உதட்டில் மச்சமுள்ள பூனையைக் காணவில்லை!


அந்த போஸ்டர்

செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அன்பு மிகுதியால் குழந்தையாகவே மாறிவிடுவார்கள். மதுரையில் கடந்த வாரம் போலீஸ்காரர் ஒருவர் தன்னுடைய செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி, விருந்து கொடுத்திருக்கிறார். எங்கள் தெருவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நாய் இறந்ததற்கு துக்கம் விசாரிக்கப் போகவில்லை என்பதற்காக, என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்.

அந்த வகையில், கோவையில் ஒருவர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது. காணாமல் போன தன்னுடைய பூனையைக் கண்டுபிடிப்பதற்காக அவர் ஒட்டியுள்ள சுவரொட்டியில், "பூனை காணவில்லை. பெயர்: ஜெஸி, வயது: 6. அடையாளம்: உதட்டில் மச்சம்" என்று குறிப்பிட்டிருப்பது சிரிப்பை வரவழைப்பதால், நெட்டிசன்கள் அதைப் பகிர்ந்து பகடி செய்துகொண்டிருக்கிறார்கள்.

"ஜெஸி, கார்த்தி என்ற பெயருடைய ஆண் பூனையுடன் டேட்டிங் போயிருக்கும், கேரளா பக்கம் தேடிப் பார்க்கவும்" என்றெல்லாம் கிண்டலாக கமென்ட் அடிக்கிறார்கள் இணையவாசிகள். "அய்யோப் பாவம், மழைக்காலத்தில் ஜெஸி எங்கே கஷ்டப்படுகிறாளோ..." என்று வேதனையைப் பதிவு செய்கிற ஜீவகாருண்ய சீலர்களும் இணையத்தில் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

பாலுக்காகத் தாயைத் தேடும் குட்டி...

அந்த போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள முதல் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, கோவையைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன் பேசினார். "அது சாதாரண பூனை கிடையாது சார், பெர்சியன் பூனை. அதாவது, பெர்சியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பூனை. நீளமான முடியுடன் புசுபுசுவென்றிருக்கும் அந்தப் பூனையை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் வாங்கி வளர்க்க ஆரம்பித்து இப்போது உலகம் முழுக்கப் பரவி வாழ்கிறது. நான் வளர்த்த குட்டி 6 வயதுடையது. இதுவரை நான்கு முறை குட்டி போட்டுள்ளது. ஒவ்வொரு ஈத்திலும் ஒரு குட்டியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நண்பர்களுக்கு கொடுப்போம், சிலவற்றை விற்போம். இப்படி மொத்தம் 28 குட்டி போட்டதில் 4 குட்டிகள் எங்கள் வீட்டில் இருக்கின்றன. ஜெஸி காணாமல் போகவில்லை, யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். மற்ற குட்டிகளாவது பரவாயில்லை, கடைசி குட்டி இன்னும் பால்குடி மறக்கவில்லை. அதுதன் தாயைக் காணாமல் பரிதவிக்கிறது. எங்களாலும் 6 ஆண்டாக வளர்த்த அவளைப் பிரிந்து இருக்க முடியவில்லை. யாராவது இந்தப் பூனையைப் பார்த்தால் தயவு செய்து தகவல் கொடுங்கள்" என்றார்.

போஸ்டர் ஒட்டிய பிறகு பூனை இருக்குமிடம் குறித்து தகவல் கிடைத்ததா? என்று கேட்டபோது, "இல்லை சார். நிறைய பேர் போன் செய்கிறார்கள். தப்பான இடத்தைச் சொல்லி அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று அலைக்கழிக்கிறார்கள். பூனை தொலைந்த துயரத்தைவிட, இவர்கள் படுத்துகிற பாடுதான் தாங்க முடியாததாக இருக்கிறது. மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பது மனிதன் மட்டும்தான் சார். விலங்குகள் அப்படியில்லை" என்றார் வருத்தமாக.

x