மழைக்குத் தப்பிய மரபு நெல் ரகங்கள்!


மழைநீரில் பாதிக்காத பாரம்பரிய நெல் பயிர்

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழைக்கு, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதைப் பார்த்து விவசாயிகள் கதறுவதை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இளம்பயிராக இருப்பதால், இந்த மழைக்குத் தாங்காமல் அழுகிப்போயிருக்கின்றன. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீரிலேயே இருந்ததால் தாக்குப்பிடிக்க இயலாமல் அழுகியிருக்கின்றன. தண்ணீர் வடிந்து வயலை நன்றாகக் காயவைத்த பிறகுதான், அந்தப் பயிர்கள் முழுமையாகத் துளிர்த்துவரும். ஆனாலும் அவற்றின் பயன் முழுமையான அளவில் இருக்காது என்றே கவலையுடன் சொல்கிறார்கள் விவசாயிகள்.

தண்ணீர் வடிந்த பிறகும் வாடாத பயிர்

நெல் ஆராய்ச்சி நிலையங்களில் கண்டறியப்படும் நவீன உயர் ரக நெல் ரகங்களைத்தான், இப்போது நம் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அவற்றுக்குச் சரியான தட்பவெப்பநிலை தேவைப்படுகிறது. அதைத் தாண்டி கடும் வறட்சியோ, கனமழையோ இருந்தால், அப்பயிர்கள் வீணாகி விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

மழை ஒரு பொருட்டல்ல!

ஆனால், நமது முன்னோர்கள் பயிரிட்டுவந்த நம் மரபு நெல்கள் இப்படி அழிவைச் சந்திப்பதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார்கள், அவற்றைத் தற்போதும் பயிரிடும் பாரம்பரிய விவசாயிகள். இப்போது பெய்த, பெய்துகொண்டிருக்கும் இந்தப் பெருமழையால் தங்களுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று தங்கள் வயலை உதாரணம் காட்டி உரக்கச் சொல்கிறார்கள் அவர்கள். அவை, எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்போதும் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.

உதாரணமாக, மயிலாடுதுறை அருகே மேலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்.குணசேகரன், 50 ஏக்கருக்கும் மேலாகப் பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு வருகிறார். ‘இங்கெல்லாம் மழை பெய்ததா என்ன?’ என்று கேட்கும் அளவுக்கு, இவரது வயலில் உள்ள பயிர்கள் பாதிப்பு ஏதுமின்றி மிக ஊட்டமாக இருக்கின்றன.

கிச்சிலி சம்பா வயலில் குணசேகரன்

இது குறித்துப் பேசிய குணசேகரன், ’’நாங்கள் பல வருடங்களாகவே நம்முடைய மரபு நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு வருகிறோம். கிச்சிலி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுணி என் மக்கள் அதிகம் விரும்பும் ரகங்களைப் பயிர்செய்து வருகிறோம். இந்த ரகங்களுக்கு அதிகத் தண்ணீரும் தேவையில்லை, அதிக வறட்சியாக இருந்தாலும் தாங்கிக் கொள்ளக்கூடியவை. அதனால் எதைப் பற்றியும் கவலைகொள்ளத் தேவையில்லை. நாங்கள் செயற்கை உரங்களையும் பயன்படுத்துவதில்லை. அதனால் மண்ணும் வீணாகாமல் நல்ல ஊட்டமாக இருக்கிறது.

இந்த முறை கருப்புக் கவுணியை நட்டுக்கொண்டிருக்கும்போதே நல்ல மழை ஆரம்பித்துவிட்டது. மழையோடு மழையாகத்தான் நட்டு முடித்தோம். ஒரு வாரம் வரைக்கும் பயிர்கள் மூழ்கியிருந்தன. பிறகுதான் தண்ணீரை வடிய வைத்தோம். ஆனாலும் மழையின் பாதிப்பு கொஞ்சம்கூட இல்லை... நீங்களே பாருங்கள்” என்று கருப்புக் கவுணியை நோக்கி கைநீட்டினார். அங்கே கருப்புக் கவுணி மட்டுமில்லாமல் பல்வேறு ரகங்களும், ‘நாங்க மிகவும் பலமானவர்களாக்கும்’ என்றபடி பச்சைப்போர்வை விரித்தன.

கருப்புக் கவுணி பயிர்கள்

நம்மாழ்வார்

மீட்டெடுக்கப்பட்ட இயற்கை விவசாயம்

ஒருகாலத்தில், தமிழகத்தில் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்திருப்பதாகப் பல தரவுகள் சொல்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, 450-க்கும் மேற்பட்ட ரகங்கள் நம் விவசாயிகளிடம் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவற்றை வழிவழியாக விவசாயிகள் பயிரிட்டும், பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள். பசுமைப்புரட்சிக்குப் பிறகே அந்த ரகங்கள் வழக்கத்திலிருந்து மறையத்தொடங்கின. புதிய சன்ன ரகங்கள் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதுவரையிலும் மாட்டுச் சாணம், ஆட்டுக்கிடை, அடுப்புச்சாம்பல், இலைதழைகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்துவந்த தமிழக விவசாயிகள், புதிய ரகங்களில் அதிக மகசூலை எடுக்கலாம் என ஆசை காட்டப்பட்டதால், செயற்கை உரங்களுக்கு மாறத்தொடங்கினார்கள். அதனால் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டது. அதற்காக, கடுமையான விஷம் கொண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த பணிக்கப்பட்டார்கள். இதனால் மண்ணும் நாசமாகி, மனிதர்களும் நோயின் பிடியில் வீழ்ந்தனர்.

இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்த்துணர்ந்த வேளாண் துறை அதிகாரி நம்மாழ்வார், இதிலிருந்து நம் விவசாயிகளை மீட்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அரசாங்க வேலையை உதறிவிட்டு, இயற்கை வழியை முன்னிறுத்தி விவசாயிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். அவரது இடைவிடாத முயற்சியின் காரணமாக, விவசாயிகள் ஒருசிலர் அவரோடு கரம் கோத்தார்கள். இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு நவீன ரகங்கள் ஒத்துவராது என்று ஒதுக்கித்தள்ளிய நம்மாழ்வார், நமது பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிப்போனார். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

கிச்சிலி சம்பா கோவிந்தராஜ் வயல்

நெல் ஜெயராமன்

‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் தொடங்கப்பட்டது. கட்டிமேடு ஜெயராமன் வசம் அப்பணியை நம்மாழ்வார் ஒப்படைத்தார். பாரம்பரிய ரக விதைகள் எங்கே இருக்கின்றன என்று தேடித்தேடி சேகரிக்கத் தொடங்கியபோது ஜெயராமனுக்கு ஏற்பட்ட ஆர்வம், 173 ரகங்களை மீட்டெடுக்கச் செய்தது. கட்டிமேடு ஜெயராமன் ’நெல் ஜெயராமன்’ ஆனார். நெல் திருவிழாவை நடத்தி, 2 கிலோ பாரம்பரிய விதை நெல்லை அவர் இலவசமாகத் தந்தபோதுதான், பாரம்பரிய நெல்லின் மகத்துவம் இதர விவசாயிகளுக்கும் புரிய ஆரம்பித்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஜெயராமனின் பரிந்துரையால் பயிரிடப்பட்ட பூங்கார் ரகம் விவசாயிகளிடம் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

பாரம்பரியத்தின் மகிமை

லாபம் இல்லை என்கிற முனகலோடு முதலில் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடத் தொடங்கிய விவசாயிகள், தற்போது அந்த ரகங்களுக்கு நல்ல விலை கிடைப்பதையும், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் வரவேற்பையும் பார்த்து வெகு உற்சாகமாகப் பயிரிட்டு வருகின்றனர். பல விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை மதிப்புக்கூட்டி விற்க கற்றுக்கொண்டுவிட்டனர். அதனால் நல்ல லாபத்தையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சு எழவில்லை.

தனது வயலில் கோவிந்தராஜ்

சீர்காழி அருகே நெப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தராஜ், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு லாபம் பார்த்துவருபவர்களில் ஒருவர். படித்துவிட்டு மற்ற வேலைக்குப் போகாமல் இயற்கை விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

’’இந்தப் பகுதியில் சில விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டதைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. எந்தவித உரமும் போடாமலே அவை ஆளுயரம் வளர்கின்றன. மழை, புயல் என்று எல்லாவற்றையும் தாங்கி அசராமல் நிற்கின்றன. அதனால் நாமும் அதையே பயிரிடலாம் என்று முடிவெடுத்து முதலில் ஒரு ஏக்கரில் நட்டேன். இப்போது 50 ஏக்கருக்கும் மேலாக இந்தப் பாரம்பரிய ரகங்களைத்தான் நடவு செய்கிறேன். பத்துக்கும் மேற்பட்ட ரகங்களைப் பயிரிடுகிறேன். என்னைப் பார்த்து இந்தப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடுகிறார்கள்.

மழையில் அழிந்தது, தண்ணீரில்லாமல் கருகியது என்ற பேச்சே கிடையாது. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் திறன் படைத்த இந்தப் பயிர்கள், எப்போதுமே விவசாயிகளைக் கைவிடாது. எந்த வருடமும் நஷ்டத்தையும் ஏற்படுத்தாது. உரம் போட வேண்டியதில்லை, பூச்சிமருந்து அடிக்க வேண்டியதில்லை, நேரடி விதைப்போ, நடவோ செய்துவிட்டால் போதும். அது தானாகவே வளர்ந்துவிடுகிறது. ஏக்கருக்கு 25 மூட்டைகளுக்குக் குறையாமல் கிடைக்கும். நவீன ரகங்கள் ஒரு மூட்டை 1,100 ரூபாய் என விற்கப்படுகின்றன என்றால், இதை 1,500 முதல் 1,800 ரூபாய் வரை விற்க முடியும். அதனால் நஷ்டம் என்ற பேச்சே கிடையாது. நெல்லை அப்படியே விற்காமல் அரிசியாக்கி விற்றால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கோவிந்தராஜ்.

கருப்புக்கவுணி கோவிந்தராஜ் வயல்

ஆரோக்கியமான மாற்றம்

விவசாயிகளுக்குப் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நமது பாரம்பரிய நெல் ரகங்கள், நுகர்வோரிடமும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. புதிய சன்ன ரக அரிசி, கிலோ ரூ.40-க்கு கிடைத்தாலும், பாரம்பரிய ரகமான மாப்பிள்ளைச் சம்பாவையும், கருப்புக் கவுணியையும், கிச்சிலி சம்பாவையும் தேடிப்போய் ரூ.100 விலை கொடுத்து வாங்கி உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் இருக்கும் மருத்துவக் குணங்கள் மற்றும் பயன்கள் அவர்களை அந்த ரகங்களின் பக்கம் திருப்பியிருக்கின்றன. தமிழகத்தின் பிரபல உணவகங்களில், பாசுமதிக்குப் பதிலாக சீரக சம்பா அரிசியில் பிரியாணி தயாராகிறது. சிறுதானியங்களும், நாட்டுச் சர்க்கரையும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆச்சரியகரமான மாற்றங்கள் நடக்கின்றன. அவை ஆரோக்கியத்துக்கான மாற்றங்கள்... தொடரட்டும்!

பாரம்பரிய அரிசி ரகங்கள்

பெட்டிச் செய்தி

பாரம்பரிய அரிசி ரகங்கள் சிலவற்றின் மருத்துவப் பயன்கள்:

குடைவாழை – குடலைச் சுத்தப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும்

மிளகுச் சம்பா - பசியைத் தூண்டும், தலைவலியைப் போக்கும்

பிசினி - மாதவிடாய் கோளாறுகள் நீங்கும், சுகப்பிரசவத்துக்கு உதவும், தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கும்.

மாப்பிள்ளைச் சம்பா - எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும், உடல் வலுவைத் தரும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

பூங்கார் - கர்ப்பிணிகளின் உடல் வலுவைக் கூட்டும், சுகப்பிரசவத்துக்கு உதவும்

காட்டுயாணம் - இதன் நீராகாரத்தை ஒரு மண்டலம் உண்டால் உடலின் எந்த நோயிலிருந்தும் மீண்டுவிடலாம். புற்றுநோய் புண்களையும்கூட இந்த அரிசியின் கஞ்சி குணமாக்கும்.

மைசூர் மல்லி – குழந்தைகளுக்கு ஏற்றது. எளிதில் ஜீரணமாகும்.

சிவப்புக் கவுணி – புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம்.

கருடன் சம்பா – சிறுநீர் தொற்றுகளைக் குணப்படுத்தும், உடல் கட்டிகளைக் குணப்படுத்தும், ரத்தசோகையைச் சரிப்படுத்தும்.

சீரகச் சம்பா - புற்றுநோய் வராமல் தடுக்கும், இதயத்தை சீராக்கும், ஆரம்ப நிலையிலுள்ள வாதநோய்களைத் தடுக்கும்.

கருப்புக் கவுணி – ஆண்மை சக்தியை அதிகரிக்கும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும், நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும்.

x