லென்ஸ் சிமிட்டும் நேரம் - 17


லால்பாக்கில்...

பெங்களூரு நகரின் லால்பாக்கில் வருடந்தோறும் நடத்தப்படும் மலர் கண்காட்சியில், நான் எடுத்த புன்னகைப் பூக்களின் புகைப்படங்களோடு இன்று உங்களைச் சந்திக்கிறேன்.

அதற்கு முன்னதாக, லால்பாக் பற்றியும் அங்கு நடத்தப்படும் மலர் கண்காட்சி பற்றியும் ஓர் சிறிய அறிமுகம்.

லால்பாக், ஹைதர் அலி காலத்தில் திட்டமிடப்பட்டு அவரது மகன் திப்பு சுல்தான் காலத்தில் நிறைவுபெற்ற அழகான தோட்டம். இது, பெங்களூரு நகரின் தெற்கில் 270 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. பல அரிய வகை மரம் செடி கொடிகளுடன், கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதற்குள் ஒரு சிறிய ஏரியும் உண்டு. அதுதான் இங்குவரும் பல அரிய வகை பறவைகளுக்கு புகலிடம்.

குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை இந்த மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். பெங்களூரு மற்றும் மைசூர் தோட்டக்கலைத் துறையினர் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு, இங்குள்ள கண்ணாடி மாளிகையில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களைப் போன்று வடிவமைப்பார்கள். வெவ்வேறு நாடுகளிலிருந்தும் விதவிதமான மலர்களைக் கொண்டுவந்தும் இங்கு காட்சிப்படுத்துவார்கள். ஊட்டி, சிக்கிம் முதலான இந்திய நகரங்களிலிருக்கும் மலர்களும் இங்கு காட்சிப்படுத்தப்படும்.

ஒரு முறை, இப்பொழுது அதிகம் பேசப்படும் Vertical garden எனப்படும் செங்குத்துத் தோட்டமும் கண்காட்சியில் இடம்பிடித்தது. நகரமயமாக்கலின் காரணமாக எல்லோரும் அடுக்குமாடிகளில் குடியேறுகின்றனர். அவர்களால், இடப்பற்றாக்குறை காரணமாக தோட்டம் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. அவர்கள் குறைவான இடத்திலும் தோட்டம் வைத்துக்கொள்ளும் விதமாக இருக்கிறது இந்த செங்குத்துத் தோட்டம்.

வீட்டில் பூக்கும் பூக்களை படமெடுத்து அலுத்துவிடும் நேரங்களில், லால்பாக் தான் எனக்கு அதிகமாக உதவி இருக்கிறது. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஓர் இடம் எனில், அது லால்பாக் தான். அதுவும் மலர் கண்காட்சி நேரங்களில் சொல்லவே வேண்டாம். பல வகையான அழகழகான பூக்களைப் படமெடுத்துக் கொண்டு வந்து, அதை ரசித்து ரசித்துப் பிராசஸ் செய்தால் நேரம் போவதே தெரியாது.

கரோனா முடக்கத்தால் கடந்த 2 வருடங்களாக லால்பாக்கில் மலர் கண்காட்சி தடைபட்டுக் கிடக்கிறது. இந்த வருடம் மலர் கண்காட்சி நடக்கும் என்ற செய்தி, அண்மையில் வெளியானபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

x