இசைவலம்: குஜராத் கிராமிய இசையின் குளிர்ச்சி!


ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசம் இருப்பது போலத்தான், ஒவ்வொரு பிராந்தியத்துக்கான இசை வடிவத்துக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். எண்ணற்ற கிளை நதிகளின் மகா சங்கமம்தான் இசை எனும் கடல். சில நாட்களுக்கு முன்பு, மாலை நேரச் செய்தியின் ஊடாக ஒரு தொலைக்காட்சியில் வெளியான காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு மேடையில் பாடகி ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார். அவரின் பாடலில் கரைந்த ரசிகர் கூட்டம், அவர் மீது ரூபாய் நோட்டுகளை பறக்கவிடுகின்றனர். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.

ஒரு ரசிகர் பெரிய அண்டா முழுதும் இருக்கும் ரூபாய் நோட்டுகளை அப்படியே அந்தப் பாடகியின் மீது கவிழ்க்கிறார். கரன்ஸி மழையில் நனையும் கானக் குயில், சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், ஹார்மோனியத்தின் மீதுள்ள பணக்குவியலை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் பாடலை, விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார். வட இந்தியர்களின் திருமண விழாக்கள், இசை நிகழ்ச்சிகளில் கலைஞர்களை உற்சாகப்படுத்த இப்படி ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது புதிதில்லைதான். ஆனால், அந்தப் பாடகிக்கு நடப்பது போன்ற கரன்ஸி அபிஷேகத்தை நாம் பார்த்தது இல்லை. அந்தப் பாடகி யாராக இருக்கும் என்று தேடிக் கண்டுபிடித்தோம்.

அவர் பெயர் ஊர்வசி ரதாதியா. குஜராத்தின் கிராமியப் பாடகி! எந்தப் பாடலுக்காக இப்படியொரு கரன்ஸி மழையால் அவர் நனைந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், எங்கோ ஒரு கிராமத்தில் பாடிக் கொண்டிருந்தாலும் அவரின் இசை முயற்சிகளுக்கென்றே ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்துவது எவ்வளவு முனைப்பான விஷயம்!

அண்மையில் அவர் பாடி வெளியிட்டிருக்கும் கிராமியப் பாடலிலும் கிராமிய மணத்தோடு பெண்களின் முன்னேற்றமும் பாடுபொருளாகியிருக்கிறது. கிராமத்தின் பல வகைப்பட்ட நிலப்பரப்புகள் கண்காட்சி அனுபவத்தைத் தருகின்றன. ஊர்வசியின் குரலில் இருக்கும் குளிர்ச்சி தனி சுகம்!

குறைந்த ஸ்தாயியில் தொடங்கும் ஊர்வசியின் குரல், படிப்படியாகப் பயணப்பட்டு உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும்போது, விமானத்தின் டேக் ஆஃப்தான் நினைவுக்கு வருகிறது.

இசை விமானத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற:

https://www.youtube.com/watch?v=vHj_73qUvJs

விளையாட இது நேரமா?

அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum) எனும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதைப் பெற்றவர் டி.என்.பாலசுப்ரமணியன் (இசை உலகில் டி.என்.பாலா). இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர், தமிழர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு. இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் ‘முருகப் பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான். அப்படிப்பட்ட பாலா, முருகனின் அருளைப்பெற எழுதியதுதான் ‘விளையாட இது நேரமா?’ எனும் பாடல்.

மதுரை மணி அய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர் பாலா. ‘இறைவனே உன்னிடம் என்னுடைய வினைப் பயனைக் கூறி, அதிலிருந்து என்னை விடுவிக்க உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன். நீயோ என்மீது பாராமுகமாய் இருக்கிறாயே’ என்ற வேதனையோடு முருகனை வேண்டும் தொனியில், இவர் எழுதிய பாடல் இது. இந்தப் பாடலை கர்னாடக இசை மேடைகளில் பட்டிதொட்டி எங்கும் பாடிப் பிரபலப்படுத்தியவர் மகாராஜபுரம் சந்தானம்.

மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் பாலாவுக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்னாடக இசைத் துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக, 1994-ல் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

முருகனைப் போற்றிப் பாடும் இந்தப் பாடலை, ஷண்முகப்ரியா ராகத்திலேயே பாலா வெகுசிறப்பாக அமைத்திருப்பார். இந்தப் பாடலை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஸ்ருதி தன்னுடைய இனிமையான குரலில் மிதமான இசைச் சேர்ப்புடன் பாடியிருக்கும் காணொலி இது.

https://www.youtube.com/watch?v=7q-ehOZRPOc

மரபை மறக்காத நவீனம்!

கடந்த வாரம், இசைவலத்தில் நாம் குறிப்பிட்ட கன்னடப் பாடலான ‘சோஜுகடா சூஜு மல்லிகே மாதேவா’ பாடலைத் தமிழிலும் மொழிபெயர்த்து ஒரு ஆல்பத்தை சில இளைஞர்கள் வெளியிட்டுள்ளனர். ‘மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே’ என்று நெருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் தமிழில் பாடலை எழுதியிருக்கிறார் விவேக் ரவிச்சந்திரன். எலக்ட்ரானிக் இசையின் துணையோடு ஒலியின் துல்லியம் இசையை அங்குலம் அங்குலமாக ரசிக்கவைக்கிறது. பாடலை இசையமைத்துப் பாடியிருப்பதோடு, பாடலுக்கான காட்சியிலும் தோன்றி அசத்தியிருக்கிறார் குணா பாலசுப்பிரமணியன். இன்னொரு நல்ல விஷயம் பாடலுக்கான நதிமூலத்தையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பாடலின் மூலமான ‘சோஜுகடா’, கன்னடத்தின் பாரம்பரியமாகப் பாடப்பட்டுவரும் ஜனபடா கீதங்களு பாடல்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இளைஞர்கள் மரபார்ந்த விஷயங்களில் நவீனத்தின் வர்ணத்தைப் பூசட்டும். அது அவர்களின் உரிமை. அதேசமயம், மரபின் பெருமையைக் காப்பாற்றுவதும் தகுந்த இடத்தில் நினைவுகூர்வதும் முக்கியம். அப்போதுதான் கலைகளின் கண்ணி காப்பாற்றப்படும்.

நவீன வடிவில் மரபை ரசிக்க:

https://www.youtube.com/watch?v=JMYeOY9SDh0

பக்தியைப் பரப்பும் பாவை!

அம்பாளை உபாசனை செய்வதென்பதே பக்திநெறியில் மிகவும் முக்கியமான அம்சம். அம்பாளின் அம்சங்கள் பலவும் ஒன்றிணைந்து ஏகனைத் துதிக்கும் தத்துவமும் பக்திநெறியில் மிக முக்கியமான அம்சம். மனோன்மணி, சேட்டை, வாமை, சர்வ பூததமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்ரி, வாமை ஆகியோர் நவசக்திகளின் அம்சங்கள். ஈரேழு லோகத்திலும் அருட்செயல்களைப் புரியும் நவசக்திகளின் அம்சம் ஒன்றிணைந்து சிவனைத் துதிக்கும் தத்துவத்தை உள்ளடக்கியது, திருவெம்பாவையின் பாடல்கள்.

எம்.எல்.வசந்தகுமாரி திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி ஒரு ராஜபாதையையே போட்டுக்கொடுத்துள்ளார். அந்தப் பாதையிலேயே, இன்றைக்குக் கர்னாடக இசை உலகில் புகழ் வீசும் இளம் பாடகிகள் பாடிப் பயணப்பட்டிருக்கின்றனர். சுசித்ரா பாலசுப்பிரமணியம், வினயா கார்த்திக், சைந்தவி பிரகாஷ், வித்யா கல்யாணராமன் ஆகிய கர்னாடக இசைக் கலைஞர்கள் ‘ராகமாலிகா’ தொலைக்காட்சிக்காக திருவெம்பாவை பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட திருவெம்பாவைப் பாடல்கள், 4 பெண்களின் ஒத்திசைவான குரலில் தம்புராவின் ரீங்காரத்துடன் கேட்கும்போது, காற்றின் வழியாக பக்தி நம் மனத்துள் தவழ்கிறது. தீயாடும் கூத்தன், ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம் என்று பலவாறு இறைவனைத் துதிக்கும் இந்தத் திருவெம்பாவைப் பாடல்களில் பக்திக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், மொழியின் செழுமைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். நேர்த்தியான உச்சரிப்பில் கேட்பவரை ஏகாந்தமான பரவசத்துக்கு உட்படுத்தும் சிறப்போடு வெளிவந்திருக்கிறது இப்பாடல்!

திருவெம்பாவைக் காணொலியைக் காண:

https://www.youtube.com/watch?v=aVWW-YNLjz8

x