இசைவலம்: மனதையள்ளும் மகாதேவர்!


ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. காசிக்குச் சென்றால் முக்தி. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். அப்படிப்பட்ட திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம், எண்ணற்ற மக்களிடையே பக்தி அலையை எழுப்ப வல்லது. சிவனின் நாமத்தைப் பாடும் அரிய பாடல்களை, அண்ணாமலை தீபத்தையொட்டித் தொகுத்துள்ளோம்.

பந்துவராளியில் பவித்ரமான பரமசிவன்

ஐந்தெழுத்து மந்திரத்துக்கு உரியவர் சிவன். அவரின் நாமத்தையே கொண்டவர் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர். ராமனின் பராக்கிரமத்தைப் பற்றியும் சிறப்புகளைப் பற்றியும் எத்தனையோ கீர்த்தனைகளைக் கேட்டிருப்போம். அன்னை சீதையைப் பற்றி, ‘சீத்தம்மா மாயம்மா’ என்று உருகுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமஸ்கிருதத்தில் சிவனைப் போற்றி தியாகராஜர் எழுதியிருக்கும் கீர்த்தனையான ‘சம்போ மகாதேவா’ பலரும் அறியாத ஒன்று. மிக அரிதானது!

‘பிறவாமை வேண்டும்.. அப்படிப் பிறந்தாலும் மறவாமை வேண்டும்’ என்பதே பல அருளாளர்கள் இறைவனிடம் வைக்கும் வேண்டுகோளாக இருக்கும்.

பக்தனுக்கு இரங்கும் தயாள மனம் படைத்தவனே, மலைமகளின் அன்புக்கு உரியவனே, கங்கையை அணிந்தவனே எனப் பலவாறு சிவனை பாடலில் வர்ணித்துக்கொண்டே வரும் தியாகராஜர், தன்னுடைய தனிப்பட்ட முத்திரையையும் பதித்திருப்பார். ‘தியாகராசனின் இதயத்துள் புகுந்தவனே’ என்பார் ஒரு இடத்தில்.

‘சம்போ மகாதேவா' பாடலை, தனது காத்திரமான குரலில் ஷங்கர் மகாதேவன் இந்தக் காணொலியில் பாடியிருக்கிறார். ராகபரம்பராவின் வெளியீடான இந்த ஒலிப்பதிவில் நமது மரபார்ந்த இசைக் கருவிகளின் ஒலியும் மேற்குலக இசைக் கருவிகளின் ஒலியும் ஸ்ருதி பேதமின்றி இரண்டறக் கலக்கின்றன.

சங்கொலி, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், மேற்குலகின் டிம்பொனி போன்ற மேளங்களின் கூட்டிசைவில் ஷங்கர் மகாதேவனின் குரல் பல்லவி, அனுபல்லவி, சரணம் என ஒவ்வொரு படிநிலைக்கும் நம் சுட்டுவிரல் பிடித்து அழைத்துச் செல்கிறது.

தியாகராஜ சுவாமிகள் சிவனைப் பாடும் இந்த அரிய கீர்த்தனையை பந்துவராளி, காமவர்த்தினி எனும் இரண்டு ராகங்களில் கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவதாகக் குறிப்புகள் இருக்கின்றன. பந்துவராளியில் பாடுவது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்பதாலேயே, இந்தக் காணொலியில் இந்தக் கீர்த்தனையை பந்துவராளி ராகத்திலேயே ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார்.

‘பிறவாமை வேண்டும்.. அப்படிப் பிறந்தாலும் மறவாமை வேண்டும்’ என்பதே பல அருளாளர்கள் இறைவனிடம் வைக்கும் வேண்டுகோளாக இருக்கும். இந்தக் கீர்த்தனையிலும் தியாகராஜர் பிறவாமையையே வேண்டுகிறார். நாமும் அதையே மறக்காமல் கேட்போம்.

மகாதேவா பாடலில் மனதைக் கரையவிட:

https://www.youtube.com/watch?v=DGGW0m-LnBY

மனித உடலே சிவமாகும்!

‘ஆத்ம லிங்கம்’ ஆல்பத்துக்கான பாடல்களை தமிழின் இனிமையோடு எழுதியிருக்கிறார் டாக்டர் கிருதியா. அப்படி எழுதப்பட்ட பாடல்களுக்கு ஏற்ற முறையில் இசையில் என்னென்ன ஜாலங்களை செய்ய முடியுமோ அத்தனையையும் இந்த ஆல்பங்களின் பாடல்களுக்குச் சேர்த்து இசையமைத்திருக்கிறார் ஆர்.கே.சுந்தர்.

கரோனா பேரிடரால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு, சென்ற ஆண்டு ஷீரடியில் சாய்பாபாவின் பாடல்களை வெளியிட்டிருக்கின்றனர் சுந்தரின் நண்பர்கள். அப்போது நண்பர்களில் ஒருவரான முகமது சலாலுதீன், "முழுக்க முழுக்க சிவனின் மகிமைகளை மட்டுமே கொண்ட இசைமாலையை உருவாக்க வேண்டும். அதை நானே தயாரிக்கிறேன்" என்று சுந்தரிடம் கூறியிருக்கிறார். சொன்னபடியே மிகவும் பிரம்மாண்டமாக, சிவனின் இந்த இசை ஆல்பத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் சலாலுதீன்.

பல்வேறு வகைப்பட்ட லிங்கங்களின் அறிமுகத்தை, நிறுத்தி நிதானமான இசையின் பின்னணியில் ‘ஆலயம்தோறும்’ பாடலில் சொல்கின்றனர். ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி எனும் தத்துவத்தை விளக்குவதே லிங்க சொரூபம். இதை விளக்கும் வகையில், பாடலின் ஒவ்வொரு வரியின் தொடக்கமும் முடிவும் ஒரே ஸ்வரஸ்தானத்தில் அமைத்திருப்பதில் இசை அமைப்பாளரின் திறமை பளிச்சிடுகிறது. அதோடு, பாடலுக்கான இசையும் ஆதியும் அந்தமும் இன்றி ஒலித்து அதிசயிக்க வைக்கிறது!

அர்த்தநாரி தத்துவத்தை விளக்கும் ‘பொன்வண்ண மேனி’ எனும் பாடல், ஆண், பெண் சமத்துவத்தைப் புரியவைக்கிறது. ‘நடனத்துக்கு அரசனாக ஏன் நடராஜன் அழைக்கப்படுகிறார்?' என்பதை, புராணங்களின் துணையோடு விளக்குகிறது ‘சம்போ மகாதேவா' பாடல். ‘காசி தொடங்கி’ பாடலில் மனித உடலே சிவமாகும் எனும் தத்துவம் நம் எல்லோரின் மனங்களிலும் ஒலிக்கிறது.

‘நஞ்சு உண்ட’ எனும் சிவனடியாரின் ஆண்டிப் பாடல், சிவனுக்கு மிஞ்சிய எந்த சக்தியும் இந்த உலகில் இல்லை எனும் தத்துவ விசாரத்தை முன்வைக்கிறது. ‘கொன்றை மாலை சூடும்’ பாடல் சிவ பரிகார ஆலயங்களின் மகிமைகளையும் அந்தப் புண்ணிய ஸ்தலங்களின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறது. சிவ தாண்டவத்துக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் ‘கண்டம்’ எனும் தாளக்கட்டில் அமைந்திருக்கிறது `யார் காணக்கூடும்?’ பாடல். 108 சிவ ஸ்தலங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளிக்கிறது ‘ஓம் நமசிவாய’ எனும் பாடல். அனந்து, எஸ்.ஜே.ஜனனி, ரம்யா துரைசுவாமி, சுர்முகி, ஷிவானி ஆகியோர் ஒவ்வொரு பாடலின் தனித்தன்மையையும் உணர்ந்து உருக்கமாகப் பாடியிருக்கின்றனர்.

ஆத்ம லிங்கம் இசை மாலையைக் காண: https://www.youtube.com/watch?v=lE4B_cLuVkU

நம்பிக் கெட்டவர் எவரய்யா?

“என்னை நம்பி கெட்டவங்க யாரும் இல்லை. ஆனால் நம்பாமல் கெட்டவங்க நிறைய பேர்..." இப்படி ஒரு ‘பன்ச்’ வசனத்தை இன்றைக்குத் தங்களின் அபிமான நாயகர்கள் திரையில் பேசுவதைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ‘பன்ச்’ வசனத்தை இந்த ஈரேழு பிரபஞ்சத்துக்கும் நாயகனான சிவபெருமானுக்காகப் பாபநாசம் சிவன் எழுதியது.

‘இந்தோளம்’ எனப்படும் பாரம்பரியமான ராக அமைப்பில் இந்தப் பாடலை, வளரும் கலைஞர் வே.கார்த்திக் பாடியிருக்கும் காணொலி இது. தாளம் தப்பாமல் பாட வேண்டுமே என்ற அக்கறையோடு முனைந்திருப்பதால், கண்களைத் திறந்தால் கவனம் தப்பிவிடுமோ என்ற பயத்தில் கண்களை மூடியபடியே பாடுகிறார் கார்த்திக். ஆனால் வார்த்தைகளின் உச்சரிப்பைச் சரியாக, பதச் சேதம் இல்லாமல் பாடுவதில் அவரின் ஞானக் கண் பிரகாசமாகச் சுடர்விடுகிறது!

பிரபஞ்ச நாயகனின் புகழ்பாடும் பாடலைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=pe7rY_Mx8ZM

x