நிழற்சாலை


மழைப் புகார்

வானிலிருந்து

வந்து விழுந்த சில

நொடியோ நிமிடமோ

ஓடி ஒளிந்துகொள்ள

இடம் தேடும் எமக்குக்

கண்ணில் படுவதெல்லாம்

கட்டிடம் ஆக்கிரமிப்புகள்

வீதிக்கு வீதி வீடென

அணை கட்டி

தேக்கிவைக்கிறீர்

எந்தத் திசை ஓடுவது

எனக்கும்

மூச்சு முட்டுகிறது!

- சசிந்திரன்

கருணை

நெரிசலான சாலையில் ஈடுகொடுக்க முடியாமல்

ஓரத்தில் நகர்கிறது

மறுவாழ்வு இல்ல வாகனம்

கால்களைத் தொங்கலிட்டபடி

'ஒளிமயமான எதிர்கால’த்தை

பின்னணியில்

இசையொலிக்க

குரல் உடைந்து பாடுகிறான் அவன்

உண்டியல் நீட்டிய திசையில்

காதுகளால் உன்னிப்பாகப் பார்க்கிறாள் உடனிருப்பவள்

தயக்கம் விலகி

கருணை சுரக்க

தேவையாயிருக்கிறது

முதலில் நீளும் கரமொன்று

டிராஃபிக் விலகும் கணம்வரை ஆக்ஸிலேட்டருக்கும்

சட்டைப்பைக்கும் இடையில் ஊசலாடும்

உங்கள் பரிதாபத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

அதே வண்டிக்குள்

கிண்ணத்தில் பால்

அருந்திக்கொண்டிருக்கிறது ஒற்றைப்பூனை.

-ந.சிவநேசன்

தனிவீடு

ஆலஞ்செடியை வளர்த்து

ஆளாக்கிக்கொண்டிருக்கிறது

அந்தத் தனிவீடு

ஒவ்வொரு விரிசலுக்கும்

புதுத் தளிர் ஒன்றைப்

பரிசளித்தபடியே இருக்கிறது செடிக்கு

பழமையின் நெஞ்சைப் பிளந்தவாறே

உள்ளிறங்கும் வேர்களை

வஞ்சம் ஏதுமின்றி வாங்கிக்கொள்கிறது சுவர்

விழுதுகள் பூமி தொடத் தவிக்கும்

அந்நாளில் தரைபடர்ந்து வழிவிடக் கூடும்

அன்பாலான அந்தக் கட்டிடம்.

-கி.சரஸ்வதி

காலத்தின் பகல் பொழுதுகள்

உடைந்த கூண்டின்

மீது நன்றி மறவாமல்

அமர்ந்துவிட்டுச்

செல்கிறது கிளி


விற்ற வீட்டின் பக்கம்

செல்லும்போதெல்லாம்

தலை நிமிராமல் நான்!


வழி நெடுகக் குடிநீரை

இறைத்துச் செல்லும்

பெருலாரியினை முந்திக்கொண்டு பறந்து

தாகம் தீர்க்க எத்தனிக்கும்

சிறு குருவிக்காக

சில நொடிகள்

தாமதிக்கிறது

காலம்.

- ரகுநாத் வ

மழைவாழ் மனிதர்கள்

வயிற்றின் மீது வீழ்கின்ற
மழைத்துளிகளைப் பொருட்படுத்தாமல்
பூ விற்பனை செய்யும் வெற்றுடம்புச் சிறுமி
உதிர்ந்த மலரொன்றைப் பரிசளிக்கிறாள் மழைக்கு

கடைத்தெரு வந்த ஒரு குடும்பத்திடம்

‘கைப்புள்ளையை நனையாம

கொண்டுபோ தாயீ’ என

வாஞ்சையோடு வழியனுப்புகிறாள்

பாய் விற்கும் கிழவி

காருக்குள் போவதற்கு

குடையெடுத்து வராது மறந்துபோன

சீமாட்டியொருத்தி யுகமழையை
பெருஞ்சொற்களால் திட்டித்தீர்க்கிறாள்
விழா நாட்களில்
வந்துவிடுகின்ற பெருமழைகள் அல்லது
தொடர் மழைகள்
அநாதைக் குழந்தைகள்

தங்கள் வாசல்களில் வந்து நின்று யாசகம் கேட்டு

அழுவதைப் போலிருக்கிறது
நகரவாசிகளுக்கு.

- சுரேஷ் சூர்யா

வேட்டை

பறவைக்குக் கண்ணி

மீன்களுக்குத் தூண்டில்

எலிக்குப் பொறி

பாம்புக்கு மகுடி

யானைக்குக் குழி

பிற விலங்குகளுக்கு

வலை

மனிதனுக்கோ

‘உங்களைப் போல வருமா?’

என்ற

ஒற்றைப் பொய்.

- ப்ரணா

சலனமற்ற சன்னல்

ஓடும் தொடர் வண்டியில்

கழிப்பறை கதவருகே ஒடுங்கியிருந்த

சிறுவனின் மனக்கனவில்

காடும் மலையும் கடக்கும் ஆறும்

அதிவேகமாய் விரைந்துகொண்டிருக்க

காலியான சன்னல் இருக்கைக்குத் தாவியபோது

இறங்க வேண்டிய நிறுத்தம் வர

அத்தனை ஆசைகளும்

அசையாமல் நின்றன

சன்னலுக்கு வெளியே.

- காசாவயல் கண்ணன்

பால்யத்தின் வாசம்

மிக்சிங்கிற்குத் தண்ணீர் பாட்டில்

தாமதமானதில் அறைபட்ட

சிறுவன் கன்னம் ரத்த நிறம்.

சலனமில்லா சககுடிமகன்கள்

அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகின்றனர்

அடிவாங்கிய சிறுவனை

சமாதானப்படுத்தும்போது

நியூ இயருக்கு லீவு

விடுவாங்களாண்ணா என்கிறான்

கையில் பம்பரத்தை

மறைத்துக்கொண்டு.

- ஆனந்தகுமார்

கவசம்

ஒவ்வாததை விமர்சித்து

முனகலாம் ஆட்சேபமில்லை.

பிடித்த பாடலைப் பாடலாம்

வெட்கப்படத் தேவையில்லை.

பிடிக்காதவனைக் குறைந்த ஸ்தாயியில்

திட்டலாம்

அச்சம் அவசியமில்லை.

வாயின் யாதொரு

அசைவு மொழிக்கும்

சர்வ சுதந்திரம்.

உறுத்தல் தருவதற்கு

உபகாரமாக

சில நன்மைகளையும்

செய்கிறது முகக்கவசம்

கிருமி தொற்றிலிருந்து

காபந்து என்ற ஒன்றோடு

மட்டும் நின்றிடாமல்!

- வீ.விஷ்ணுகுமார்

x