அடுத்தது நோரோ..!


நோரோ வைரஸ் தோற்றம்

உலகநாடுகள் அனைத்தும் ’ஒமைக்ரான்’ பதற்றத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கேரளத்தில் சத்தமில்லாமல் பரவிவருகிறது நோரோ வைரஸ்!

கரோனா தொற்றே முழுமையாக கட்டுக்குள் வராத சூழலில் கேரளத்தில் ஜிகா, நிபா என அடுத்தடுத்து வைரஸ்கள் படையெடுத்து வருகின்றன. அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘நோரோ’. இங்கு, கடந்த வாரத்தில் மட்டும் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான மாணவிகளுக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, கேரள மக்களை அடுத்த அதிர்ச்சிக்குள் தள்ளி இருக்கிறது.

கரோனா 2-வது அலை பல மாநிலங்களிலும் கட்டுக்குள் வந்துவிட்டாலும்கூட, கேரளத்தில் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனிடையே சபரிமலை சீசனும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கேரளம், கரோனா கட்டுப்பாட்டு விதிகளில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்துவருகிறது. முடங்கிக் கிடந்த தமிழகம் - கேரளம் இடையேயான பேருந்து பொதுப் போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்படியான நேரத்தில் கேரள அரசுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது நோரோ!

வயநாடு மாவட்டம், பூக்கோடு கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்குத்தான் முதலில் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டது. கரோனா வைரஸ் நுரையீரலை குறிவைத்துத் தாக்குவதுபோல், நோரோ வைரஸ் குடல் மற்றும் இரைப்பைப் பகுதிகளை குறிவைத்துத் தாக்குவதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். என்றாலும், மருத்துவ உலகில் நோரோ பெரிய அளவில் கரோனாவுக்கு நிகரான சவாலாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

வீணா ஜார்ஜ்

நோரோ தொடர்பாக கேரள சுகாதாரத் துறையின் தொடர் ஆய்வுகள், சில விஷயங்களை தெளிவுபடுத்துகின்றன. ‘நோரோ வைரஸ் தொற்று கேரளத்தில் முதன்முதலில் கால்நடை மருத்துவ மாணவர்களிடம் தான் கண்டறியப்பட்டது. அதேபோல் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கால்நடை வளர்ப்புத் தொழிலில் இருந்தவர்கள் தான். இதனால், நோரோ வைரஸ் கால்நடைகள் மூலமே மனிதர்களுக்கு வந்திருக்கிறது’ என்பதுதான் அது.

நோரோ வைரஸ் குறித்தும், அதை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் காமதேனுவிடம் பேசினார். “இந்த நோரோ வைரஸ் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும். என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கு இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை. உடல் நலம் குன்றியவர்களுக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும். இந்த வைரஸ் அதிகபட்சமாகவே 72 மணி நேரம் தான் மனித உடலில் வாழும். அதற்குள் இரைப்பை, குடலில் போய் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இதனால் சிலருக்கு குடல் வீக்கமும் ஏற்படுகிறது. ஆரோக்கியமானவர்கள் எளிதில் இதிலிருந்து மீண்டுவிடலாம். இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நோரோ வந்தால் சிக்கலைக் கொடுக்கும். இந்த வைரஸால் கேரளத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்றுப் பரவலும் கட்டுக்குள்தான் உள்ளது” என்றார் அமைச்சர்.

வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவை நோரோ வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கின்றன. இவை கரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளோடு ஒத்திருப்பதால், நோயாளி தனக்கு வந்திருப்பது எந்த வகை வைரஸ் தொற்று என்பதில் மருத்துவ சோதனைக்கு முன்பே குழம்பிப்போகும் சாத்தியமும் உண்டு. கரோனாவை போலவே, பரவலிலும் இது ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கேரள மருத்துவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சூரைச் சேர்ந்த மருத்துவர் அனிருத்தன் தம்பி, “நோரோ வைரஸ் தொற்றாளர் கையால் உணவு சாப்பிடும்போதோ அல்லது அவரது உணவைப் பகிர்ந்து சாப்பிடும்போதோ மிக எளிதாக தொற்று மற்றவருக்கும் பரவிவிடும். நோரோ தொற்றாளர் வாந்திக்கு உள்ளாகிறார். அதன் மூலமும் நோரோ வைரஸ் பரவுகிறது. இது காற்றில் பரவி, தண்ணீர், உணவுப் பொருட்களின் மீது படியும் சாத்தியம் இருப்பதால், இவற்றை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கும் தொற்று பரவலாம்.

என்றாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே, நோரோ நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, குடிநீரை நன்கு கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டிகளிலும், கிணற்றிலும் குளோரின் பொடி போட்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருக்கவேண்டும். திறந்தவெளி உணவை தவிர்க்க வேண்டும். கடைகளில் வாங்கும் பழங்கள், காய்கனிகளின் மீதுகூட நோரோ வைரஸ் தொற்றி வரலாம் என்பதால், அவற்றை நன்கு கழுவியபின்பே பயன்படுத்த வேண்டும்.

விலங்குக் கழிவுகளிலும் நோரோ வைரஸ் இருக்கிறது. அவற்றின் மீது மொய்க்கும் ஈ, கொசு ஆகியவை மனிதர்கள் மீது அமரும் போதும் நோய் தொற்றுக்கு உள்ளாகலாம். ஆனால், இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவான விகிதமே. நோரோ வைரஸ் நீர்ச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும் சாத்தியமும் உண்டு என்பதால், தொற்றுக்கு ஆளானவர்கள் போதிய அளவுக்கு நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் முறையாகப் பின்பற்றினாலே நோரோவைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.

நோரோ வைரஸுக்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கமான ஆரம்பநிலை சிகிச்சையுடன் தலைவலிக்கான மாத்திரை, உடல்வலிக்கு சோர்வு நீக்கும் மாத்திரை மட்டுமே தரப்படுகின்றன. இத்துடன், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வகையில் ஆயுர்வேத சூப், காய்கறி சூப், பழச்சாறு உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டால் 3 நாட்களுக்குள் அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துவிடலாம் என்பதே ஆறுதலளிக்கும் செய்தி.

x