துளசி எனும் வன யட்சி


துளசி கவுடா

கிரேட்டா தன்பர்க். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் சூழியல் போராளியை இன்று அறியாதவர்கள் குறைவு. கிரேட்டாவை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்த்ததில், இணையத்துக்கும் சமூக ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த இரண்டும் இல்லாத 1960-களில், இந்தியாவிலும் ஒரு கிரேட்டா தன்பர்க் வெளியுலகம் அறியாது உருவெடுத்திருந்தார். 60 வருடம் கழித்து, இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டபோதுதான், துளசி கவுடா எனும் ஆளுமையை அநேக இந்தியர்கள் அறிந்துகொண்டனர்.

தற்போது 76 வயதாகும் துளசி கவுடாவுக்கு விருது, கவுரவமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பத்மஸ்ரீ பெற்ற கையோடு குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, தனது உறவுகளைச் சந்திக்க ஹொன்னாலிக்கு விரைந்துவிட்டார். ஹொன்னாலி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்லாயிரக்கணக்கான பசிய சொந்தங்கள் துளசி கவுடாவுக்காகக் காத்திருந்தன. அவை எல்லாமே துளசி வளர்த்து ஆளாக்கிய மரங்கள். இவர் ஒரு மரக்கன்றை நித்தம் நீரூற்றி, பராமரித்து வளர்ப்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டும்; அமுதூட்டி வளர்த்த அன்னையர் தோற்றுப் போவார்கள். மரங்களையும், மரம்சார் வனத்தையும் நேசிப்பதில் இப்படியும் ஒரு மனுஷியா என்று அதிசயிக்கச் செய்யும் வன யட்சி இவர்.

பத்மஸ்ரீ விருது பெறும் துளசி

வாரியணைத்த வனத் துறை

கர்நாடக மாநிலம், அங்கோலா அருகே ஹொன்னாலி கிராமத்தின் பழங்குடிகள் சமூகத்தில் பிறந்தவர் துளசி. வனம் என்பதையும் வீடு என்பதையும் பிரித்தறியாத ஆதிகுடிகள் அவர்கள். அவர்களின் மத்தியில் பிறந்த துளசி, பால்யம் தொட்டே வனத்தைத் தனது பிஞ்சு பாதத்தால் அளக்க ஆரம்பித்துவிட்டார். வறிய குடும்பத்தைத் தோளில் தாங்கி வந்த தந்தை, துளசியின் 2 வயதிலேயே இறந்துபோனார். நொடித்த குடும்பத்தை நிமிர்த்த குழந்தைப் பிராயத்திலேயே துளசி உழைக்க ஆரம்பித்துவிட்டார். வனத் துறை இவருக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. தினக்கூலிதான். சொற்பக் காசு என்றபோதும், கரும்பு தின்னக் கிடைக்கும் கூலியாகவே அதை பாவித்தார். வனத் துறைக்குச் சொந்தமான வனாந்தரங்களிலும், நர்சரிகளிலும் தனது தாயின் துணையுடன் ஆண்டுக்கணக்கில் தினக்கூலியாகவே கழித்தார்.

பழங்குடியினருக்குக் கருவிலேயே திருவாக வனமும், வனம் சார்ந்த வாழ்க்கையும் பழகியிருக்கும். அப்படி துளசிக்கும் வனத்திலுள்ள செடி, கொடி, மரம் என அனைத்து தாவரங்களும் பரிச்சயமாயின. தாவர வகையினங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள், தாவர அறிவியல் மற்றும் மேலாண்மை என வனம் தொடர்பாக நாம் வகைப்படுத்தியிருக்கும் அனைத்தும் அத்துபடியாயின. ஆய்வு பட்டமெல்லாம் முடித்து வனத் துறையில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள்கூட, ‘துளசி’ என்றால் மரியாதையில் மசிவார்கள். எழுதப்படிக்க அறவே அறிந்திராத துளசி, அந்த அளவுக்கு வனத்தின் தாவரங்களை ஆழமும் அகலுமாக தெரிந்துவைத்திருந்தார். அத்தனையும் பட்டறிவால் கிட்டியவை! மேம்போக்கான ஏட்டறிவைவிட, இந்த ஆத்மார்த்தமான பட்டறிவு இவரது பெயரை ஹொன்னாலிக்கு வெளியேயும் பரப்பியது. துளசியைப் பெரிதும் சார்ந்திருந்த வனத் துறை, தினக்கூலியாக இருந்தவரை ஒரு கட்டத்தில் துறைக்குள்ளேயே இழுத்துக்கொண்டது.

பிரதமர் மோடியுடன் துளசி

வன தேவதை

12 வயது ஆனபோது துளசிக்குத் திருமணம் நடந்தது. 3 மடங்கு வயதான கோவிந்த கவுடாவுக்கு மணமுடித்தனர். விரைவிலேயே கணவர் இறந்ததால், 17 வயதிலேயே சிறுமி துளசிக்கு கைம்பெண் பட்டம் சேர்ந்தது. கூடவே குடும்பத்தின் தேவைகளுக்காக அதிகம் உழைக்கவும் வேண்டியிருந்தது. அழுத்திய தனிமையிலிருந்து விடுபட தவித்தவரை வனம் ஆற்றுப்படுத்தியது. அங்கே, தான் நட்ட மரக்கன்றுகளுக்காகவும், அதற்கான பராமரிப்புகளுமாக நேரம் செல்வதே தெரியாது கரைந்திருப்பார். அப்போதுதான் தனக்கான குடும்பம் வனத்தில் இருப்பதையும், மரங்களுடன் ஏதோ தொப்புள்கொடி உறவு தென்பட்டதையும் உணர்ந்தார் துளசி. அதுவரை துளசியைத் திணறடித்த வெறுமை விலகிப்போனது.

வனத்தில் தனக்கான உற்றார், உறவு வளையத்தை விரிவாக்க ஆரம்பித்தார். சுமந்து பெற்ற குழந்தையை அமுதூட்டி, அழகு பார்த்து, வருடி ஆளாக்கும் தாய்போல ஒவ்வொரு மரக்கன்றையும் பாவித்து பராமரித்தார். அந்த மரங்கள் அனைத்தும் துளசியின் கருப்பைக்கு வெளியே தரித்த குழந்தைகளாயின. துளசியின் மாற்றத்தை சக பழங்குடியின மக்கள் தாமதமாகவே கண்டுகொண்டனர். ஒரு தருணம், துளசி வளர்த்த விலையுயர்ந்த மரங்கள் சிலவற்றை அதன் பயனாளிகள் வெட்ட வேண்டியதாயிற்று. தகவலறிந்த துளசி இடிந்துபோனார். அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வெட்டப்பட்ட மரம் அருகே துளசி கண்ணீர் விட்டதைப் பார்த்த பிறகுதான், இவர் சாதாரண மனுஷியல்ல ஒரு வன தேவதை என்பதை அனைவரும் கண்டுகொண்டனர்.

துளசி

காடுகளின் கட்டற்ற களஞ்சியம்

கர்நாடக வனத் துறை உயரதிகாரிகளின் கூடுகை எங்கே நடந்தாலும், தீர்மானம் இயற்றுவதற்கு முன்னர், எதற்கும் ஒரு வார்த்தை ’துளசாஜி’யை கேட்டு விடுவோம் என்று முடிப்பார்கள். தாவரவியல் பாடங்களில் சந்தேகம் என்றால், பேராசிரியர்கள் பொடி நடையாய் வனத்துக்குள் தேடி வந்துவிடுவார்கள். துளசியை சதா மொய்க்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தனி. அந்த அளவுக்கு ஆதியந்தமாய் காடுகளைப் பற்றியும், தாவர உலகைப் பற்றியும் அனுபவபூர்வமாய் அறிந்துவைத்திருப்பதால் காடுகளின் கட்டற்ற களஞ்சியம் என்று துளசியைப் போற்றுகின்றனர்.

இந்தப் பட்டறிவோடு, காட்டையும் காட்டுயிர்களையும் இவர் அணுகும்விதமும் அலாதியாக இருக்கும். கல், முள் என எத்தனை கிலோமீட்டர் நடக்க நேரிட்டாலும் துளசி காலணி அணிந்ததில்லை. பத்மஸ்ரீ விருதுக்காக பழங்குடியினத்தைப் பிரதிபலிக்கும் உடுப்பைச் சுற்றிக்கொண்டு, தரை நோகாது பூப்பாதம் வைத்து வந்தார். இவரைப் பற்றி அறிந்திருந்த பிரதமர் மோடி, இம்மூதாட்டியின் கைகளைப் பற்றிக்கொண்டு அளவளாவினார். மாபெரும் சபைதனில் எளிமையின் திருவுருவாய், வானுயர் மரம் போல தலையுயர்த்தி நடைபோட்ட துளசியை, கேமராக்கள் ஆச்சரியமாய் விழுங்கின.

துளசி

பட்டறிவின் பாடங்கள்

இன்னும் சில கேமராக்கள் துளசியின் பின்னாகவே ஹொன்னாலி வரை ஓடின. வெளியுலகத்துக்கு ஆச்சரியமான துளசியின் இருப்பையும், இவர் வளர்த்து ஆளாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேலான மரங்களையும், கொச்சை மொழியில் சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு குறித்த துளசியின் பேட்டியையும் அந்தக் கேமராக்கள் பதிவுசெய்தன. கிளாஸ்கோ மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் எழுதிச்சென்று வாசித்த உரைகளைவிட, துளசியின் கொச்சை மொழியில் சாரமும் காரமும் அதிகம்.

வனத் துறை கடைநிலை ஊழியர் பொறுப்பிலிருந்து துளசி ஓய்வு பெற்று, 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனபோதும் 60 ஆண்டுகளாக நல்கிய அதே உழைப்பை இந்த 77 வயதிலும் மெனக்கிட்டு தந்துகொண்டிருக்கிறார். இவரது காலணி காணாத பாதங்கள், இன்றும் வனத்தை எங்காவது அளந்துகொண்டிருக்கும்; வாடிய மரக்கன்று ஒன்றுக்காக நீர் வார்த்துக்கொண்டிருப்பார். தான் ஆசையாய் வளர்த்தது, அண்ணாந்து பார்க்கத்தக்க மரமாக வளர்ந்திருப்பதை ஆசையுடன் வருடி இரண்டொரு வார்த்தை பேசிக்கொண்டிருப்பார்.

மரங்களைக் குழந்தையாக கருதி வளர்ப்பதைப்போலவே, மனிதக் குழந்தைகள் வனம் குறித்தும், இயற்கை குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது இவரது தனிப்பட்ட ஆவல். தன்னைக் காணவரும் கூட்டத்தில் எவரேனும் குழந்தைகள் தட்டுப்பட்டால், அவர்களது சந்தேகங்களுக்குப் பதிலளிக்க மட்டும் தனது பொக்கை வாயை அதிகம் திறப்பார். வனமரங்களை குழந்தையாக பாவிப்பதும், குழந்தைகளுக்கு மரங்கள் அடர்ந்த வனத்தைப் பழக்குவதும்கூட துளசியின் பட்டறிவில் உதித்த நமக்கான பாடங்களே!

x