பயிர் காப்பீடு செய்ய முடியாமல் பதறும் விவசாயிகள்!


நீரில் மூழ்கிய நெற்பயிரைக் காட்டும் ஒரத்தநாடு விவசாயி

பெருமழை, கடும் வறட்சி என்று இயற்கை ஒருபுறம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றால், இன்னொருபுறம் அவர்களை ஆளும் அரசாங்கங்களும் வஞ்சிக்கின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் பயிர் காப்பீடு திட்டம். உரிய கால அவகாசம் அளிக்கப்படாமலேயே, நவ.15-ம் தேதியோடு பயிர் காப்பீடுக்கான கடைசிநாள் முடித்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இதனால், இன்னும் 30 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் பரிதவித்துப் போயிருக்கிறார்கள்.

ஏற்கெனவே இருந்துவந்த பயிர் காப்பீடு முறையில் திருத்தங்கள் செய்து, 2019-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது, விவசாயம் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதால், இத்திட்டத்தில் விவசாயிகள் பெரிதளவில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டைவிட தமிழ்நாட்டில் இதுவரையிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடுதலாகப் பயிர் காப்பீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்குள் பயிர் காப்பீடு செய்வதற்கான நாள் நேற்றோடு (நவ.15) முடிவடைந்து விட்டது. அதனால், இன்னும் பல ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யமுடியாமல் இருக்கிறார்கள்.

விவசாய வேலைகளின் ஆரம்ப நிலையிலேயே அவர்கள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்பதாகத்தான், தற்போதைய விதிமுறைகள் உள்ளன. அவர்கள் விவசாய வேலைகளைப் பார்ப்பார்களா அல்லது பயிர் காப்பீடு செய்ய அலைந்து கொண்டிருப்பார்களா என்பதுதான் சிக்கல். இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடுக்கு கடைசிதேதி நவ.15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்மாத தொடக்கத்தில் இருந்து பெய்த கனமழை, தீபாவளி பண்டிகையால் பயிர் காப்பீடு செய்வதில் பெரிய அளவில் தேக்கம் ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெறப்படும் அடங்கல் சான்று காப்பீடு செய்வதற்கு மிகமுக்கியம். ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள் மழை வெள்ள பாதிப்புக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், அவர்களால் விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை வழங்க முடியவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டது முதல் காரணம்.

அதேபோல பயிர் காப்பீடு செய்ய கணினி சிட்டாவும் முக்கியம். அதில் அடுத்த காலதாமதம் ஏற்பட்டது. தமிழகத்திலுள்ள 3 லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில்கள், மடங்கள், சத்திரங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமானவை. அந்த நிலங்களுக்கான கணினி சிட்டா வழங்குவது கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுவாமிமலை சுந்தர விமலநாதன் போன்றவர்கள் அரசின் கவனத்துக்கு தொடர்ந்து எடுத்துச்சென்று அந்த நிலைமையை மாற்றினார்கள். அதனால் அக்டோபர் 29-ம் தேதி முதல், கணினி சிட்டா மீண்டும் கிடைக்கப்பெற்றது. இதில் 40 நாட்கள் தேக்கம் ஏற்பட்டது.

அடுத்த சிக்கல், இணையவழியில் இருந்தது. கடைசி ஒரு வார காலத்தில் விவசாயிகள் ஒரேநேரத்தில் பெருமளவில் திரண்டதால், சர்வர் வேலை செய்யவில்லை. இதனால் கணினி மையங்களில் இரவு பகலாக காத்துக்கிடந்தார்கள் விவசாயிகள். எல்லோராலும் கடைசி நாளுக்குள் காப்பீடு செய்ய இயலவில்லை. இப்படி எல்லா நிலையிலும் சிக்கல்கள் ஏற்பட்டதால், விவசாயிகளால் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து முடிக்க முடியவில்லை. இதில் விவசாயிகளின் பக்கம் எந்த குறையுமில்லை, அனைத்து குளறுபடிக்கும் காரணம் அரசுதான் என்கிறார்கள் விவசாய சங்கத் தலைவர்கள்.

தமிழக காவிரி விவசாயிகள் அனைத்து விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், "நவம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு தரும் நெருக்கடி. காரிப் பருவம், ரபிப்பருவம் என்று இந்தியா முழுமைக்கும் ஒரே காலகட்டமாக வைத்திருக்கிறார்கள். குறுவை பயிருக்கு ஜூன் 30, சம்பா தாளடி பயிர்களுக்கு நவம்பர் 15-க்குள்ளும் காப்பீடு செய்யவேண்டும் என்பது எல்லா மாநிலங்களுக்கும் ஒத்துவராத ஒன்று. உலகம் முழுமைக்குமே பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழையும், வறட்சியும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்படுகிறது.

பி.ஆர்.பாண்டியன்

இந்தியாவுக்கும் அது பொருத்தமுடையதுதானே. அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலத்திற்குமான விதிகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்த ஆண்டு மட்டும் அல்லாமல் இனிவரும் எல்லா ஆண்டுகளுக்குமே சம்பா, தாளடி பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை காலக்கெடு வழங்க வேண்டும். அதற்கான நிரந்தரத் தீர்வினை மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் தன்னிச்சையான அதிகாரப்போக்கை கட்டுப்படுத்தவும் வேண்டும்” என்கிறார்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை குறுவையிலும் தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. அப்போதுதான் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்றதால் இந்த விஷயத்தில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. ஜூன் 30-க்குள் பயிர் காப்பீடு முடிவடைந்துவிட்டது. இதுகுறித்து அப்போது பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “விவசாயிகள் பாதிக்கப்பட்டால் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அது ஒரு ஆறுதல்தான். ஆனால், சம்பா, தாளடியில் இன்னும் 30 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கும் நிலையில், எப்படி அந்த ஆறுதலை கொடுத்துவிட முடியும்?

இதுகுறித்து விரிவாகப் பேசினார், காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளரான சுவாமிமலை சுந்தரவிமலநாதன்.

"டிசம்பர் 31 வரை அவகாசம் அளிப்பது ஒரு புதிதான நடைமுறையோ, கோரிக்கையோ அல்ல. கடந்த ஆண்டும், அதற்கு முன்பு 2010 உள்ளிட்ட ஒருசில ஆண்டுகளிலும் டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வேளாண் துறை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடி இதற்கான வேலைகளை முன்னதாகவே செய்து முடித்திருந்தார். அவர் இப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தாலும்கூட, அவரது வழிகாட்டுதல்களைப் பெற்று இதனை செய்திருக்கலாம். ஆனால், மாநில அரசு குறுவையில் ஏமாந்தது போலவே தற்போதும் ஏமாந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, ஜனவரி மாதம் அவர்களது பயிர் அறுவடை செய்வதற்கு முன்பாக, காப்பீட்டு நிறுவனத்தால் சோதனை அறுவடை நடத்தப்பட வேண்டும். அது நடத்தப்பட்ட ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு எவ்வளவு சதவீதம்? உண்டா, இல்லையா என்பது தெரிவிக்கப்பட வேண்டும். அதிலிருந்து 4 வார காலத்திற்குள் இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டுகளில் ஒருமுறைகூட காப்பீட்டு நிறுவனங்கள் இதைப் பின்பற்றியதில்லை.

சுந்தர விமலநாதன்

கடந்த ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட்ட சம்பா தாளடி நெல்லுக்கான இழப்பீட்டையே 10 மாதங்கள் கழித்து இப்போது நவம்பர் மாதத்தில்தான் வழங்கி வருகிறார்கள். இவர்கள் தொகையை வழங்குவதற்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், விவசாயிகள் காப்பீடு செய்ய மட்டும் ஏன் அவகாசம் அளிக்க மறுக்கிறார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. இதனை தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் அனைத்துமே கண்டிக்காமல் இருப்பதும் வேதனையாக இருக்கிறது.

வெறும் அறிக்கை நாயகர்களாக அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சியின் தலைவர்கள், இந்த விஷயத்தை மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லி சென்று பேசி கால அவகாசத்தைப் பெற்றுத்தரவேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய தொகையை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, டெல்லி சென்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்து அந்த நிதியை கோரிப் பெற்று வந்தார். அதேபோல அனுபவமிக்க அவரையோ, ஒரு குழுவையோ இப்போதும் அனுப்பி உரிய கால அவகாசத்தைப் பெற வேண்டும்.

இனிவரும் காலங்களில், டிசம்பர் 31 வரை பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு காப்பீட்டுத் திட்டத்திலும் மாற்றத்தை வகுக்க வேண்டும்” என்கிறார் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது உட்பட மாநில அரசு ஒருபக்கம் இதற்கான முயற்சிகளை செய்யும் அதேவேளையில், தமிழக நலனில் அக்கறையுள்ளதாகக் கூறிக்கொள்ளும் மத்தியை ஆளும் பாஜகவின் தமிழக தலைவர்களும் தங்கள் தலைமையை அணுகி, தமிழக விவசாயிகளுக்கான இந்தக் குறைந்தபட்ச நீதியை பெற்றுத்தரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

x