பாரதி மணி: பொல்லாக் கிழவருக்குப் பிரியாவிடை


நேற்று (நவ.16) மாலை 6.30 மணிக்கு நண்பர் ஹரன் பிரசன்னா தொலைபேசியில் தொடர்புகொண்டு, “கேள்விப்பட்டது உண்மையா? ‘பாட்டையா’ பாரதி மணி இறந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் பார்த்தேன். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

மிகவும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்து, “எனக்கு எதுவும் தெரியாதே? எப்போது?” என்று கேட்டேன்.

பெருந்துயரளிக்கும் இந்தச் செய்தியை யாரிடம் உறுதி செய்வது?

உடனே மனதுக்கு வந்தது நண்பர் இளம்பரிதி. அவரிடம் கேட்டபோது, “அதுபோன்ற செய்தி எதுவும் இல்லை தோழர். கேட்டுச் சொல்கிறேன். அப்படி எல்லாம் இருக்காது” என்று பதற்றமாக உரையாடலைத் துண்டித்தார்.

அடுத்து, மணி சாரை சில காலமாக அடிக்கடிச் சந்தித்துவரும் சப்தரிஷி லா.ச.ரா-விடம் கேட்டேன். அவரும் அதுபோன்ற செய்தி எதுவும் இல்லை என்றார். பின்னர் பெங்களூரு மகாலிங்கத்தைத் தொடர்புகொண்டேன். அவரும், “எதுவும் தெரியாது. எதற்கும் பாவண்ணனைத் தொடர்புகொள்கிறேன். ஆனால் அவர் புதுச்சேரி போயிருக்கிறார்” என்றார். அப்படி எல்லாம் இருக்காது, இந்தக் கிழவர் ஏதோ டகால்டி அடித்திருப்பார் என்று பேசிக்கொண்டோம்.

அவருடைய வீட்டிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. மகள்களின் தொலைபேசி எண்கள் யாரிடமும் கிடையாது. அனுஷாவும் ரேவதியும் நான் பார்த்து வளர்ந்த குழந்தைகள். இரண்டும் மணி சாருடன் நாடகங்களில் நடித்திருக்கின்றன. ‘யதார்த்தா’ தயாரிப்பான செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தில் என் இயக்கத்தில் ரேவதி நடித்திருக்கிறது. அனுஷா நடித்த சுஜாதாவின் ‘நரேந்திரனின் விநோதக் கொலை வழக்கு’, ‘கடவுள் வந்திருந்தார்’ ஆகிய நாடகங்களுக்குப் பேராசிரியர் ரவீந்திரனுடன் ஒளியமைப்பில் பங்கேற்றிருக்கிறேன்.

இரண்டு பெண்களும் எங்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே பரிச்சயமானவர்கள். இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், ரேவதியிடமிருந்தோ அனுவிடமிருந்தோ கண்டிப்பாக எனக்கு போன் வந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இடையில் நண்பர் ஸ்ரீவத்ஸா தொடர்புகொண்டு, “என்ன கேபி கேள்விப்பட்டது உண்மையா?” என்றார்.

“இல்லை ஸ்ரீ... உறுதி செய்யாமல் சொல்வது நன்றாக இருக்காது” என்றேன்.

“பெங்களூருவில் இருந்து அனுராதா கிருஷ்ணசாமி இதுகுறித்து பதிவிட்டு இருக்கிறார். பார்க்கலையா? என்று கேட்டார்.

அனுராதா கிருஷ்ணசாமியின் பதிவைப் படித்துவிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, செய்தி உறுதியானதுதான் எனத் தெரியவந்தது. கோவையில் உள்ள ஜீவானந்தனின் நண்பர் ஒருவர், மதியம் 2 மணிக்கே பதிவிட்டிருந்தார். நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்டார்.

அதற்கு மகள்களிடம் உறுதிசெய்யாமல் அல்லது அந்த நிலையில் பார்த்த யாராவது அதை உறுதி செய்யாமல் எப்படி இந்தச் செய்தியை நம்புவது என்று கேட்டேன். “அதிகம் எமோஷனல் ஆகாதீங்க. அவர் வயிற்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மிகவும் க்ஷீணமான நிலையில் ஒருமுறை என்னை அவசர அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினார். நான் காலையில் அவர்கள் வீட்டுக்குப் போய் எதற்கும் உறுதிசெய்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பல நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் அந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து, பதற்றத்துடன் வந்தவாறு இருந்தன. இதற்கிடையில் ஃபேஸ்புக்கில் மணி சாருடன் எடுத்துக்கொண்ட படங்களுடன் பலரும் அஞ்சலிக் குறிப்பைப் பதிவுசெய்தவாறு இருந்தனர்.

என்னால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. இரவு உடனடியாக என் பேஸ்புக் சுவரில், “மணி சார் பற்றிய தகவல் உறுதி ஆகவில்லை. அது பொய்யாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பதிவிட்டேன். அதில் நிறைய பேர், சற்று ஆசுவாசமடைந்து பின்னூட்டம் எழுதினர். அதிலும் யாரும் என் பதிவை மறுக்கவில்லை. இரவு அனுராதா கிருஷ்ணசாமியிடம் பேசிவிட்டு நீண்ட நேரம் கழித்து உறங்கச் செல்லும் முன்பு, மீண்டும் ஒருமுறை பதிவிட்டேன்.

“நான் உறுதியாகச் சொல்கிறேன். எங்கள் மணி சாருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் குடும்பமோ நெருங்கிய வட்டமோ இதை உறுதி செய்யவில்லை. யாரும் அவரை அக்கோலத்தில் இதுவரை பார்த்து உறுதி செய்யவில்லை. எமனுக்கும் அல்வா கொடுக்கும் பொல்லாக்கிழவர் அவர். காலை நல்லபடியாக விடியட்டும்” என்று பதிவிட்டு உறங்கச் சென்றேன். நெடுநேரம் உறக்கம் வரவில்லை.

காலை நல்லபடியாக விடியவில்லை.

ரேவதி மற்றும் அனுஷா பாரதி மணியின் பேஸ்புக் பக்கத்தில் காலையில் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார்கள். நவம்பர் 16-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, பாரதி மணியின் மரணத்தை உறுதிப்படுத்திய அனுஷா - ரேவதியின் பதிவு வந்த 17-ம் தேதி காலைக்கும் இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் குழுமங்கள் ஆகியவற்றில் கணக்கற்ற அஞ்சலிகள் அவருடைய நட்பு வட்டத்தால் பகிரப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து 2 பெட்டிகள் மற்றும் சில நூல்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறி, பின்னர் பெங்களூருவுக்கு இடம்மாறிய இந்த அகத்திய முனி எத்தனை மனிதர்களின் அன்பைச் சம்பாதித்திருக்கிறார்?

நினைக்கவே மலைப்பாக இல்லையா?

வேறு எந்த மனிதப்பிறவியாலும் இதுபோன்ற ஒரு பெருஞ்செல்வத்தை, அன்பு என்ற முதலீட்டை மட்டுமே வைத்து ஈட்ட முடியுமா என்பதை நினைக்க நினைக்க மலைப்பாக இருக்கிறது.

சில ஆண்டுகளாக, தன்னுடைய வயோதிகக் காலத்திலும் தன்னிடம் அன்பு செலுத்தும் நண்பர்களைத் தேடித் தேடிப் பயணப்பட்டு, சென்ற இடங்களில் எல்லாம் பேரன்பை விதைத்துவிட்டு வந்திருக்கிறார். பாரபட்சமின்றி அன்பையும் பாசத்தையும் மாபெரும் நட்பு வட்டத்துக்கு சமமாகப் பகிர்ந்தளித்துப் பரவசப்பட்டும் பரவசப்படுத்தியும் இருக்கிறார்.

டெல்லி நண்பர்களான நாங்கள், இதை அவர் எடுத்த புதிய அவதாரமாகப் பார்த்து மலைத்துக்கொண்டிருந்தோம்.

பாட்டையா, பாட்டையா... என்று பெரிய இளைஞர் பட்டாளமே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவருடைய மனம் திறந்த வெள்ளந்திப் பேச்சுக்காக பெரும் கூட்டமே அவர் பின்னால் அலைந்துகொண்டிருந்தது. அவருடைய நகைச்சுவை உணர்வும் எதையும் நையாண்டி செய்து எவ்விதக் கடினமான சூழலையும் லகுவாக மாற்றிய அவருடைய சாதுரியமும் அவர் பின்னால் பெருங்கூட்டத்தை திரட்டித் தந்தன. மணி சார், அதாவது ஒரு பெரும் நட்பு வட்டத்தின் பாட்டையா இப்போது இல்லை என்பதை நம்புவது, பலருக்கும் என்னைப் போலவே மிகவும் கடினமாகத்தான் இருக்கும்.

உயிரோடிருந்தபோது தெரிவித்த அவருடைய விருப்பத்தின் அடிப்படையில், அவரது உடல் பெங்களூருவின் ஏதோ ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடத்தில் உறைந்து காத்திருக்கிறது - ஆம், எவ்வகையான இறுதிச் சடங்குகளும் இன்றி!

கடந்த அக்டோபர் 26-ம் தேதியன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவைப் போட்டிருந்தார். என் தோளின் மீது கைவைத்த புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அதன்கீழ்,

“இன்று யதார்த்தா பென்னேஸ்வரன் பிறந்தநாள் இல்லை. அதனாலென்ன?.....வாழ்த்திவிடுவோம்!

இன்னும் நூறாண்டிரு!’

நிறைய நண்பர்கள் தொடர்ச்சியாக எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பின்னூட்டம் எழுதியிருந்தார்கள்.

எனக்கு அப்போது புரியவில்லை. இந்தக் கிழவர் ஏதோ டகால்டி அடிக்கிறார் என்று நினைத்தேன்.

பின்னூட்டத்தில் இதை எழுதக்கூட செய்தேன். அப்புறம், பல ஓரிரு மாதங்களாக என் தொலைபேசி அழைப்பை அவர் ஏற்காதது தொடர்பாகவும் அதே பதிவில் பின்னூட்டம் எழுதினேன்.

“சார் மிக்க நன்றி. போன் எடுத்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.”

அதற்கும் பதில் இல்லை. அதன் பிறகு அவருடைய பதிவு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது அனுஷா மற்றும் ரேவதியின் பதிவைப் படிக்கும்போது எல்லாம் தெளிவாகிவிட்டது.

இப்பதிவைப் படித்ததும் தனிமையில் பெருங்குரல் எடுத்துக் கதறி அழுதேன்.

குடல் புற்றின் பெருங்கொடுமையைச் சில மாதங்களாகத் தாங்கியவாறு மனிதர் போராடியிருக்கிறார். தன்னுடைய ஆசிர்வாதத்தை இந்தப் பதிவு மூலம் எனக்கு அனுப்பியிருக்கிறார்.

என்னைப் போலவே, ஜீவானந்தன் போன்ற சில நெருங்கிய நண்பர்களுக்கும் இதுபோல அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வாழ்த்துகளையும் அனுப்பியிருக்கிறார் என்பது புரிந்தது.

எத்தனை மகத்தான பெருங்கருணை ததும்பும் மனது இந்த மனிதருக்கு!

இப்பெருங்கருணை மனதுதான் இப்படி ஆயிரக்கணக்காக நேசிக்கும் ஜீவன்களை அவருக்குப் பெரும் பரிசாக அளித்துள்ளது.

மாபெரும் நடிகரான மணி சாரின் மரணமே, ஒரு பெரும் துயர நாடகமாக முடிந்திருக்கிறது. அவருடைய மரணமும் ஒரு மர்ம நாடகத்தைப் போல 12 மணி நேரத்துக்கும் மேல் பலரையும் ஒருவகையான உறுதி செய்யப்படாத சந்தேகம் கலந்த ஊகத்துடனே தவிக்க வைத்திருக்கிறது.

உயிரோடிருந்தபோது தெரிவித்த அவருடைய விருப்பத்தின் அடிப்படையில், அவரது உடல் பெங்களூருவின் ஏதோ ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடத்தில் உறைந்து காத்திருக்கிறது - ஆம், எவ்வகையான இறுதிச் சடங்குகளும் இன்றி!

மர்ம நாடகத்தில் வரும் மர்ம கதாபாத்திரத்தைப் போல, இறுதியில் யாருக்கும் முகதரிசனம் ஏதுமின்றி அவருடைய மகத்தான நட்பு வட்டத்தின் நினைவில் மட்டுமே உறைந்து தங்கியிருக்கப் போகிறது.

நண்பர் இரா.முருகன் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதைப் போல, “அஞ்சலி செய்யப்பட வேண்டிய இறப்பு என்பதை விட கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை பாரதி மணி அவர்களுடையது.

சென்று வாருங்கள் மணி சார்!”

கட்டுரையாளர்: நாடகச் செயற்பாட்டாளர், மூத்த பத்திரிகையாளர்

x