வருது வெயில், குறையுது விலை!


தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த வாரம் முழுக்க காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டது. வழக்கமாக தீபாவளியையொட்டி உயரும் காய்கறி விலை, தீபாவளிக்குப் பிறகு குறையும். ஆனால், இந்த ஆண்டு தொடர்மழை காரணமாக தொடர்ந்து விலை உயர்ந்தே வந்தது.

தக்காளிக்கு மழை ஆகாது. கத்தரி போன்ற பிற காய்கறிகளும்கூட அதிக மழைக்குத் தாக்குப்பிடிக்காது. கத்தரி, முருங்கை, பாகற்காய், பீன்ஸ் போன்றவற்றின் பூக்களும் பிஞ்சுகளும் மழைக்கு உதிர்ந்துவிடும் என்பதால், காய்கறி விலை உயர்ந்தது. தக்காளி விலை மொத்த வியாபாரத்திலேயே ரூ.120-ஐத் தாண்டியது. சில்லறை வியாபாரிகளோ ரூ.150 வரைக்கும் விற்றார்கள்.

இந்தச் சூழலில் கடந்த 2, 3 நாட்களாக தென்மாவட்டங்களில் கொஞ்சம் வெயில் அடிப்பதால், காய்கறி விலை குறைந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ்.முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வெயில் காரணமாக காய்கனி விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருக்கிறது. கடந்தவாரம் 100 ரூபாய்க்கு மேலிருந்த கத்தரி மற்றும் தக்காளி விலை, இப்போது 85, 70 ரூபாயாக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் சில்லறை விற்பனையில், கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் அதிகமாக இருக்கும். இன்னும் 15 நாட்களில் காய்கறிச் செடிகள் மீண்டுவிடும் என்பதால், விலை பழையபடி குறைந்துவிடும் என்று நம்புகிறோம் என்றார்.

இதேபோல, ஒட்டன்சத்திரம், பாவூர்சத்திரம் மார்க்கெட்களிலும் காய்கனி விலை குறைந்துள்ளது.

x