கன்னியாகுமரியில் கோடை சீசனின் 3.84 லட்சம் பேர் படகு பயணம்!


கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்காக படகில் செல்ல காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனையொட்டி, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் முக்கடல் சங்கமம் கடற்கரையில் ஏராளமானோர் திரண்டு சூரியன் உதய காட்சியை பார்த்து ரசித்தனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, மற்றும் கடற்கரை பகுதிகளை பார்வைிட்டனர். பாரத மாதா கோவில், ராமாயண தரிசன கண்காட்சி கூடம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த இரண்டரை மாதங்களில் 3 லட்சத்து 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கடலில் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளும். கோடை விடுமுறை சீசன் முடிந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டு உள்ளனர். கோடை விடுமுறை சீசனின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.