வீடுதோறும் வாத்துக் குஞ்சுகள், பழக் கன்றுகள், மீன் குஞ்சுகள்!


பெருந்தொற்று பரவல் காரணமாக நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் எதிர்பாரா பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் ஊட்டச்சத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அவலநிலை ஓர் உதாரணம். அந்த பாதிப்பைச் சரி செய்யவும், இனி நேராது தவிர்க்கவும், மேற்கு வங்கம் எடுத்துவரும் முயற்சிகள் நாட்டுக்கே உதாரணமாகி இருக்கின்றன.

பெருந்தொற்று காரணமாக மேற்கு வங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட (ஐசிடிஎஸ்) மையங்கள் மூடப்பட்டதில், ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. கடந்த செப்டம்பரில் மேற்கு வங்கம் முழுவதும் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். 2020-ல் மொத்தம் 3.5 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 6.70 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 1,17,120 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள 73.45 லட்சம் குழந்தைகளுக்கு உணவு, பால், சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இங்கு ஊட்டச்சத்துள்ள உணவும் மாத்திரைகளும் தரப்படுகின்றன.

பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான ஏழைகள் வருவாய் இழந்து முடங்கினர். அந்தக் குடும்பங்களுக்கு தானியங்களை வழங்க அரசு நடவடிக்கையும் முழுமையாகச் சென்று சேரவில்லை. எனவே, கிடைத்த உணவை உண்டு கழித்ததில், குழந்தைகள் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டனர். பெருந்தொற்றுப் பரவல் குறைந்ததும் இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் அளிக்க முடிவானது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு பிறப்பித்த உத்தரவில், ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதை முழுவீச்சில் மேற்கொள்வதோடு தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. தானியங்கள் வழங்கப்படுவதற்கு அப்பால் பல புதுமையான உத்திகளும் இம்முறை பின்பற்றப்பட்டன.

உதாரணத்துக்கு, புரூலியா மாவட்டத்தில் ஊட்டச்சத்துக் குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட 2,658 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 10 வாத்துக் குஞ்சுகள் தரப்பட்டுள்ளன. இந்த வாத்துகள் பெரிதாகி இடும் முட்டைகள், குழந்தைகளுக்கு உணவாகும்போது சத்துக் குறைவு கணிசமாக குறையும். அத்துடன் பப்பாளி, கொய்யா மரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை வளர்ப்பதன் மூலம் பழங்களைச் சாப்பிட்டும் ஊட்டச்சத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மூன்றாவது ஏற்பாடாக, வீட்டுக்கு அருகில் அவரவர் நிலத்தில் சிறிய குளம் அல்லது குட்டைகளை வெட்டி, அதில் மீன் குஞ்சுகளை இட்டுப் பிறகு கிடைக்கும் மீன்களை உண்டு சத்துகளை பெருக்கிக் கொள்ளவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மற்றொரு மாவட்டமான பங்குராவில், குழந்தைகளுக்கு அன்றாடம் ஒரு முட்டையும், சத்து பானமும் தர ஆரம்பித்துவிட்டனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இருக்கிறது. சில வீடுகளில் கோதுமை, அரிசி கொடுத்தால்கூட சமைத்துச் சாப்பிட முடியாதபடிக்கு அங்கே வறுமை தாண்டவமாடுகிறது. எனவே, அரசே அனைத்து மாநிலங்களிலும் சமுதாய சமையலறைகளைத் திறந்து குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கஞ்சி, அரிசிச் சோறு, கோதுமை ரொட்டி, கீரை, உள்ளூரில் விளையும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துத் தருவதை பரிசீலிக்கலாம்.

மேற்குவங்கம் பாணியில் முட்டை, வாழைப்பழம், மீன் போன்றவற்றையும் வழங்கலாம். கைவசம் உள்ள உணவு தானியங்களை ரேஷன் மூலம் வழங்குவதுடன், இதையும் அரசுகள் பரிசீலிக்கலாம். இவற்றை தேசிய அளவில் செயல்படுத்த மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்க முன்வர வேண்டும். அரிய மனித வளத்தைக் காக்க வேண்டிய கடமை எல்லா அரசுகளுக்கும் இருக்கிறது.

ஒமைக்ரான் என்ற பெயரில் பெருந்தொற்றுக் கிருமி புதிய வடிவம் எடுப்பது பரவலான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் முழு ஊரடங்கு வருமோ என்ற கவலையையும் தந்திருக்கிறது. ஏற்கெனவே இழந்த வேலைகளை திரும்பப் பெறுவதில் பெரும்பாலான மக்கள் தடுமாறி வருகிறார்கள். எனவே, வேலை உறுதித் திட்டத்தையும் அரசுகள் கிராமம், நகரம் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டை தவிர்ப்பதற்கான நிரந்தர வழியாகவும் இதுவே அமையும்.

மேற்கு வங்கத்தின் வாத்து முட்டை திட்டத்தைத் தமிழகமும் பரிசீலிக்கலாம். அதற்கு முன்னதாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்கலாம்.

x