பாசன சபை தேர்தல் விரைந்து நடத்தப்படுமா?


கன்னியாகுமரி மாவட்டத்தில், பாசன சபைகளுக்கான பதவிக்காலம் கடந்த 2017-ம் ஆண்டே முடிவடைந்துவிட்டது. இருந்தும் இப்போதுவரை இந்தத் தேர்தல் நடத்தப்படாததால், நீராதாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் முறையாக நடைபெறாமல் கிடப்பில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயிகளிடையே நீரைப் பகிர்ந்து அளிக்கவும், விவசாய மேம்பாட்டுக்காகவும் தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 என்னும் சட்டத்தை, தமிழக அரசு கடந்த 2001-ம் ஆண்டு இயற்றியது. இந்தச் சட்டம் 2002-ம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பால் அமலுக்கு வந்தது. இதன் மூலம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்கள், பகிர்மானக் குழு, திட்டக் குழு என மூன்றடுக்குப் பாசன சபையின் முறைகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தின் 9 வடிநில அமைப்புகளுக்கு இந்தக் குழு அமைக்கப்பட்டது.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் பதவிக்காலம் கடந்த 2017-ம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. ஆனால், இப்போதுவரை இந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தப் பதவியில் இருப்பவர்கள் தான் தங்கள் பகுதிகளில் நீராதாரங்களில் மடை உடைப்பு, சீர்செய்ய வேண்டிய இடங்கள் ஆகிய பணிகளை பொதுப்பணித் துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

செண்பக சேகரன்

இதுகுறித்து குமரிமாவட்டத்தின் முன்னோடி விவசாயி செண்பகசேகரன் காமதேனுவிடம் கூறும்போது, ‘நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் நடத்தப்படவில்லை. 4 ஆண்டுகளாக அந்தப் பொறுப்புகளில் ஆட்கள் இல்லை. நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தினரே ஒவ்வொரு ஊரிலும் நீர் ஆதாரங்களை கண்காணிக்கும் பொறுப்பைச் செய்துவந்தார்கள். இந்தச் சங்கங்களின் மூலம் சிறு, குறு பாசனப்பரப்பில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய நிதி ஆதாரமும் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த நிதியும் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளால் முறையாக செலவு செய்யப்பட்டு வந்தது. இந்தத் தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் முழுவீச்சில் செயல்படும்போதே வெள்ளச்சேதம் 50 சதவிகிதத்துக்கு மேல் குறையும்.

எந்தெந்தப் பகுதியில் என்னென்ன பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டும் என்பது அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்குத்தான் நன்கு தெரியும். அவர்கள் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தில் பொறுப்புக்கு வரும்போது பொதுப்பணித் துறையினருக்கும், நீராதாரங்களில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளைச் சுட்டிக்காட்டுவார்கள். எனவே, பாசன சபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்றார்.

x