பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து?


அரண்மனை சுற்றுச்சுவர்

மன்னர்கள் காலத்தில் மிகச்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மையை சரிவர கண்டுகொள்ளாததால், கொட்டித் தீர்க்கும் மழைக்கு பத்மநாபபுரம் அரண்மனையே ஆபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. கி.பி 1601-ம் ஆண்டு திருவிதாங்கூரை ஆண்ட ரவிவர்மா குலசேகரபெருமாளால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. கி.பி 1795 வரை பத்மநாபபுரம் திருவிதாங்கூர் அரசின் தலைநகரமாக இருந்தது.

இப்போது இந்த அரண்மனை பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனையானது தமிழக நிலப்பரப்பில் இருந்தாலும், இந்த அரண்மனை மட்டும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரம் அரண்மனையின் வெளிப்புறச் சாலை, அரண்மனையின் கோட்டைச்சுவர் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கேரள அரசு பத்மநாபபுரம் அரண்மனையை மிகச்சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது. ஆனால், தமிழக அரசு, அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தாததால் அரண்மனைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காமதேனுவிடம் பேசிய அப்பகுதிவாசிகள் சிலர், “அரண்மனை வளாகத்தின் வெளிப்புறச்சாலை பத்மநாபபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரண்மனை சுவரை ஒட்டியே சாலையும், அதன் எதிரிலேயே வரிசையாக வீடுகளும் உள்ளன. தெற்கு ரத வீதியான அதில் இதுபோக 3 சிறு சந்துகளும் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரும், இந்தப்பகுதியில் தேங்கும் மழைநீரும் தேங்காத வகையில் முன்பு மன்னர்கள் காலத்தில் சிறந்த நீர்மேலாண்மை இருந்தது.

முன்பு இந்தப் பகுதியில் இருந்த சிறு ஓடைகளில் சேகரம் ஆகும் தண்ணீரானது, பூனை வாய்க்கால் வழியாக புலியூர் குறிச்சியில் போய்ச்சேரும். ஆனால், காலப்போக்கில் இந்த ஓடைகள் சரியாகப் பராமரிப்புச் செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்புகள் ஒருபக்கம். இதெல்லாம் சேர்ந்து இப்போது, அரண்மனை சுற்றுச்சுவரின் அருகிலேயே மழைநீர் தேங்கிக் கிடக்கிறது.

முதல்வர் அலுவலகத்திலோ, தலைமைச் செயலகத்திலோ இப்படி நீர் கட்டிக்கிடக்க அதிகாரிகள் விடுவார்களா? அதேபோலத்தான் ஒரு சமஸ்தானத்தையே மன்னர் இங்கிருந்துதான் ஆண்டார். அதுமட்டுமில்லாமல், பத்மநாபபுரம் அரண்மனை கேரளக் கட்டுமானக் கலைக்கும் மிகச்சிறந்த சான்றாக உள்ளது. இதில் தண்ணீர் கட்டி நிற்கும்போது, பழமையான இதன் கட்டுமானத்துக்கும் ஆபத்து ஏற்படும். ஏற்கெனவே, பெருமழை பெய்தபோது புத்தனாறு சானல் உடைந்து வள்ளியாறு நிரம்பி, பத்மநாபபுரம் சாலையே துண்டிக்கப்பட்டது. இதனால், பெருமழை நேரத்தில் பத்மநாபபுரமே தனித் தீவு போல் ஆனது. அரண்மனையின் சுவரை ஒட்டியிருக்கும் இந்தச் சாலையை தன் வசம் வைத்திருக்கும் பத்மநாபபுரம் நகராட்சி, அரண்மனையை பார்க்க வரும் சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், தொன்மையான இந்த அரண்மனையின் சுவருக்கு ஆபத்து இருப்பதை உணரவே இல்லை.

அரண்மனையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. இந்தப் பகுதியில் இந்திர விலாஸம், சந்திர விலாஸம், அம்பாரி முகப்பு போன்ற கட்டிட அமைப்புகள் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் பத்மநாபபுரம் அரண்மனையின் பழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தப் பகுதியில் நீர் தேங்காமல் நீர்மேலாண்மையில் தனி கவனம் செலுத்தவேண்டும்’’ என்றனர்.

x