‘சதி’ ஒழிப்புச் சட்டத்துக்கு வயது 192!


எரிக்கப்பட்ட ரூப்கன்வர்

இந்தியாவில் ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டு நேற்றுடன் 192 ஆண்டுகள் ஆகின்றன. இது நம் நாட்டின் பெண்ணுரிமை வரலாற்றில் முக்கிய மைல்கல். கைம்பெண்களை உயிருடன் கொடூரமாக எரிக்கும் சதி பழக்கத்தையும், அது ஒழிக்கப்பட்ட வரலாற்றையும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தில், கணவன் இறந்த பின், அவனது சிதையில் குதித்து மனைவியும் மரிப்பதே ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம். இப்படி மரிக்கும் மனைவியை, சதிமாதா என்றழைத்து கற்புமிக்க தெய்வமாக வழிபடும் பழக்கம், பழங்கால இந்தியா முழுவதும் நிலவியது. தமிழ்நாட்டிலும் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றி பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இருவரும் இறந்ததன் நினைவாக நிறுவப்படும் நினைவுக்கற்களே ‘சதிக்கல்’ என அழைக்கப்படுகிறது. கணவனது மறைவுக்குப் பிந்தைய வாழ்வை பூதப்பாண்டியனின் மனைவி பாடியதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் பாடிவிட்டு அவள் உடன்கட்டை ஏறினாளாம்.

ஆங்கிலேய ஆட்சியில், 1829-ம் ஆண்டு டிச.4 அன்று, இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு வில்லியம் பென்டிக், ‘பெங்கால் சதி சீரமைப்பு சட்டம்’ இயற்றி சதி பழக்கத்தை ஒழித்தார். இந்து மதத்தைச் சேர்ந்த கைம்பெண்களை, அவர்கள் விருப்பத்துடனோ, விருப்பமின்றி நிர்பந்தப்படுத்தியோ, உயிருடன் எரிப்பதும், புதைப்பதும், தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று இந்தச் சட்டம் பிரகடனம் செய்தது.

இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், மிகக் கொடூரமான சதி பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவதும் முக்கியமானதுமான சமூக சீர்திருத்தச் சட்டம் இதுதான். தனது அண்ணன் இறந்ததும், வலுக்கட்டாயமாக அண்ணியை சிதையில் தள்ளி, எரித்துக் கொன்றதை நேரில் பார்த்து மனம்வெதும்பிய ராஜாராம் மோகன் ராய் சதியை ஒழிக்கவேண்டும் என்று முனைப்புடன் பிரச்சாரம் செய்தார். அவருடன், வில்லியம் கேரி உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் விளைவாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ராதாகாந்த தேவ் தலைமையில் இந்து பழமைவாதிகளும், தர்ம சபாவும் இந்தச் சட்டம் இந்துமத விவகாரங்களில் தலையிடுவதாகவும், மதவிவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற வாக்குறுதி அளித்த மூன்றாம் ஜார்ஜின் 37-ம் சட்டத்தை மீறுவதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சதி தடைச் சட்டம், பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. அங்கு 7 பிரிவி கவுன்சிலர்களில் 4 பேர், சட்டத்துக்கு ஆதரவு அளித்ததால் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்து கைம்பெண்கள் மறுமணச் சட்டம் 1856, பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டம் 1870 உள்ளிட்ட, பெண்கள் நலனுக்கான பல சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்படுவதற்கு இதுதான் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

ராஜாராம் மோகன் ராய்

சதியில், இறந்தவனின் மனைவி விருப்பப்பட்டு உடன்கட்டை ஏறுகிறாள் என்று இந்துமதவாதிகள் சப்பைக்கட்டுக் கட்டினாலும், பெரும்பாலான பெண்களை நிர்பந்தித்தே சிதையில் தள்ளிவிட்டதாக ராஜாராம் மோகன் ராய், வரலாற்றாசிரியர் அனந்த் சதாசிவ் அல்ட்கர் உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர்.

1822-ல் வெளியான ‘தி கல்கத்தா ரிவ்யூ’ இதழில், கொல்கத்தாவுக்கு 16 மைல் தொலைவிலுள்ள பரிபூரில் மனைவியை மூங்கில் கம்பால் அடித்து, எப்படி கணவனின் சிதையில் தள்ளிவிட்டு எரித்தனர் என்று உப்பு வியாபாரி ஒருவர் தான் நேரில் கண்ட திகில் அனுபவத்தை எழுதியுள்ளார். கணவன் இறந்தபின், அவன் மனைவியும் இறந்துவிட்டால், அவன் சொத்தை அவளுக்குத் தரவேண்டாம், அவளை காலம் முழுக்க பராமரிக்கும் சுமை இருக்காது போன்ற பல காரணங்கள் இந்தப் பழக்கத்தின் பின்புலமாக இருந்தன. அவற்றை மறைத்து, மதம், பாரம்பரியம் என்ற போர்வையில் ‘சதி’யை தக்கவைத்திருந்தனர் ஆணாதிக்கவாதிகள்.

சதி தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், சிந்து பிராந்தியத்தைச் சேர்ந்த பலோச்சி மதகுருக்கள் ஆங்கிலேய கவர்னர் சார்லஸ் நேபியரிடம் சென்று, “இது இந்த நாட்டின் புனிதமான சடங்கு, அதில் தலையிடுகிறீர்களே” என்று முறையிட்டார்கள். அதற்கு அவர், “இருக்கட்டும். கைம்பெண்களை எரிப்பது உங்கள் சடங்கு; சிதையை தயார் செய்யுங்கள். ஆனால், எங்கள் நாட்டிற்கும் ஒரு வழக்கம் உண்டு. ஆண்கள், பெண்களை உயிரோடு எரித்தால், அவர்களைத் தூக்கிலிடுவோம்; அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வோம். எங்கள் தச்சர்கள் தூக்குமரத்தை தயார் செய்வார்கள். கைம்பெண்களை எரிப்பவர்கள் எல்லோரையும் அதில் தொங்கவிடுவோம். நாம், நமது நாடுகளின் வழக்கப்படி செயல்படுவோம்” என்றாராம்.

சதி தடைச்சட்டம் வந்தபிறகு பெண்களை எரிக்கும் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆனாலும், அது முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. 1987-ல், ராஜஸ்தானில் ரூப்கன்வர் என்ற 18 வயது இளம்பெண் எரிக்கப்பட்ட போது இந்தியாவே அதிர்ந்தது. அதற்குப் பிறகு மத்திய அரசு, ராஜஸ்தான் சதி தடுப்பு அவசரச் சட்டம் 1987-ம், பிறகு, சதி தடுப்புச் சட்டமும் கொண்டு வந்து, குற்றத்துக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டத்தை கடுமையாக்கியது. என்றாலும், 2002-ல் மத்தியப் பிரதேசத்தில் 65 வயது குட்டு, 2006-ல் 40 வயது ஜனக்ராணி, 2008-ல் சட்டீஸ்கரில் 75 வயது லால்மதி வர்மா என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்து மதத்தின் பெயரால், பெண்களுக்கு உயிர்வாழும் உரிமை எப்படி மறுக்கப்பட்டது என்பதற்கான வரலாற்று உதாரணம்தான் சதி பழக்கம். மதம் சொன்னதோ, பாரம்பரிய வழக்கமோ, கலாச்சாரமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... அடிப்படை மனித உரிமைகளையும், மாண்பையும், சுயமரியாதையையும் மறுக்கும் எந்த விசயமாக இருந்தாலும் அதை எதிர்த்து உரக்க குரல் கொடுங்கள் பெண்களே, இளைஞிகளே!

x