பேசிக்கிட்டாங்க...


திருச்சி

உணவகம் ஒன்றில்...

“சார்... கையக் காட்டுங்க.”

“என்னப்பா இது... சானிட்டைஸரா? சோறு போட்டதுக்கு அப்புறம் தர்றீங்க?”

“சார்... இது நெய்! ஸ்பெஷல் மீல்ஸ்க்கு ஃப்ரீ!"

“அடடா! இது தெரியாம ரெண்டு கையிலும் தேய்ச்சிட்டேனே!"

-சிவம்,

திருச்சி

சென்னிமலை

பூங்கா ஒன்றில்...

“ஏன் மச்சி... ‘ஜெய் பீம்’ பட விவகாரத்துல சூர்யா 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தரணும்னு பாமக நோட்டீஸ் விட்டிருக்காமே? போற போக்க பாத்தா பாஜக கூட சூர்யாகிட்ட பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்க வாய்ப்பு இருக்கு.”

“எப்படிடா?”

“அவர் நடிச்ச ‘வாரணம் ஆயிரம்’ படத்துல, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ன்னு பாடியிருக்காரே?”

“வர வர மீம்ஸ் பாணியிலேயே திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டடா!”

- சி.பி.செந்தில் குமார்,

சென்னிமலை

தஞ்சாவூர்

டிராஃபிக் சிக்னல் ஒன்றில்...

“தம்பி... நிறுத்து. என்ன தைரியமிருந்தா தண்ணிப் போட்டுட்டு வண்டி ஓட்டுவே?"

“சார்... ப்ராமிஸா பெட்ரோல் போட்டுத்தான் ஓட்டுறேன்... வேணும்னா திறந்துப் பாருங்க.”

“காமெடி பண்றீங்களோ? அதான் பத்தடிக்கு முன்னாலேயே நீ போட்ட சரக்கு நாத்தம் அடிக்குதே. மரியாதையா ஃபைனக் கட்டு.”

- பா. து. பிரகாஷ்,

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்....

“இயற்கையாவே வெள்ளம் வருது... முடிஞ்சவரை அதிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடறோம்! போன ஆட்சியைவிட எங்க ஆட்சி பரவால்லதானடா... எங்களையும் குறை சொல்றது நியாயமா?”

“இதைச் சொன்னவரைக்கும் மகிழ்ச்சிடா. நான்கூட இதுக்கு ‘வீடுதேடி வெள்ளம்’னு ஒரு திட்டத்தை அறிவிச்சிடுவீங்களோன்னு பயந்துட்டேன்!”

“மாஸ்டர் ஒரு டீ கேன்சல்!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

x