உண்பது உழைப்பதின் சமநிலையே நோய்விரட்டி!


மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட்

பாரம்பரியமான நம் உணவுக் கலாச்சாரத்தை மறந்து துரித உணவுக் கலாச்சாரத்தில் நுழைந்துவிட்டோம். அதனால்தான், இன்று புதுப் புது நோய்கள் வரிசைகட்டி அணிவகுக்கின்றன. அதன் எதிர்விளைவே, மனித உடலே நோய்களைச் சுமக்கும் கூடாரம் ஆகிவிட்டது. ஆனால், நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களைச் செய்துவிட்டாலே நோய்களை வென்றுவிடலாம் என்கிறார், இயற்கை மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட்.

குமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலரான சுஜின் ஹெர்பர்ட் இதுகுறித்துக் கூறும்போது, “போதைப்பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும் எனப் பேசிவரும் நாம், வாழ்வியல் மாற்றமும் ஒருபோதை என்பதை உணர மறந்துவிட்டோம். பீடி, சிகரெட், மது என்பது மட்டுமா போதை? பேக்கரி உணவு, வண்ண நிறமி, துரித உணவு, குளிர் பானம், வாகனப் பயன்பாடு, கைபேசி என சமகாலத்தில் எதற்கெல்லாமோ போதையில் மூழ்கிக் கிடக்கிறது மனிதகுலம். அறிவியல் வளர்ச்சி அவசியமானதுதான். ஆனால், அதுவே நம் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைத்துவிட்டது தான் இங்கே பிரச்சினை. நகர்ப்புற நாகரிக மயக்கத்தில் பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டோம். அதனால் தான் அதிக அளவு நோய்களையும் தூக்கிச் சுமக்கிறோம்.

சுஜின் ஹெர்பர்ட்

மனிதனை நோயின்றி பாதுகாக்க இயற்கைத் தடுப்பு சக்தியும், வாழ்வியல் மாற்றமும் அவசியமானது. உடல்பருமன், ரத்த அழுத்தம், ஹார்மோன் பிரச்சினைகள், மலச்சிக்கல் என அலோபதிகளுக்கு அடங்காத நாட்பட்ட நோய்களுக்கு இயற்கை மருத்துவமே தீர்வு. இயற்கை மருத்துவம் பெரிய சூத்திரமெல்லாம் ஒன்றும் இல்லை. பஞ்ச பூதங்களின் உதவியோடு இயற்கை சார்ந்த வாழ்வியல் மாற்றம் செய்து, நோய்களைக் குணப்படுத்துவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பு.

மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, வெப்ப சிகிச்சை, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, உணவு சிகிச்சை, உபவாசம் என நம் மூதாதையர் தொன்றுதொட்டு செய்த பழக்கங்களே, இயற்கை மருத்துவத்தில் சிகிச்சையாகி உதவுகின்றன. நாளொன்றுக்கு 12 முதல் 15 குவளை தண்ணீர் அருந்துதல், இருமுறை உணவு எடுத்துக்கொள்ளுதல், தினசரி யோகா மற்றும் உடற்பயிற்சி, ஆன்மிகத்தோடு கூடிய உபவாசம் என இயற்கை மருத்துவத்தின் தத்துவங்கள் விரிகின்றன.

உண்பதும், உழைப்பதும் சமநிலை அடைந்தால் நோய் நம்மை அண்டாது. உறக்கமும், உடற்பயிற்சியும் ஒழுங்காக இருந்தால் ஹார்மோன்கள் சமநிலையை அடையும். ஹார்மோன் சமநிலையை அடைந்தால், உடலின் அத்தனை பணிகளும் சரியாக நடைபெறும். உறுப்புகளும் சீராக இயங்கும். இதயம் புத்துணர்வு பெற்று மூச்சுவிடுவதும் எளிமையாகும். நம் உடலின் ஜீரண சுரப்பிகளும் மிகச்சரியாக வேலைசெய்யும். இயற்கையான மருத்துவம் என்பது, துரித உணவுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுவதில் இருந்தே தொடங்கிவிடுகிறது.

இன்றெல்லாம் பக்கத்து தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்குச் செல்வதற்கே, டூவீலரை எடுத்துக்கொண்டு செல்லும் இளைஞர்கள் உருவாகிவிட்டனர். குறைந்தபட்ச நடை கூட இதனால் இல்லாமல் போய்விடுகிறது. அருகமை இடங்களுக்கு பைக்கில் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இதெல்லாம் சின்னச் சின்ன மாற்றங்கள் தான். இதையெல்லாம் செய்யும்போதே நம் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுவிடும்” என்றார்.

x