நூறு வயதிலும் சாதித்த நடராஜன் ஸ்தபதி காலமானார்


நடராஜன் ஸ்தபதி

நூறுவயதைக் கடந்தும் கைவினைக் கலையில் பல சாதனைகள் செய்துவந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் ஸ்தபதி (102) இன்று காலமானார். தமிழக அரசின், ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதைப் பெற்றிருந்த நடராஜன் ஸ்தபதி, கடந்த 3 மாதங்களுக்கு முன்புவரை நுட்பமான கைவினைத் தொழிலை மிகநேர்த்தியாகச் செய்துவந்தார்.

இடது கையால் முகம் பார்க்கும் கண்ணாடியை அழுத்திப்பிடித்துக் கொண்டு, வலது கையால் அதில் ஓவியம் வரைந்து ஆச்சரியமூட்டும் கைவினைக் கலைஞரான நடராஜன் ஸ்தபதி, 102 வயதின் தொடக்கம் வரை அந்தப்பணிகளில் இருந்து பின்வாங்கவே இல்லை. அண்மையில் நாம் அவரைச் சந்தித்த போதுகூட, “வயது என்பது வெறுமனே எண் தான்” என உற்சாகம் ததும்பப் பேசினார்.

“முதல்ல இரும்பு பட்டறையில் வேலை பார்த்தேன். என் அப்பாவும் கூட இரும்பு பட்டறைதான் வைச்சுருந்தாரு. சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்துச்சு. இரும்பு அடிக்குற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு பழமொழி சொல்லுவாங்களே.. அது எனக்கு நல்லாவே பொருந்தும். இயல்பிலேயே இருந்த, ஓவியக் கலை ஆர்வத்தால, இது நமக்கான வேலை இல்லைன்னு தோணுச்சு. தொடர்ச்சியா அதுல இருந்து மர வேலைப்பாடு நுட்பங்களை கத்துக்க, என் ஜாகையை மாத்துனேன்.

வில் வண்டி, மாட்டு வண்டி, கொத்து வேலைப்பாடுன்னு நாள்கள் போச்சு. அதுலயும் திருப்திபட்டுக்கல. செட்டிநாட்டுல வீடுகளை பார்த்துருக்கியா மக்கா? அவுக நல்ல ரசனைக்கார மக்களாக்கும். 20 வயசுலயே காரைக்குடி போயிட்டேன். அங்க வீட்டு உபயோகப் பொருள்கள் தொடங்கி, வீட்டு உள் அலங்கார பொருள்கள் வரை செஞ்சு கொடுத்தேன். அதுக்கான தேவையும் அந்த ஊர்ல நிறைய இருந்துச்சு. என் அண்ணன் குமாரசாமி ஸ்தபதி, திருப்பதி தேவஸ்தானத்துல ஸ்தபதியா இருந்தாரு. 1950-ம் வருசம்ன்னு நியாபகம். அவரோட சேர்ந்து திருப்பதியில் சிற்ப இறை பணி செஞ்சேன். திருப்பதி தேர், வாகனம், திருவாச்சின்னு செய்ய உதவியா இருந்தேன். இடையில் கொஞ்ச காலம் தங்கவேலையும் பார்த்தேன்.

1962-ல், மகாபலிபுரம் அரசு சிற்பப் பள்ளியில் துணைவேந்தராக இருந்த கணபதி ஸ்தபதியிடம் கலைக்கூடத்து வாசல் நிலை, தூண்கள் செய்யுறதுன்னு சில காலம் தொழில் செஞ்சேன். தொடர்ந்து குமரி மாவட்டம், மைலாடிக்கு வந்து கற்சிலைகளும் செய்ய ஆரம்பிச்சேன். குமரி இணைப்பு போராட்ட தியாகிகள் மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார் இவர்களுக்கெல்லாம் இன்று நாகர்கோவிலில் இருக்கும் சிலைகள் நான் செய்தது தான். தொடர்ந்து, கண்ணாடி கலைக்கு வந்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியில் ஆண்டவன் உருவத்தை வரைபடமாக வரைந்தும், செதுக்கியும் செய்யும் கலை “ என்றெல்லாம் நமக்கு முன்பொருமுறை பேட்டியளித்திருந்தார் நடராஜன் ஸ்தபதி.

விருதுபெறும் நடராஜன் ஸ்தபதி

நடராஜன் ஸ்தபதிக்கு 97-வது வயதில் தமிழக அரசால், ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது வழங்கப்பட்டது. வயது கூடிக்கொண்டே இருந்தாலும் கலையின் மீது கொண்ட தாகத்தால், தன் வாழ்நாளின் கடைசிக்காலம்வரை கைவினைத் தொழிலையே செய்துவந்த நடராஜனின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, குமரி மாவட்ட கைவினைக் கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

x