என்னைக் கருணைக்கொலை செய்துவிடுங்கள்!


திருநங்கை ஆராதனா

தேனி, பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆராதனா. பள்ளி படிக்கும்போதே திருநங்கையாக மாறிவிட்ட இவர், பல்வேறு சோதனைகளைக் கடந்து படிப்பை முடித்தார். எக்காரணம் கொண்டும் பிச்சையெடுக்கவோ, தவறான வழியில் போகவோ கூடாது என்று அரசு வேலைக்கான முயற்சியில் இறங்கினார். 2018-ல் நீதிமன்ற உத்தரவு பெற்று, 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்றும்கூட, அடுத்தகட்ட தேர்வான உடல் தகுதித் தேர்வுக்கு இவர் அழைக்கப்படவில்லை.

இதனால், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் ஆராதனாவுக்கு காவலர் பணி கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஆராதனா, ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘முன்னாள் முதல் அமைச்சர் முதல் இன்றைய முதல் அமைச்சர் வரையில் பல மனுக்கள் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே பெற்றோராலும், உடன்பிறந்தோராலும், சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட நான் இப்போது அரசாங்கத்தாலும் ஒதுக்கப்படுகிறேன். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எனவே, கருணைகூர்ந்து காவலராக வேண்டும் என்ற எனது கனவை நீங்களாவது நிறைவேற்றித்தர வேண்டும் என்று தங்கள் பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் தயவுசெய்து எனது இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து, என்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இவர் ஏற்கெனவே, ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x