ஜெய் பீமும் எழுத்தாளர்களின் சாதி அரசியலும்!


‘ஜெய் பீம்’ திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சையில் எழுத்தாளர்களும் அகப்பட்டுக்கொண்டது அபத்தமானது. அதுவும் சாதி அரசியலில் அவர்கள் சிக்கிக்கொண்டது இலக்கிய உலகின் மாபெரும் சறுக்கல். தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை எழுத்தாளர்களிடையே சாதி அரசியல் என்பது புதிய விஷயம் இல்லையென்றாலும், திரைப்படம் சார்ந்து அவர்கள் விமர்சிக்கப்படுவது நானறிந்தவரை இதுவே முதல் முறை. இலக்கியம் ஒரு மகத்தான சமூகப் பண்பாட்டு வெளி என்பது இங்கு மறக்கடிக்கப்பட்டு, வெறுமனே சாதி அடையாள அரசியலுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான போக்கல்ல.

இன்றைய இலக்கிய உலகம், சிற்றிதழ் உலகமாக இருந்த 90-கள் காலகட்டத்தில் இலக்கிய உலகம் பெரும்பாலும் அறம் சார்ந்திருந்தது. வணிக எழுத்து, தீவிர எழுத்து என்ற பிரிவினை அப்போது இருந்தது. அறமற்ற வணிக எழுத்திலிருந்து தீவிர சிற்றிதழ் உலகம் வேறுபட்டிருந்தது. பல எழுத்தாளர்கள் தங்களை வருத்திக்கொண்டு எழுதினார்கள். அப்போது படைப்பு என்பது நேர்மை சார்ந்த அற மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் சிற்றிதழ்களுக்கான வாசகப் பரப்பும் குறுகியதாக இருந்தது. எனினும் அதற்குள் ஒரு தீவிரத் தன்மை இருந்தது. அந்த வாசகர்களில் பலபேர் கூர்மையானவர்களாக இருந்தார்கள். வெகுஜன இதழ்கள் அன்றைய காலகட்டத்தில் சிற்றிதழ்களையும் அதன் எழுத்தாளர்களையும், சில விதிவிலக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் கண்டுகொள்ளவில்லை. மேலும் அன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்கள் மிக வெளிப்படையாக சாதி சார்ந்து தங்களை அடையாளப்படுத்தத் தயங்கினர். இதன் காரணமாக அம்பலப்படுவதின் மூலம் தாங்கள் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சியதே அதற்குக் காரணம். காலத்தின் நகர்வில் குறிப்பிட்ட கட்டத்தில் அந்த உணர்வு மெல்ல மேலெழத் தொடங்கியது.

சக எழுத்தாளர்களிடம் உங்கள் சாதி என்ன என்று வெளிப்படையாகக் கேட்பது, இந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் தங்கள் சாதியைச் சேர்ந்தவராக இருக்க மாட்டாரா என்ற அகமனம் சார்ந்த எதிர்பார்ப்பு எல்லாம் சிலரிடம் நிலவுகிறது.

தமிழ் சிற்றிதழ் உலகம் புத்தாயிரத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல அதன் தீவிரத்தையும், அறத்தையும் இழக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் குறுகிய வட்டத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த சிற்றிதழ் எழுத்தாளர்கள் மீதும், அவர்களின் புத்தகங்கள் மீதும் பரவலான வாசக கவனம் படர்ந்தது. வெகுஜன பத்திரிகைகள் பல எழுத்தாளர்களுக்கு இடமளிக்க தொடங்கின. இன்னும் சிலர் சினிமாவுக்குக் கதை, வசனம் எழுத ஆரம்பித்தனர். ஒருவகையில் இது அவர்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரமாக இருந்தபோதும், மற்றொரு வகையில் சமரசமாக்கலாக இருந்தது. அதன் தொடர்ச்சியே தற்போதைய இலக்கிய உலகில் வெளிப்படையான சாதி அரசியல் நிலவக் காரணம்.

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் அடையாள அரசியலுக்கு உட்படுத்தப்படக் கூடாதா என்ற விவாதம், காலம் முழுக்க நடந்துவருகிறது. குறிப்பாக, தலித் இலக்கியம் எழுச்சி பெற்ற 90-களிலிருந்தே இந்தக் கேள்வி எழுந்துவிட்டது. எழுத்து என்பது சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்பு. அதை அடையாளம் சார்ந்து இடஒதுக்கீட்டுக்கு உட்படுத்தக்கூடாது என்ற ஒரு தரப்பு விவாதமும், இல்லை அது விளிம்புநிலை மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்ற மற்றொரு தரப்பு விவாதமும் நிலவின. இதன் தொடர்ச்சியில் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னெடுப்பில் ‘படைப்பாளிகள் பேரவை’ என்ற இலக்கிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் இணைந்தனர். சிலர் இணைந்த வேகத்தில் வெளியே வந்தனர். அப்போது அது தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பின்னர் அப்படியே அமுங்கியது.

தமிழ் சிற்றிதழ் உலகின் வெகுஜனமயமாக்கலுக்குப் பிறகு, எழுத்தாளர்களிடையே பிழைப்புவாதம் அதிகரித்திருக்கிறது எனலாம். இது எவ்வித அறமற்ற சமரசத்துக்குப் பலரை ஆட்படுத்தி இருக்கிறது. இது அவர்களின் வரிகளுக்கும் மனோபாவத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்ற நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக, பலர் கடந்த பல வருடங்களாக வெளிப்படையாகவே சாதி அரசியல் செய்யும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இது சக எழுத்தாளர்களின் சாதியை, மதத்தைச் சார்ந்து படைப்புகளை அங்கீகரிக்கும், முன்னிலைப்படுத்தும் இழிவான நிலைக்கு எழுத்துலகை ஆட்படுத்தி இருக்கிறது. அளவுக்கதிகமான சுயமோகமும், புகழ்போதையும் பல எழுத்தாளர்களை, சமரசத்தின் எந்த எல்லைக்கும் கொண்டு செல்கிறது. இதன் காரணமாக பலர் வெளிப்படையாக சாதி/மத அரசியல் செய்யும் நிலைக்குச் செல்கிறார்கள். சக எழுத்தாளர்களிடம் உங்கள் சாதி என்ன என்று வெளிப்படையாகக் கேட்பது, இந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் தங்கள் சாதியைச் சேர்ந்தவராக இருக்க மாட்டாரா என்ற அகமனம் சார்ந்த எதிர்பார்ப்பு எல்லாம் இவர்களிடையே நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியில் புதுச்சேரியைச் சார்ந்த முக்கிய எழுத்தாளர் என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல், இதற்கான ஆச்சரியமற்ற முன்னுதாரணம். அதாவது, புதுச்சேரியில் தமிழின் பழைய பிரபல கவிஞர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் அந்த எழுத்தாளர். எழுத்தாளர்களின் இயல்பான டீக்கடை உரையாடலில், எழுத்தாளரின் சாதி என்ன என்பதை அறிந்துகொள்வதில் கவிஞருக்கு திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அதை அறியும் பொருட்டு மறைமுகமாக அந்த எழுத்தாள நண்பரிடம், “நீங்க நம்ம ஆள் தானே?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த எழுத்தாளர், “நான் சத்தியமாக உங்க ஆள் இல்லை” என்றிருக்கிறார். இதைக் கேட்டவுடன் அந்த பழைய கவிஞருக்கு, குழந்தையின் வாயில் இருந்து குச்சி மிட்டாயைப் பிடுங்குவது மாதிரி முகம் மாறி இருக்கிறது. இது மாதிரியான உதாரணங்களை, தமிழ்ச்சூழலில் பரவலாகக் காண முடியும்.

சில நேரங்களில் சாதி சார்ந்து எழுத்து அணுகப்படும் சூழலில், மத அடையாளம் சார்ந்து மறுக்கப்படும் சூழலும் இங்கு நிலவுகிறது. குறிப்பாக முஸ்லிம் பெயர்களில் பொதுவெளிக்கு எழுத வருபவர்கள், சில நேரங்களில் அடையாளம் சார்ந்த அங்கீகார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனக்கும் சில தருணங்களில் இம்மாதிரியான கசப்பான, நெருடலான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. சில நேரங்களில் சாதி போன்றே இவர்கள் சிலரிடம் அடிப்படைவாதம் வெளிப்படும் சூழலும் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் அதற்கு அப்பால் இயங்குபவர்களுக்குக்கூட தமிழ் இலக்கிய உலகம் அங்கீகாரம் தர மறுக்கிறது. அடையாளம் சார்ந்து இது வெறும் முஸ்லிம் படைப்பு என்ற புறக்கணிப்பும் நிகழ்கிறது. இது மறைந்த கவிஞர் இன்குலாப் விஷயத்தில் ஒரு தடவை வெளிப்பட்டது. இன்குலாப் கவிஞரா இல்லையா என்பதை தாண்டி, அவர் மத அடையாளத்தை நிராகரித்து பொதுவெளியில் தீவிரமாக இயங்கியவர். புரட்சிகர இயக்கங்களில் உயிரோட்டமாகச் செயல்பட்டவர். அவருக்குச் சில வருடங்களுக்கு முன்பு சாகித்ய அகாடமி வழங்கலாம் என்ற பரிந்துரை அகாடமியில் வந்தபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த தமிழின் பிரபல எழுத்தாளர் ஒருவர் குரலை உயர்த்திப்பேசி அதை வேறொரு எழுத்தாளருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி, அந்த ஆண்டு அவர் பரிந்துரைத்த எழுத்தாளருக்கே சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அப்புறமாகத்தான் விருதுபெற்ற எழுத்தாளரும் பரிந்துரைத்த எழுத்தாளரும் ஒரே சாதி என்ற உண்மை வெளிப்பட்டது. இந்தப் பரிந்துரை எதேச்சையான, எழுத்து சார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரை அல்ல. காரணம் அந்த எழுத்தாளரும் சில குறிப்பிட்ட நேரங்களில் சாதி அரசியல் செய்தவரே. தமிழ் இலக்கிய உலகம் சாதி ரீதியாக எவ்வாறு திரட்சி பெற்றுவருகிறது என்பதை, இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

“எந்த மொழி சார்ந்து இயங்கும் ஓர் எழுத்தாளரின் எழுத்து என்பது சமூகத்தின் திசை நோக்கி வளையக் கூடாது” என்றார் பிரபல எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ. ஆக, எழுத்து என்பது சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக, பண்பாட்டு வளமையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். வெறுமனே வரிகளை நீட்டி பக்கங்களை நிரப்புவதாக இருக்கக் கூடாது. மேலும் எந்த எழுத்தாளரும் தன் எழுத்து சார்ந்து சமூகத்தின் அதிகார மையத்திடம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அதற்கு அவர் சாதி, மத அடையாளங்களுக்கு அப்பால் இயங்க வேண்டும். அது மட்டுமே எழுத்தாளருக்கு நீடித்த அங்கீகாரத்தையும், வீச்சையும் கொடுக்கும். எழுத்தின் இந்த இயல்பான விதிகளுக்கு, தமிழ் இலக்கிய உலகமும், அதன் எழுத்தாளர்களும் உட்பட வேண்டும். தான் சார்ந்த சாதி மற்றும் மத அடையாளங்கள் பிறப்பு சார்ந்து எழுத்தாளரிடம் ஒட்டிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் எழுத்து வெளி என்று வரும்போது அதைக் கடக்க முயற்சிக்க வேண்டும். மேலும் தான் சார்ந்த சமூகத்தின் துயரத்தை, வலியை எழுத்தில் பதிவு செய்வதும் தவறில்லை. அது அவசியமானதும்கூட.

ஆனால் அநீதியின், அடக்குமுறையின் பக்கம் நின்றுகொண்டு அதையே தன்வயப்படுத்த முயற்சிப்பதுதான் இங்கு பிரச்சினையே. அது தமிழ் இலக்கிய உலகுக்கும், சமூகத்துக்கும் மிகப்பெரும் சறுக்கலாகும். தமிழ் எழுத்தாளர்கள் இதை உணர்ந்துகொள்வது நல்லது!

- எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். தொடர்புக்கு: peerzeena@gmail.com

x