நிழற்சாலை


உடைபட மறுக்கும் குமிழிகள்

காற்றுக்குமிழிகளை உற்பத்திசெய்யும்

நுரைத்த வேதித்திரவம் நிரப்பப்பட்ட

சிறு பிளாஸ்டிக் புட்டியில்

பூதக்கண்ணாடியின் சாயலை ஒத்த

சிறுகோல் கொண்டு நுழைத்தெடுத்து

காற்றை ஊதிவிடுகிறாள்

அச்சிறு மழலை

சூரியக்கதிரின் ஏழு வண்ணம் பூசிக்கொண்டு

சிறிதும் பெரிதென

மெல்லிய கண்ணாடி உடல்வாங்கி

காற்றில் பறக்கின்றன குமிழிகள்

ஒவ்வொன்றாகத் தொட்டுவிட

நுனிக்காலில் நின்றும் குதித்தும் பார்க்கிறாள்

உடைபடும் விநாடிக்குள்

அவளோடு விளையாடிவிட

போக்குக் காட்டி உயர உயரப் பறக்கின்றன

குமிழிகள்

அவளது செல்லக் கோபத்தை ரசித்தபடி!

- நேசன் மகதி

பாடம்

பரட்டைத் தலையுடன்

எதிர்பார்ப்பை அடைகாத்து பேருந்தில்

வயிறுகாட்டி பிஞ்சுவிரல்களில்

கையேந்துகிறான் சிறுவன்

சிலர் கொடுத்த சில்லறையோடு

நடத்துநரின் வசவையும் சுமந்தபடி

அவசரமாய் கடந்துசென்று

பிஸ்கட் வாங்கி...

நடக்கமுடியா தங்கையின்

பசி தீர்க்கையில்

எங்களைப் பார்த்து ஏளனமாய்

சிரிக்கிறார் கடவுள்!

- ஆனந்தகுமார்

இறுதிக் கணங்கள்

அறுந்த வாலின் துள்ளலில்

அடையாளமாகிறது

இதயமற்றும் உயிர் நிலைப்பது!


சக்கையாகும் வரை

பிழிந்துவிட்டு தூக்கி

எறிகையில் கசந்து

விடுகிறது கரும்பின்

வாழ்வு

அன்றுதான் அதன்

கடைசி நாள் என்றறியாமல்

ரசித்துக்கொண்டிருக்கிறேன்

கொஞ்சமாய் இறந்திருக்கிறது

பட்டாம்பூச்சி!

- ரகுநாத் வ

அந்தாதி

தரை விழுந்து துள்ளியெழும்

நீர்த் திவலைக்கு

அதுவே சிறகுகள்

குமிழி ஒன்று உடையுமுன்னே

சிறு நொடிக்குள் பெருமுலகு

ஒவ்வொரு துளியின் உறைதலுக்குள்ளும்

ஓர் உயிர்ப்பின் விண்ணப்பம்

தீராப் பெருங்கருணையை

வானத்திடம்தான்

உணர்கிறது வறண்ட நிலம்

காற்றில் கலையுமந்த கருமேகத்தின்

குறைந்தபட்சக் குளிர்ச்சியையேனும்

வேர்களுக்குக் கடத்திவிடத் தவறுவதில்லை தளிர்கள்

எல்லா முடிவிலிருந்தும்

பிறக்கவே செய்கிறது

ஏதோ ஒரு தொடக்கம்.

- வேலணையூர் ரஜிந்தன்

சமூக ஊடறு உலகம்


விசேஷ வீடு மாதிரிதான் இருக்கிறது

யாரோ உள்ளே நுழையவும்

யாரோ வெளியேறவுமாக

புலனக்குழுக்கள்


பட்டணத்திலிருந்து வாங்கிவந்த

பரிசுப்பொருட்களை நடுக்கூடத்தில் கடை விரிப்பதுபோல்

படங்களும் காட்சிகளும்

தத்துவங்களுமாக உதிர்க்கிறார்கள்

பொறுப்புகளைத் தள்ளிவிடுவது போன்றே

எல்லார்க்கும் எல்லாப் பதிவையும்

தள்ளிவிட்ட களைப்பில்தான்

பலருக்கும் உறக்கமே வருகிறது


ஒரு பத்திரிகை, ஒரு புத்தகம் என

விடாமல் பிடிஎஃப் வழங்கி மகிழும் அவருக்கு

வாசகமணி கனவு தினமும் வருகிறது

‘காசு, பணம், துட்டு, மணி மணி’ பாடலைத்தான்

நிலைச்செய்தியாக வைத்திருக்கிறார்

அந்த வாட்ஸ்-அப்

வர்த்தகத் திலகம்


தானே ரசித்து... தானே சிரித்து

தானே அனுப்பிய நகைச்சுவை என்று நம்பிய

ஒன்றுக்கு

வாய்மூடிய இறுக்க சிரிப்பானுக்கும்

வழியில்லாதபொழுது வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது


என்ன ஜனங்கள்

ஒருத்தருக்கும் சகமனுஷன் மேல

அக்கறையே இல்லை என்று

ஆத்திரமாக ஒரு நிலைத்தகவல் போட்டுவிட்டால்

பாரம் குறையலாம்

- உமா மோகன்

சருகு சரித்திரம்


மரத்திடம் பச்சையத்தை

எதிர்பார்ப்பதில்லை

சருகுகள்.


வேரூன்றிய மண்ணின் மீதே

எப்போதும் கவனம்

சருகுக்கு.


எரிக்கும்போது

எவ்வகை சருகுக்கும்

ஒரே வாசம்தான்.


மரத்திற்குச் சுமையற்று

கிடக்கிறது சருகு.


உதிரும் வரை சருகினை

தாங்கிக்கொள்கிறது மரம்.

சருகு உதிர்ந்ததும்

துளிர்விடுவதன் பெயர்

நம்பிக்கை.


- தி.கலையரசி

நான் எனும் பெயர்


கைப்பேசி நினைவகங்களில்

என் பெயர் விதம்விதமாய்ச்

சேமிக்கப்படலாம்

ஒன்று போலிருக்காது மற்றொன்று

நான் அழைக்கும்போது திரையில்

ஒளிரும் பெயர் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன்

மறுமுனையில்

அழைப்பேற்கப்படும் வரை

பேச நினைத்ததை மறந்து

யோசனையின் குறுகுறுப்பில் ஆழ்ந்துபோகிறேன்

பேசி முடித்தவுடன் ஒன்று

தோன்றுகிறது

என்னை நான்

என்னவென்று அழைப்பது?

- கி.சரஸ்வதி

சுயம் திரும்புதல்


எந்நேரமும் தலைகுனிந்து நடந்து

நிமிடத்துக்கொரு முறை

உடை சரிசெய்து

மென்குரலில் பேசி

பற்கள் தெரிவதற்குள்

சிரிப்பை விழுங்கி

ஆண்கூட்டத்தை அவசரமாய் கடந்து

வாழ்ந்து பழகிய

சாந்தி அக்கா

வருடத்துக்கொரு முறையேனும்

வேப்பிலையோடு

நா துருத்தி

மெய்மறந்து ஆடிக் களித்து

விட்டு விடுதலையாக

அன்றி

வேறெதற்கு

ஊர்வலம் வருகிறது சாமி?

-ந.சிவநேசன்

இழப்பின் வலி


கைகளுக்குக் கிடைத்ததை மட்டும்

வாரி எடுத்துக்கொண்டு வந்த

ஐம்பது குடும்பங்களுக்கு

மூன்று வேளை உணவும்

கொஞ்சம் உடைகளும்

வழங்கப்படுகிறது

தூக்கத்தைத் தொலைத்தும்

கண்ணீரால் நனைந்தும்

மனக்குமுறல்களோடு அனைவரும்

வானத்தையே பார்த்திருந்தனர்

ஓடியாடி விளையாடும்

குழுந்தைகளின் சத்தங்கள்

அங்கு நிலவும் நிசப்தத்தைக்

கலைத்துக்கொண்டிருந்தது

மண்டபத்திற்கு எதிரே ஓடும்

மழைநீரில் கவிழ்ந்து மிதந்தோடும்

காகித கப்பல்களைப் பார்த்து

முகிலன் சொன்னான்

‘இப்படித்தானப்பா நம்ம வீடும்

தண்ணியில மிதந்து போச்சு’ என

நிலவேந்தனின் கண்களிலிருந்து

விழும் ஒவ்வொரு துளிகளிலும்

நிறைந்திருந்தது மீள்வதின் வலி.

- காமராஜ்

இசை தொடும் மனம்


எங்கிருந்தோ அடித்துவரப்பட்ட கூழாங்கல்லை

இன்று பார்த்தேன்

அழகான புன்முறுவலோடு

இசைத்தது அதன் இசையை

நீர்ப் போக்குவரத்தோடு


பார்த்துவிட்டு வந்த பிறகும்

அந்த கூழாங்கல்லின் இசை

ஓடிக்கொண்டேயிருக்கிறது

என் உடல் நதியில்


நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது

மீண்டும் மீண்டும்

ஓர் இடம்பெயர்தல்.

- ப.தனஞ்ஜெயன்

x