கனவுல வந்த தண்டு மாமா!


"காப்பி காப்பி காப்பி...”ன்னு ரெயில்ல கூவுறாப்ல கூவினதும் கொண்டுவந்து வச்சாங்க அம்மிணி. வழக்கமா கேட்காமலே தருவாங்க.

மகனார்க்கும் அப்பதான் காபி வந்துச்சு. அம்மிணியாவது குடிச்சாங்களான்னு டவுட் வரவும் “நீ குடிச்சியாம்மா”ன்னு குரல்ல தேனைத் தடவி விசாரிச்சேன்.

திரும்பிப் பார்த்து ஒரு லுக் விட்டாங்க. போனை எடுத்துக்கிட்டு பால்கனிப் பக்கம் போயிட்டாங்க. எனக்குள்ர ஏதோ ஒண்ணு எந்திரிச்சு பிறாண்ட ஆரம்பிச்சுது. ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டோமா. ஒரு வார நிகழ்வுகளை மனசுல ஓட்டிப் பார்த்தேன். இபிகோ எந்தப் பிரிவிலும் நான் செஞ்சது வரல.

பால்கனிக்குப் போனேன். அம்மிணி தணிஞ்ச குரல்ல இன்னமும் பேசிக்கிட்டிருந்தாங்க. ம்ம்.. ஆங்.. தவிர வேறு வார்த்தையே இல்லை. அப்புறம் ஹால்ல வந்து ஒக்காந்ததும் “என்ன ஆச்சு”ன்னு கேட்டேன்.

“தண்டு மாமா நேத்து கனவுல வந்தாரு”ன்னாங்க. தண்டபாணி மாமாவை நாங்க செல்லமா தண்டுன்னு சொல்வோம். எங்கப்பா இருந்தப்போ தண்டம்னு சொல்வாரு. தண்டு உயிரோடு இருந்தப்போ அவ்ளோ நோகடிச்சிருக்காரு எங்கப்பாவை.

“அங்கே நரகத்துல யார்கிட்டேயும் கைமாத்து வாங்க முடியலியா”ன்னு சிரிச்சேன். அம்மிணி முறைச்சாங்க. “அவரு யார்கிட்டேயும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.”

“சரி. என்னதான் சொன்னாரு”ன்னு டாபிக்கை மாத்துனேன். “ஏதோ சொன்னாரு. முழுசா புரியல. ‘மறக்காம செஞ்சிரு’ன்னு திருப்பித் திருப்பிச் சொல்லிட்டுப் போயிட்டாரு”ன்னு சோகமா முகத்தை வச்சுக்கிட்டாங்க.

“கவலையை விடு. கணேஷுக்கு போன் செஞ்சு கேட்ருவோம். மாமா சொல்லி ஏதாச்சும் பாக்கி வச்சிருக்கானான்னு.”

கணேஷ் தண்டு மாமாவுக்கு ஒரே செல்ல புத்திரன். மாமா போயிட்டார்னு வருத்தப்படவே வேணாம். அப்படியே வயசுல மினி மாமாவா, சைசுல நிஜ மாமாவா இருப்பான்.

ஸ்பீக்கர்ல போட்டேன். “முக்கியமான வேலையா இருக்கேன். அப்புறம் பேசலாமா”ன்னு எடுத்த எடுப்புல சொன்னான். கடுப்பாகி கட் செய்யப் போனேன். அம்மிணி முந்திக்கிட்டாங்க.

“கணேசு.. மாமா என் கனவுல வந்தாருடா...”

இதைக் கொஞ்சம் அழுகை கொஞ்சம் சிரிப்போட அம்மிணி சொன்னதும், எதிர்முனைல கணேஷ் உஷாராயிட்டான்னு புரிஞ்சுது.

“இவரு வெட்டியா போன் செஞ்சிட்டார்னு நினைச்சேன்க்கா. என்னது.. அப்பாவா.. கனவுல வந்தாரா... என் கனவுல கூட இது வரைக்கும் வந்ததில்ல. நீன்னா அவருக்கு உசுராச்சே.”

இவன் மட்டும் கொத்தனாராப் போயிருந்தா மணல்லயே வீடு கட்டிருவான். உணர்ச்சிக் கலவையை கரெக்டா போட்டுப் பேசவும் அம்மிணிக்கு இன்னும் குஷி.

“ஆமாடா... கிச்சன்ல வந்து நிக்கிறாரு. அவர் வந்ததை நான் முதல்ல கவனிக்கல. ‘காபி கிடையாதா’ன்னு குரல் கேக்கவும் நம்ம தண்டு மாமாவாச்சேன்னு திரும்புனா, அதே சிரிப்போட எதிர்ல.”

கணேஷ் கிளிசரின் போடாமலே அழுதது நல்லா கேட்டுச்சு. “அக்கா இப்பவே அங்கே வரணும்போல இருக்கு. கிச்சனுக்கு வரணும்”னு சொல்லவும் எனக்கு பகீர்னுச்சு.

கணேஷ் அழுகையை அடக்கிக்கிட்டு விசாரிச்சான். “வேற ஏதாச்சும் சொன்னாராக்கா.”

அவரு போனப்பவே பதறிக்கிட்டு இருந்தான். “அப்பா யாருக்காச்சும் கைமாத்து கொடுத்திருக்காரான்னு தெரியல. எழுதியும் வைக்க மாட்டாரு. வாங்கினவங்களாப் பார்த்து நேர்மையா திருப்பிக் கொடுத்தாத்தான் உண்டு”ன்னு சத்தமா சொன்னான்.

தண்டு மாமா எப்பவுமே ஒன் வே தான். அவர் வாங்கினது மட்டும்தான். அதை எப்படி சத்தமா சொல்றது. அவருக்குக் கொடுத்தவங்க கணேஷ் செஞ்ச ஆர்ப்பாட்டம் பார்த்து, அப்போ பேசாமப் போயிட்டாங்க. அப்புறம் மிரட்டி, அவங்க கொடுத்த கடனைத் திருப்பி வாங்கிட்டாங்கன்னு தகவல் வந்துச்சு.

அன்னிலேர்ந்து கணேஷுக்கு வெறி கிளம்பிருச்சு. மாமா யாருக்காச்சும் கைமாத்து கொடுத்திருப்பாருன்னு ரொம்பவே நம்பிக்கிட்டு, வீட்டையே தலைகீழாப் புரட்டினானாம். சின்னதா ஒரு தடயம் கூடக் கிடைக்கல.

“என்னவோ சொன்னாரு. ஆனா, எந்திரிச்ச பிறகு என்ன யோசிச்சாலும் ஞாபகம் வரல.”

கணேஷ் மரப்பல்லி ரேஞ்சுக்கு உச்சுக் கொட்டினான். “திருப்பி தூங்கியிருக்கலாம்ல. மறுபடி கனவுல வந்திருப்பார்ல.”

“இவரு விட்ட குறட்டைல தூக்கம் வரல”ன்னு என்னைய மாட்டி விட்டாங்க.

“நல்லா யோசிங்கக்கா. எனக்கு என்னவோ ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கார்னு தோணுது. நான் ஈவ்னிங் போன் செய்யறேன்”னு வச்சுட்டான்.

அம்மிணி இன்னிக்கு சமைப்பாங்களான்னு டவுட் வந்திருச்சு. ஒக்காந்து கண்ணை மூடிப் பார்த்தாங்க. எந்திரிச்சு பழைய டைரிய புரட்டுனாங்க. “ஒங்களுக்கு ஏதாச்சும் தோணுதா”ன்னு என்னைப் பிறாண்டுனாங்க.

எனக்குப் பசிதான் வயித்தைக் கிள்ளுச்சு. அதைச் சொன்னா பாட்டு விழும்னு, நானும் கண்ணை மூடி யோசிச்சேன். நல்லா தூக்கம்தான் வந்துச்சு.

அம்மிணிக்கு போன் அடிச்சுது.

“இல்லைடா. எதுவும் ஞாபகம் வரல”ன்னு சொன்னது கேட்டுச்சு. கணேஷுக்கு இனி இதுதான் பொழப்பா இருக்கும்னு தோணுச்சு.

அடுத்த போன் அம்மிணிக்கு. “என்னது... அவனே சொன்னானா. நான் அப்படிச் சொல்லவே இல்லியே”ன்னு பாதி புலம்பலா பாதி கோவமாப் பேசுனாங்க.

அடுத்த ஒரு மணி நேரம் விடாம போன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. அம்மிணியோட சொந்த பந்தம் பெருசு. ஏதோ ஒண்ணு தீ மாதிரி பரவியிருக்குன்னு மட்டும் புரிஞ்சுது.

அம்மிணி ஓஞ்சு போய் ஒக்காந்துட்டாங்க. மகனார்க்கே கவலை ஆயிருச்சு. ரெண்டு பேரும் ரெண்டு பக்கம் நின்னுக்கிட்டு ரெண்டு கையையும் பிடிச்சுக்கிட்டோம்.

“இவன் அடிச்சிருக்கிற கூத்தைக் கேட்டிங்களா...”ன்னு மெல்ல ஆரம்பிச்சாங்க. போனும் அடிச்சுது. கணேஷ் தான்.

“எடுக்காதீங்க. கெட்ட பய. இவனைப் போய் நம்பி என் கனவைச் சொன்னேனே.”

அம்மிணிக்கு ஆவேசமே வந்துருச்சு.

“எல்லா சொந்தத்துக்கிட்டேயும் சொல்லி இருக்கான். தண்டு மாமா நமக்குக் கைமாத்தா ஆயிரக் கணக்குல கொடுத்திருந்தாராம்.. நம்மால எப்போ முடியுமோ அப்போ திருப்பிக் கொடுன்னு. இப்போ கனவுல வந்து, ‘கணேஷ் கஷ்டப்படுறான்... அதைத் திருப்பிக் கொடு. மொத்தமா இல்லாட்டியும் பாதிப் பாதியாவாச்சும்’ன்னு சொன்னாராம். நானே அதை அவனைக் கூப்பிட்டு சொன்னேன்னு, நான் பேசுனதை ரெகார்ட் செஞ்சு எடிட்டும் செஞ்சு வாய்ஸ்ல அனுப்பி இருக்கான். இவன் புத்தி தெரியாம நானே வம்பா போய் மாட்டிக்கிட்டேனே.”

எனக்கு சூடா ஒரு காபி சாப்பிடணும் போல தோணுச்சு!

x