இசைவலம்: நட்பின் தூதுவர்கள்!


கர்ண பரம்பரைக் கதைகளாக இருக்கட்டும், புராணங்களாக இருக்கட்டும், சங்க இலக்கியங்களாக இருக்கட்டும்.. நட்பைப் பாராட்டாத கலை வடிவங்களே இல்லை எனலாம். `மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்' என்று 20-ம் நூற்றாண்டின் கவிஞர் வாலி நட்பைச் சிலாகிக்கிறார் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர், `நழுவும் ஆடையைப் பிடிப்பதற்கு வேகமாகச் செயல்படும் கைகளைப் போல, நண்பனின் துயரத்தைப் போக்க விரைவாகச் செயல்பட வேண்டியது நட்பு' என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். நட்பைக் கொண்டாட கால எல்லை, வடிவ எல்லை ஏது? யூடியூபிலும் நட்பைக் கொண்டாடும் ஒரு பாடலைப் பார்க்க முடிந்தது. பாடியிருப்பவர் பத்மலதா.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துளு என பல இந்திய மொழிகளில் பாடிவரும் பின்னணிப் பாடகி. ‘ஒருநாள் கூத்து’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே’, ‘தனி ஒருவன்’ படத்தின் ‘கண்ணால கண்ணால’ உள்ளிட்ட பல பாடல்களில் உருகவைத்தவர். மேற்கத்திய பாணியிலான ஓபரா பாடும் முறையைக் கற்றுத் தேர்ந்திருக்கும் இவர், இந்துஸ்தானியையும் முறையாகக் கற்றிருக்கிறார். திரையிசை, சுயாதீன இசை ஆகிய இரண்டு வகைமைகளிலும் பிரகாசித்து வருகிறார்.

திரையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தாலும் நண்பர் அல்அலிமிர்ஸாக்குடன் இணைந்து நிறைய இசைப் பரிசோதனை முயற்சிகளை இவர் செய்துவருவது, பாராட்ட வேண்டிய விஷயம். வாய்ப்பு வந்தால் பாடுவேன், இல்லாவிட்டால் வேறு எந்த முயற்சியும் செய்ய மாட்டேன் என்பது சிலரின் கொள்கை. கலைஞர்களிடையே இந்தத் தேக்கம் இருக்கக்கூடாது என்பதற்கு இவரே நடமாடும் உதாரணம். ஜாஸ், ப்ளூஸ் போன்ற இசை வகைமைகளைத் தமிழில் முயற்சி செய்து பார்க்கத் தயங்கியதே இல்லை என்பதை, இவரின் யூடியூப் சேனலைப் பார்க்கும் எவருக்கும் எளிதில் புரியும். இவரின் ‘பாரதிதாசன் ப்ளூஸ்’ மதன் கார்க்கியின் ‘டூபாட்’டில் வெளிவந்திருக்கிறது. கந்தசஷ்டி கவசத்தை மேற்கத்திய செவ்வியல் வடிவமான ஓபராவில் பாடி வெளியிட்டிருக்கிறார். அண்மையில் இவர் பாடி எல்லோரின் மனங்களிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல் ‘தீரா நதி... தீரா நதி...'

இத்தனைச் சிறப்புமிக்க பாடகியான பத்மலதா, நட்பின் சிறப்பம்சங்களைக் கொண்டாடும் விதத்தில் பாடிய பாடல் இது.

தோழி தோழர்களே நட்பின் தூதர்களே

தேசங்கள் தாண்டிவந்த காற்றை சுவாசிப்போம்

பறவைக் கூட்டில் சென்று நட்பை போதிப்போம்...’ என்று கவித்துவமான சதீஷின் வரிகளுக்கு மிதமான மெல்லிசையை அமைத்திருக்கிறார் அஜ்அலிமிர்ஸாக்.


நட்பின் மேன்மை சொல்லும் பாடலை ரசிக்க:

https://www.youtube.com/watch?v=7YZZY_4QDaw

வீடுதோறும் கானம்!

கனி காணும் நேரம் - விஷூ பண்டிகை காலங்களில் கேரளத்தின் வீடுகள்தோறும் ஒலிக்கும் பாடல். பாரம்பரியமாகப் பாடப்படும் பாடலின் மரபு மாறாமல், நவீன இசை அலங்காரங்களைச் செய்வதென்பது பெரிய சவால். அதை மிகவும் நேர்த்தியாகச் செய்திருக்கின்றனர் டெல்சி நினானும் பியானோவில் ராமு ராஜும்.

அட்சரசுத்தமான உச்சரிப்பும், பாடல் வெளிப்படுத்தும் அர்த்தங்களை நன்றாக உள்வாங்கி அதை உணர்வுபூர்வமாகத் தன்னுடைய குரலில் டெல்சி வெளிப்படுத்திப் பாடியிருக்கும் விதமும் அதை அப்படியே பியானோவில் ராமு வழிமொழிவதையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பழம் நழுவிப் பாலில் விழுவது போல் மனம் நழுவி பக்தியில் விழுகிறது!

கனியின் சுவை நிறைந்த கானத்துக்கு: https://www.youtube.com/watch?v=4F75MoW4qyE

குருவாயூரப்பனே அப்பன்!

இளையராஜாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலை மறக்க முடியாதவர்களால், அந்தப் பாடல் அமைந்த ரீதிகௌளை ராகத்தையும் மறக்க முடியாது. பக்தி இசைக்கு அப்படியொரு பாந்தமான ராகம். அந்த ராகத்தின் ஜீவ சுரங்கள் நாகசுரத்திலிருந்து காற்றின் திசைகளெங்கும் பரவ,

நாராயணா என நாவாற அழைப்போர்க்கு

வரும் இடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்

குருவாயூரப்பனே அப்பன்’ பாடல் அனூப் சங்கரின் குரலில் ஒலிக்கிறது.

கர்னாடக இசைக் கச்சேரி மேடைகளில் பெண் சாகித்யகர்த்தாவின் பாடல்களையே பாடுவதில்லை எனும் கருத்து இருக்கிறது. இந்தப் பாராமுகத்தையும் தாண்டி கச்சேரி மேடைகளில் பாடுவதற்கு உகந்த எண்ணற்ற பாடல்களை இசை உலகுக்கு வழங்கியிருப்பவர் அம்புஜம் கிருஷ்ணா.

விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி

தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்’ என்று இறைவனைக் குழந்தையாய்க் கொஞ்சும் அம்புஜம் கிருஷ்ணாவின் வளமான கற்பனைக்கு வானமே எல்லை!

ஒரு நல்ல பாடலை நெகிழ்ச்சியான அனுபவமாக்குவதற்கு, தேர்ந்த இசைக் கூட்டணி அவசியம். பக்க வாத்தியமாக மட்டும் இல்லாமல் பக்கபலமாக நாகசுரம் (ஒருமனையூர் கோபி), தவில் (திருப்புனித்துரா ஸ்ரீகுமார்), பியானோ (ராமு ராஜ்), கடம் (மன்ஜூர் உன்னிகிருஷ்ணன்) ஆகியோரின் கூட்டணி பாடலை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. குருவாயூர் ஆலயத்தின் வளாகத்திலேயே பாடலைப் பாடும் கொடுப்பினை இவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

பக்தியில் உருகவைக்கும் பாடலைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=07m324pmuZk

நாங்க என்ன நினைக்கிறோம்னா...

குழந்தைகளின் உலகமே அலாதியானது. சுட்டித்தனம், புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம், விளையாட்டு என அனைத்தும் வரிசை கட்டும். அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் தனிமை. குழந்தைகளின் உலகத்தை ஒரு குழந்தையே தன் பாட்டில் சொல்லும் காணொலி இது. அந்தக் குழந்தையின் பெயர் மஹதி சுப்பிரமணியம். வயலின் மேதை எல்.சுப்பிரமணியத்தின் மகள்வழி பேத்தி மஹதி. தான் எழுதி இசையமைத்துப் பாடியிருக்கும் `ஹவ் வீ ஃபீல்' (How We Feel), பாடலில் ஒத்திசைவாக வயலின் வாசிக்கிறார், கீபோர்ட் வாசிக்கிறார், ஒரு முயலின் உற்சாகத்தோடு உடலை வளைத்து ஜிம்னாஸ்டிக் செய்து அசத்துகிறார்.

குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் எதிர்கொள்ளும் அனுபவங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், அவற்றின் தாக்கங்களை எப்படி உணர்கிறார்கள் என்பதை இந்தப் பாடலில் வயலின் இசை இழையோட, ஒரு குழந்தையின் இயல்புடனேயே பதிவுசெய்திருக்கிறார்.

மேதைமை மிளிரும் குழந்தைமையின் கானத்தை ரசிக்க:

https://www.youtube.com/watch?v=1Qbj_0_PSZs

x