டெல்லியில் இன்னும் என்ன செய்கிறார்கள் விவசாயிகள்?


போராட்டக் களத்தில் விமலநாதன்

விவசாயிகளின் 18 மாத கால போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டு விட்டன, நாடாளுமன்றத்தில் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. ஆனாலும் டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் என்னதான் நடக்கிறது.. ஏன் இன்னும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.. என்பதை அறிய, தற்போது டெல்லியில் விவசாயிகளுடன் தங்கியிருக்கும் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளரான, சுவாமிமலை சுந்தரவிமலநாதனிடம் அலைபேசி வழியாகப் பேசினேன்.

நீங்கள் எப்போது டெல்லி சென்றீர்கள்? மசோதா ரத்து செய்யப்பட்டபோது அங்குள்ள விவசாயிகளின் மனநிலை எப்படி இருந்தது?

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தபிறகு, அது நாடாளுமன்றத்தில் ரத்துசெய்யப்படும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நாங்கள் 8 பேர் கிளம்பினோம். அதுபோலவே, 29-ம் தேதி வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, நாங்கள் காசிப்பூர் எல்லையில் இருந்தோம். அந்த விவசாயிகள் அந்நாளை பெரு மகிழ்ச்சியாக கொண்டாடினர்கள். இனிப்புகள் வழங்கியும், இறைவனை வழிபட்டும் மற்றவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

நாங்களும் எங்கள் மகிழ்ச்சியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதமாக, இங்கிருந்து எடுத்துச்சென்ற தென்னங்கன்றுகளை ராகேஷ் திகைத் உள்ளிட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் முக்கிய தலைவர்களிடம் கொடுத்து, அவர்களின் போராட்ட குணத்துக்கும், கோரிக்கைகள் வெற்றியடைந்ததற்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

டெல்லியில் விமலநாதன் உள்ளிட்ட தமிழ்நாட்டு விவசாயிகள்

வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டு விட்டன. மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரதமர், விவசாயிகளை வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இனியும் விவசாயிகள் அங்கேயே இருப்பதும், போராட்டத்தை தொடர்வதும் சரிதானா?

வேளாண் சட்டங்களை ரத்து செய்திருக்கிறார், உண்மைதான். ஆனால், இதை எப்போது செய்திருக்கவேண்டும்? இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது மோடியின் அமைச்சரவையில் இருந்த, சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர்பாதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே இந்தச் சட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தை உடனே ரத்து செய்யுங்கள், இது விவசாயிகளுக்கு எதிரானது என்று சொல்லி கடிதம் எழுதி, காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டு, டெல்லியின் திக்ரி எல்லையில் தீக்குளித்து ஒரு விவசாயி இறந்தாரே.. அதற்குப்பிறகாவது ரத்து செய்திருக்க வேண்டும்.

போராட்ட மேடையில் புத்தக வெளியீடு

டெல்லியில் போராட்டம் தொடங்கிய நாளிலோ அல்லது ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியின் உள்ளே புகுந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு போராடியபோதோ, 11 முறை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதோ இதைச் செய்திருக்க வேண்டும். அல்லது ஐநா சபையின் செயலாளரே, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டாரே அப்போதாவது அல்லது பல்வேறு மாநில சட்டசபைகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியபோதோ இதைச் செய்திருக்கவேண்டும்.

அப்போதெல்லாம் செய்யாத மோடி அரசாங்கம், இப்போது செய்திருப்பது உள்நோக்கமுடையது. ஆனாலும் வரவேற்கத்தக்கதுதான். அதேநேரத்தில் மத்திய அரசின் தேவையற்ற பிடிவாதத்தால் போராட்டம் நடத்தி, அதனால் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ள 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதில்தான், விவசாயிகளின் இந்தப் போராட்டத்தின் முடிவு இருக்கிறது.

ராகேஷ் திகைத்துக்கு தென்னங்கன்று வழங்கும் தமிழக விவசாயிகள்

இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கான இழப்பீடு கேட்டுத்தான் போராட்டம் தொடர்கிறதா?

இரண்டாவது விடுதலைப் போர் என்று வர்ணிக்கப்படும் இந்த போராட்டம், வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தொடங்கப்பட்டது அல்ல. மாறாக, மத்திய அரசின் மின்திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்ற இதர கோரிக்கைகளையும் முன்வைத்துத்தான் தொடங்கப்பட்டது. அதில் வேளாண் சட்டங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மற்ற கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன.

அவற்றோடு, இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப மத்தியஅரசு அலுவலகங்களில் வேலை என்ற கோரிக்கைகள் இப்போது சேர்ந்துள்ளன. சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் இந்த விவசாயிகள் மீது பல்வேறு மாநிலங்களிலும் போடப்பட்டிருக்கும் வழக்குகள் அப்படியே இருக்கின்றன. அவற்றையும் வாபஸ் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோள். இவையனைத்தும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட பிறகே, இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என்பதில் அங்குள்ள விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஒரு கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டாலும்கூட, தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

போராட்ட மேடையில் உரையாற்றும் விமலநாதன்

இப்படி ஊர்விட்டு ஊர்வந்து ஒரு வருடத்தைத் தாண்டியும் போராட அவர்களுக்கு சிரமமாகவே இல்லையா?

அதற்கேற்ப போராட்ட களத்தில் தங்கள் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றிக்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகள் தங்கள் டிராக்டர்களையே வசிப்பிடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலேயே அவர்களுடைய குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. நெடுஞ்சாலையில் ஆழ்துளைக்கிணறு போடப்பட்டு அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான தண்ணீர் வழங்கப்படுகிறது.

டிராக்டரில் பேட்டரியில் இருந்து மின்சாரம் எடுத்து லைட், பேன் ஆகியவை இயங்குகின்றன. உணவு தயாரிப்பதற்கும், பரிமாறுவதற்கும், காலித் தட்டுகளை எடுத்துச் செல்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வந்து கரசேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அதைத் தங்களுடைய குருத்வாராவில் செய்கிற புனிதத் தொண்டுக்கு நிகரானது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விவசாய சங்கத் தலைவருக்கு தென்னங்கன்று வழங்கும் தமிழக விவசாயிகள்

இப்படி ஒரு போராட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தது தமிழ்நாடு தான் என்கிறார்களே?

உண்மைதான். உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக நீண்ட இந்த போராட்டத்துக்கு விதை போட்டது தமிழ்நாடுதான், அதிலும் விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுதான் என்பதை, அங்குள்ள விவசாய சங்கத் தலைவர்கள் பெருமையோடு சுட்டிக்காட்டுகிறார்கள். 2,500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்து, டெல்லியில் 41 நாட்களுக்கு ஒரு எளிய தமிழன் போராடும்போது, டெல்லியைச் சுற்றியிருக்கிற நாம் ஏன் போராட முடியாது என்ற உத்வேகத்தை தந்தது அய்யாக்கண்ணு தான் என்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டதை எப்படி உணர்கிறீர்கள்?

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் நான் பிறக்கவில்லை. அதைப் பார்க்கவில்லை. ஆனால், விவசாயிகள் நடத்தும் இந்த 2-வது சுதந்திரப் போராட்டத்தை பார்த்தேன், அதில் நானும் பங்கேற்றிருக்கிறேன் என்பதில் ஒரு விவசாயியாகவும், தமிழனாகவும் எனக்குப் பெருமை.

எப்போதுதான் போராட்டம் முடிவுக்கு வரும்?

கோரிக்கைகள் ஏற்கபடாதவரைக்கும் முடிவுக்கு வராது. இன்னும் நீண்ட நெடிய காலத்துக்கு இந்தப் போராட்டம் நீடித்து வரலாற்றில் இடம்பெறும்.

x