நிழற்சாலை


வாதையாகும் பாதை!

வனத்தை இருகூறாய்ப் பிளக்கின்றன

இரும்புமன இணைகோடுகள்

கூவென ஒலிக்கும் இரயிலின்

ஊதல் சத்தம் சங்கொலியாகவே

முறச்செவிகளில் எதிரொலிக்கிறது

வனமளந்த தூண்கள்

பதற்றத்தில் இருப்புப் பாதையில்

இடறித் தவிக்கின்றன

இடித்துத் தள்ளும்

இரயில் இன்ஜின்களின்

இதயங்கள் என்றும் இரும்பாலானவை

விபத்து எண்ணிக்கை

புள்ளிவிவரங்களோடு

அன்றைய நாள் முடிகிறது

தாயை இழந்த குட்டி யானை

இருப்புப் பாதையை

கண்டு பிளிறி அலறுகிறது

இரயில் பயணிகள்

அற்புதத் தருணமென

சிலாகித்து

அவசரமாக அலைபேசியில்

படமெடுத்துத் தள்ளுகிறார்கள்

வழக்கம்போல் இரயில்கள்

அவ்விடத்தைக் கடக்கின்றன

கூடுதலாக ஓர் எச்சரிக்கைப் பலகை தென்படுகிறது

‘யானை நடமாடும் பகுதி கவன’மென

இரயிலைப் பற்றி

எச்சரிக்கத்தான்

யானைகளுக்கு எவருமில்லை.

-பா.சிவகுமார்

எழில்

துள்ளலுடன் வாலைத் தூக்கி

ஓடியும் நின்றும்

பின்னங்காலில் அமர்ந்து

எச்சரிக்கை உணர்வோடு

இரையைக் கொறிக்கும்

ஓர் அணில்

சட்டென்று அழகாக்கிவிடுகிறது

வெறுமை உருண்டு கொண்டிருக்கும்

சாலையை.

- மகேஷ் சிபி

இரை மழை


விழும் மழைத்துளிகளை

இரையென்று

கொத்த ஓடுகிறது

சிறு பறவை

அழும் குழந்தைக்கு

பாலூட்டி அழுகை

தீர்க்கும் தாயென

பூமியின் பசியாற்றுகிறது

மழை!

- நேசன் மகதி

சொற்காடு

சில சொற்களோடு

ஒரு பூந்தோட்டத்தை

வரைந்துகொண்டிருந்தேன்

அது பெருவனமாய்

மாறிக்கொண்டிருந்தது

வெண்முகில் நிறத்திலும்

நிலாவொளி வண்ணத்திலும்

அலையெழு கடல் வடிவத்திலும்

விநோதப் பூக்களும்

நறுமணமும் வரிகளெங்கும்

இளவேனிற்காலத் தென்றலையும்

வைகறை வான் விடியலையும்

ஆத்திமரத்து விரிநிழலையும்

பல பறவைகளின் ஒலிகளையும்

அதன் வசந்தம்

வரவேற்றுக்கொண்டேயிருந்தது

சிறு கூடாரத்திற்குள்

ஒரு பூங்காவையும் பெருவனத்தையும்

சொற்கள் சாத்தியப்படுத்தியபோது

பட்டமரம் துளிர்த்திடலாயிற்று!

- வேலணையூர் ரஜிந்தன்

விண்ணில் தொங்கும் ஊஞ்சல்

ஒருமுறை வானம்

அண்ணாந்து பார்க்கும் மறுமுறை

ஞானம்

வெளியை வளைக்கும் வித்தை

நீலத்தில் நடக்கிறது

வேகத்தில் வெற்றிடம் வளர

தூரத்தில் கற்பனை இல்லை

வெண்ணிறக் கனவைக் கண்டது போல

கருநீல விளையாட்டு

பூமி இறங்கும் வானத்தில்

நிரம்ப குறைதல் நிமிடமுறை

நித்திரையும் இடையே நிகழ்வது

நீள் சுழற்சி முறை

நிச்சலனத்தின் தந்திரமாகவும் உணரலாம்

நிம்மதியற்ற வானத்தின் நடுவே

நிகழ்த்துக் கலை பூமிப் பந்து

உலக உருண்டை என்பது

உங்கள் காலடியில் இருந்துதான்

தொடங்குகிறது

என்ன பார்க்கிறீர்கள்...

கண்களுக்குத் தெரியவில்லை என்பதை

சற்று நேரம் மறந்துவிடுங்கள்

காலம் கடந்தும் வானம் சுற்றி

அசைந்தபடி இருக்கும்

அரூப ஊஞ்சலைத்தான்

உங்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.

- கவிஜி

ஒமைக்ரான் உயிரி


வாழ்விடத்தையும்

நடத்தையையும் எளிதாக

மாற்றிக்கொள்கின்றன

உருமாற்றிகள்

உயிரணுப் பிரிவுகளில் இவை

மெல்லுடலிகள் என

நான் வகைப்படுத்தி

இவற்றின் தெளிவான

தோற்றப் பிழைகள்

ஒரு மைக்ரோஸ்கோப்பி வழியாக

நன்றாகவே தெரியுமென

எழுதிக்கொண்டிருக்க

என்னருகில் வந்து

ஒமைக்ரான் என உச்சரித்து

முகக்கவசம் ஒன்றைத்

தந்துவிட்டுப் போனாள்

உலகின் சுழற்சியை

உணர்ந்த பெயர்த்தி.

- கா.ந.கல்யாணசுந்தரம்

வரம்

குவளையில் நிரப்பி

பாட்டிலில் அடைத்து

குழாய்களில் செலுத்தி

அணையில் தடுத்து

நீரைப் பிரிக்கும்

அனைத்தின்மீதும்

பரிதாபம் கொள்கிறது

அண்ணாந்து

அலகைத் திறந்து

தாகம் தீர

மழையைப் பருகும்

பறவை.

-ந.சிவநேசன்

கைப்பேசி இரைகள்

கண் விழித்தவுடன்

புலனம் தேடுகிறது

மின்சாதன மூளை

காத்திருப்பின் இனிமையைத்

தொலைத்த வாழ்க்கையைப் பற்றிய குற்றவுணர்வேதுமின்றி

காப்புப் பிரதியெடுக்கும்

அந்நேரத்தைச் சபித்தபடி

நடுங்கத் தொடங்குகிறது

தொடுதிரை நுனிவிரல்

அன்றாடங்களின் முக்கியத்துவத்தைப்

புறக்கணித்தபடியே

கைபேசி சேமிப்பறை நிறைந்து வழிவதைக் கவலையேற்றி

அழித்து மீண்டும்

வரவு வைக்கத் தொடங்குகிறது

மனித எந்திரம்.

- கி.சரஸ்வதி

பகிர்வு

கிடைத்ததா?

கிடைக்கவில்லையா?

உண்மையா?

பொய்யா?

விவரம் தெரியவில்லை

எனினும்

‘ஷேர்’ செய்யாமல்

இருக்க முடியவில்லை

காணாமற்போன

அந்த அழகுக் குழந்தையின்

போட்டோவை!

- பாளைபசும்பொன்

செக்கிருட்டி’ கவிதை

என்னை அவரிடம்

மேனேஜர் அறிமுகம் செய்தபோது

பெயர் என்னவென்று கேட்டார்

சொன்னேன்

நல்ல பெயர் என்றார்

சிரித்தார்

ஆனால்

ஒருநாள்கூட என்னை அவர்

பெயர் சொல்லி அழைத்ததில்லை

‘ஏ... செக்கிருட்டி’ என்றே அழைப்பார்

தீபாவளிக்குச் சரவெடி வெடிக்கையில்

ஒரு சில நல்ல வெடியும்

வெடிக்காமல் சிதறிப்போய்

கிடப்பதுப்போல்

நான் தனித்தே கிடக்கிறேன்

ஆத்தா ஆசையுடன் வைத்த

என் பெயர்

அந்தக் கம்பெனியில்

யாருக்கும் தெரியாமல் கிடப்பதுபோல.

- நாகை ஆசைத்தம்பி

x