லென்ஸ் சிமிட்டும் நேரம் - 20


அழகிய தூண்கள்...

2013-ம் வருடம் கோடை விடுமுறைக்கு, சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தோம். அந்த சமயத்தில் ராமேஸ்வரத்துக்கும் செல்லும் வாய்ப்பு அமையும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாலாஜியின் பெரியம்மா மகன் வியாபார நிமித்தமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்று சொன்னதும், நானும் தொத்திக் கொண்டேன். அவருடன் அவருடைய மகளும் என்னுடன் என் மகன் மதியும் சேர்ந்துகொண்டனர்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு பேருந்துப் பயணத்தைவிட ரயில் தான் சுகமான அனுபவம் என்பேன். அப்படியே முடிவெடுத்து காலை 5 மணிக்கே ரயில் நிலையத்தில் இருந்தோம். மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறது. இது வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. நாங்கள் சென்ற நாளிலும் இந்த ரயில் இருந்தது.

சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. அப்போதிருந்தே மதி பாம்பன் பிரிட்ஜை ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கிவிட்டான். பிரிட்ஜ் வந்துவிட்டது என்றதும் ரயிலுக்குள்ளேயே தாவிக் குதித்தான். பிரிட்ஜில் ரயில் செல்வது மதிக்கு புது அனுபவமாக இருந்தது. அது அவனது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்களும் குதிரை வண்டிகளும் வரிசையாக நின்றன. மதி அப்பொழுது தான் குதிரை வண்டியை முதல் முறையாகப் பார்க்கிறான். அதனால் அவனது விருப்பத்தின் பேரில் குதிரை வண்டியிலேயே கோயிலுக்குப் பயணமானோம்.

அப்பொழுதெல்லாம் ராமேஸ்வரம் கோயிலுக்குள் கேமராவை கொண்டு செல்ல அனுமதி உண்டு. அதனால், மறக்காமல் கேமரா பேக்கையும் கையோடு எடுத்துக் கொண்டு இறங்கினேன். பிரகாரங்களில் உள்ள தூண்களுக்கு கும்பாபிஷேகத்துக்காக அப்போது தான் வண்ணம் அடித்துக் கொண்டிருந்தனர். எனக்கென்னவோ அந்தத் தூண்களின் பழமை, நவீன வண்ணங்களினால் மாசுபட்டுவிட்டதாக ஒரு வருத்தம். ஆனாலும் உள்பிரகாரம் தன் பழமை மாறாமல் அழகாகவும் கம்பீரமாகவும் என் கண்ணுக்குத் தெரிந்தது. பக்கவாட்டில் இருந்து வரும் சூரிய ஒளியானது அங்கிருந்த தூண்களின் வழியாக ஊடுருவி வந்து அதன் அழகை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக் காட்டியது. அந்த அழகை எல்லாம் எனது கேமராவில் க்ளிக்கிக் கொண்டேன். அப்போது எடுத்த படங்கள் எல்லாமே என் மனதுக்குப் பிடித்த படங்கள். இனி அப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியாதே!

x