்ப ஆட்சி’... ‘டிராமா காட்சி’ன்னு அடுக்குமொழியில அசத்துறீங்களே?” என்றும் கேட்டுவைத்தான்.

வழக்கம்போல அகலச் சிரித்த அமமுக தலைவர், “டி.ராஜேந்தர்கிட்ட என்ன ஸ்டன்ட் மாஸ்டர்கிட்டே எல்லாம் ட்ரெய்னிங் எடுக்கிற அளவுக்கு அதிமுகவுக்குள்ள அடிதடி நடக்குதே?” என்று அச்சப்படும் தோரணையில் சொன்னார்.

“என்னதான் பிரச்சினைன்னு சொன்னாலும் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் கட்சியைக் காபந்து பண்ணிக்கிட்டாங்க. போயஸ் கார்டன் பங்களா தீபா, தீபக் கிட்ட போச்சு. இனி உங்களுக்கு என்ன கிடைக்கும்னு அரசியல்ல இருக்கீங்க?” என்று கேட்டான் பாச்சா. “அமமுகவுக்கு அடுத்த உள்ளாட்சித் தேர்தல்ல மக்கள் நிறைய பரிசு தரப்போறாங்க... எங்களுக்கு மக்கள் அன்பைத் தவிர வேற எதுவுமே வேண்டாம்” என்றார் தினகரன்.

“ஒருவேளை அதிமுகவை சின்னம்மா கைப்பற்றிட்டா, நீங்களும் கட்சியைக் கலைச்சிட்டு கழகத்துல இணைஞ்சுடுவீங்களா? அப்படின்னா அவங்க ஒருங்கிணைப்பாளர். நீங்க இணை ஒருங்கிணைப்பாளர்னு மறுபடி இரட்டைத் தலைமை வருமே?” என்று அடுக்கடுக்காகத் துடுக்குத்தனமாக பாச்சா பேசியதைக் கேட்டு ஆனந்தமாகச் சிரித்த தினகரன், பதிலேதும் சொல்லாமல் பாச்சாவை வழியனுப்பிவைத்தார்.

அடுத்து தீபா.

திருப்திகரமான திருப்பத்தால் தித்திக்கும் மனநிலையில் இருந்த தீபா, போயஸ் கார்டன் புதுமனை புகுவிழாவுக்கு என்னவெல்லாம் ஏற்பாடு செய்யலாம் என கணவர் மாதவனுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.

“போயஸ் கார்டன் வீட்டுல நிறைய மாற்றங்கள் இருக்குன்னு சொல்லிருக்கீங்க. உங்க புயல் வாழ்க்கையும் திடீர்னு திசைமாறியிருக்கே?” என்று கேட்டான் பாச்சா.

“எல்லாம் அத்தையோட ஆசீர்வாதம்தான்” என்று சிரித்த தீபாவிடம், “ஆனா சசிகலா மேல சந்தேகம் இருக்குன்னு சடார்னு ஒரு சரவெடியைப் பத்தவச்சுட்டீங்களே... ஆறுமுகசாமி ஆணையத்துல ஆஜராவீங்களா?” என்று கேட்டதும், மலர்ந்த முகத்தில் இருந்த மாதவனே கடுப்பாகி, “நிறைய பேட்டி கொடுத்தாச்சு. ஒவ்வொரு சேனல்கிட்டேயும் ஒவ்வொரு மாதிரி பேசி... என்ன பேசுனோம்னு எங்களுக்கே ஞாபகம் இல்லை... நீங்க கெளம்புங்க” என்றார்.

வரும் வழியில், “அண்ணாமலை ஆவேசமா ப்ரெஸ் மீட்ல பேசியிருக்காராம்யா” என்றது பறக்கும் பைக்.

“தெரியுமே... மாரிதாஸைக் கைது பண்ணினது காவல் துறைன்னாலும் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தது கதிரவக் கட்சி ஆளுங்கதானேன்னு சொல்லிருக்காரு... அதானே?” என்று கேட்க, “ஆமாம்பா” என்றது பைக். “ஐபிஎஸ் அதிகாரியா இருந்தவருக்குத் தெரியாத விஷயமா? இதையெல்லாம் கேட்டா ‘ஆன்டி இந்தியன்’னு சொல்லிடுவாங்க... இன்னிக்கு இத்தோட எண்டு கார்டு போட்டுடுவோம்” என்றான் பாச்சா!

x