கர்ப்பிணியின் உயிரைப் பறித்த பரோட்டா?


அனந்தாயி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி அனந்தாயி(26) கர்ப்பமுற்றிருந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால், கணவர் சங்கரன் மகிழ்ச்சியடைந்ததுடன், மனைவி ஆசைப்பட்டு எதைக் கேட்டாலும் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

நேற்றிரவு அனந்தாயி, பரோட்டோ சாப்பிட ஆசையாக இருப்பதாகச் சொன்னதால், கணவர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பயந்துபோன கணவர், உடனடியாக அனந்தாயியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அனந்தாயி இன்று(டிச.7) உயிரிழந்தார். இதனால் அவரது வயிற்றில் இருந்த 5 மாத வளர்ச்சியடைந்த இரட்டை சிசுக்களும், இந்த உலகைப் பார்க்காமலேயே இறந்துவிட்டன.

மனைவியின் மரணத்துக்குப் பரோட்டாவே காரணம் என்று கணவர் சங்கரன் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இரவில் வேண்டாம்!

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உணவு முறை வல்லுநர் (நியூட்டிரீசியன் டாக்டர்) மீனாட்சி பஜாஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில், "பரோட்டோ உடலுக்குத் தீங்கானது. அதுவும் இரவில் சாப்பிடுவது மோசமான விளைவுகளையே உருவாக்கும். பொதுவாக இரவு உணவை 7.30 மணிக்கே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் எளிதில் ஜீரணமாகும் உணவையே சாப்பிட வேண்டும். மைதாவில் நார்ச்சத்து கிடையாது. மாவுச்சத்து மட்டுமே உண்டு. பரோட்டாக் கடைகள் பெரும்பாலும் இரவு 9, 10 மணிக்கே களைகட்டுகின்றன. அதுவும் சைவ பரோட்டா என்றாலாவது குருமாவில் கொஞ்சம் நார்ச்சத்து இருக்கும். அசைவ சால்னா என்றால் அதில் நிறைய தேங்காயும், இறைச்சியுமே இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணமாகாது. குடல் செயல்பாட்டுக்காக இதயம் நிறைய வேலை செய்ய வேண்டியதிருக்கும். இது நல்லதல்ல" என்று கூறியிருந்தார் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

x