கண்துடைப்பு நிவாரணம்... கலங்கும் விவசாயிகள்!


மழையால் பாதிக்கப்பட்டுள்ள தாளடி பயிர்கள்

‘கனமழையால் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வெறும் கண்துடைப்புதான்’ என்று கண்ணைக் கசக்குகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

பாதிப்புக்குள்ளான வயல்கள்

இது தொடர்பாக காமதேனு இணையத்திடம் பேசிய டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன், ‘’நவம்பர் முதல் தேதி தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. முதல் மழையில் மூழ்கிய பயிர்களில் 2-வது மழைவரை தண்ணீர் வடியவேயில்லை. தற்போது 3-வது மழையும் இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்டா விவசாய பாதிப்புகளை கணக்கிட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வுக்கு வந்தது.

முதல்வர் வருவதற்கு ஒருநாள் முன்பு ஆய்வு செய்தவர்கள், ஒருசில இடங்களில் மட்டுமே பாதிப்பை நேரடியாகப் பார்த்தார்கள். மற்றபடி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அளித்த விவரங்களை வாங்கிக்கொண்டார்கள். முதல்வரும் வந்து ஆட்சியர்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் வரைபடங்களையும், தயாராக வைக்கப்பட்டிருந்த அழுகிய பயிர்களையும் பார்த்துவிட்டுப் போனார்.

மறுநாள் அமைச்சர்கள் குழு முதல்வரிடம் பாதிப்பு குறித்த அறிக்கையை அளித்தது. அதன்பேரில் 16-ம் தேதி அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்டாவுக்கு பார்வையிட வரும்போது சரியாக அன்றையதினம் பார்த்து நிவாரணம் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பதை பார்த்ததும் அனைத்து விவசாயிகளும் ஆறுதல் அடைந்தார்கள். ஆனால், அது அப்படி இல்லை.

சேரன்

குறுவை, கார், சொர்ணவாரிப் பட்டத்தில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராகயிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குத்தான் அந்த 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும். டெல்டாவில் குறுவைப் பட்டம் அறுவடை முடிந்து வெகுநாட்களாகிவிட்டது. இங்கு இப்போது செய்யப்பட்டிருப்பது சம்பா மற்றும் தாளடி பட்டம். இதில் அனைத்துப் பயிர்களுமே இளம்பயிர்கள். கிட்டத்தட்ட 11 லட்சம் ஏக்கருக்கும் மேல் சம்பா, தாளடி பயிர்கள் இருக்கும் நிலையில் அவை நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது” என்றார்.

சம்பா, தாளடி பயிர் பாதிப்புக்கும் அவை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மறுசாகுபடி செய்வதற்கு ஏதுவாக ரூ.6,038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால்’ என்பதில்தான் சிக்கல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், முழுமையான பாதிப்பை எப்படி அதற்குள் கணக்கிட முடியும் என்பதே அவர்களின் கேள்வி.

அமைச்சர்கள் குழு ஆய்வு

விவசாய பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் அரசு முழுமையான அக்கறை காட்டவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. பெயரளவுக்கு அவசரகதியில் ஆய்வுசெய்து, எதிர்க்கட்சித் தலைவர் வருவதற்குள் நிவாரணம் அறிவித்திருப்பது, முழுமையான செயலாக இல்லாமல் அரைகுறையாக இருப்பதாக கருதுகிறார்கள். மயிலாடுதுறை பகுதியைச்சேர்ந்த விவசாயி ராமலிங்கம் இதுகுறித்து விளக்கமாகக் கூறுகிறார்.

’’மயிலாடுதுறை பகுதியில் பாண்டூர், மாப்படுகை, சோழம்பேட்டை, கோழிகுத்தி, வானாதிராஜபுரம் போன்ற பகுதிகளில் முழுமையாக தாளடியும், சம்பாவும் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இளம் பயிராக, தண்டு உருளக்கூடிய நிலையில் இருந்த பயிர்கள் அனைத்தும் இன்னும் மூழ்கிப்போய்த்தான் இருக்கிறது. மழையும் தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் எப்போது வடியுமோ தெரியாது.

ராமலிங்கம்

ஒட்டுமொத்த டெல்டாவிலும் இதுதான் நிலைமை. மழை நின்று தண்ணீர் வடிந்தால்தான் அந்தப் பயிர்கள் தேறுமா என்பதே தெரியவரும். அப்படித்தேறினாலும் அதில் முழுஅளவு பலன் கிடைக்காது. மகசூல் பாதிக்கும்கீழ் குறைந்துவிடும். இப்படிப்பட்டச் சூழல் இருக்கும்போது, ஒட்டுமொத்தமாக குறுவை, கார், தாளடி, சம்பா என்று எல்லாவற்றையும் சேர்த்து 68,000 ஹெக்டேர் அளவுக்குத்தான் பாதிப்பு என்று அதற்குள்ளாக எப்படி முடிவுசெய்து நிவாரணம் அறிவித்திருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இளம் பயிர் பாதிப்புக்கு ஒரு ஹெக்டேருக்கு 6,038 ரூபாய், அதுவும் பணமாக இல்லாமல் ரசாயன உரம் மற்றும் விதை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். கார்ப்பரேட் கம்பெனிக்காரர் களுக்குத்தான் இந்த அறிவிப்பும் பலன் தரும். ஸ்டாக் வைத்திருப்பதை அவர்கள் விற்று லாபம் பார்க்கத்தான் உதவும். இதையும், ஒரு வருவாய் கிராமத்தில் 20 ஏக்கர் மட்டும் கணக்கெடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். தயவுசெய்து விவசாயிகள் அடைந்துள்ள சேதத்தை சரியாகவும், முழுமையாகவும் கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வெடிக்கிறார் ராமலிங்கம்.

மழை, வெள்ள பாதிப்புகள் டெல்டா முழுமைக்குமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பதால்தான், கடந்த கால அதிமுக அரசு நிவாரணங்களையும் ஒரேமாதிரியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கியது. கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி டெல்டா விவசாயிகள் அனைவருக்குமே ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினார். அதேபோல அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது, 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடியிலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதித்தது திமுக அரசு. அப்படியும் இன்னமும் கடன் தள்ளுபடி பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

அதேபோல இப்போது பயிர் நிவாரண அறிவிப்பிலும் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பது, ”என்னதான் இருந்தாலும் எடப்பாடி அரசுபோல வராது” என்று விவசாயிகளை ஏக்கப் பெருமூச்சு விடவைத்திருக்கிறது.

மூழ்கியுள்ள பயிர்கள்

அனைத்து விவசாயிகளுக்கும் சகட்டுமேனிக்கு அரசு நிவாரணம் வழங்கத் தேவையில்லை. பெரும்பான்மையான இடங்களில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த இடங்களில் பாதிப்புகள் அதிகமிருக்காது. சில இடங்களில் விவசாயிகள் நாற்று வாங்கிப்போட்டு வீணாகிய இடங்களில், புதிதாக நட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தற்போதும் தண்ணீரில் மூழ்கியுள்ள இடங்களில் இளம்பயிர்கள் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும் என்பதை திறந்த மனதுடன் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அந்த விவசாயிகளுக்கு பாதிப்புக்கேற்ற நிவாரண உதவிகளை அரசு செய்யவேண்டும்.

x