லென்ஸ் சிமிட்டும் நேரம் - 14


ஒரே கல்லில் ஆன நந்தி

தீபாவளிக்கு வீட்டில் உட்கார்ந்து டிவி பார்ப்பதைத்தான் இன்றைக்கும் சில மக்கள் பிரதானமாய் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அது போரடிக்கும் விஷயம். அதனால், தீபாவளி நாளில் எங்காவது பக்கத்து ஊர்களுக்கு மினி ட்ரிப் அடித்துவிடுவோம். அப்படித்தான் ஒரு தீபாவளிக்கு எங்கு செல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென நினைவுக்கு வந்தது ‘லெபக் ஷி’.

பெங்களூரு - ஹைதராபாத் சாலையில் 120 கி.மீ. தொலைவில், கர்நாடக எல்லையின் முடிவில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது லெபக் ஷி. பெங்களூருவை விட்டு காரை ஒரே அழுத்தாய் அழுத்தினால், அடுத்த 2 மணி நேரத்தில் அங்கே இருக்கலாம்.

லெபக் ஷியில் உள்ள வீரபத்திரர் கோயில் விஜயநகர கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டதாகும். இது, அகஸ்திய மாமுனியால் கட்டப்பட்டதாக ஒரு ஐதீக நம்பிக்கை. இருந்தாலும் தற்போது இருப்பது, 16-ம் நூற்றாண்டில் வீரண்ணா மற்றும் விருபண்ணா சகோதரர்களால் விஸ்தரிக்கப்பட்ட கோயிலாகும்.

வீரண்ணாவும் விருபண்ணாவும், விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பெனுகொண்டாவின் கருவூலதாரராக இருந்தவர்கள். இந்தக் கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் ஒரே பாறையில் கட்டப்பட்டி ருக்கிறது. எந்த அஸ்திவாரமும் போடப்படவில்லை என எங்களுக்கு ஸ்தல வரலாறு சொன்ன வழிகாட்டி கூறினார்.

கோயிலின் உள்ளே நுழைந்ததுமே, அழகான நாட்டிய அரங்கும் அதில் கலைநயத்துடன் செதுக்கி இருக்கும் சிற்பங்களும் நம்மை வரவேற்கின்றன. அரங்கின் மேற்கூரையிலும் அழகழகான ஓவியங்கள். அத்தனையும் மூலிகை வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. உரல் போன்றதொரு அமைப்பு கோயில் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது. அதில் காய்கனி மற்றும் செடிகொடிகளை அரைத்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட வண்ணச் சாறுகளைக் கொண்டே இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள்.

இந்த அரங்கில் காணப்படும் தூண்களில் ஒன்று அடித்தளத்தில் உட்காராமல், மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கிய பிரம்மாண்டமான 7 தலைகள் கொண்ட நாகலிங்கச் சிலை ஒன்றும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. இந்தச் சிலை உருவான சுவாரசியத்தையும் வழிகாட்டி எங்களுக்கு அழகாய் விவரித்தார்.

இந்தச் சிலையைச் செதுக்கிய சிற்பிகள், தங்களின் தாயார் தங்களுக்கு மதிய சாப்பாடு தயார் செய்வதற்குள் வடித்தார்களாம். சமையல் வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த தாய் அதிசயித்துப் போனாராம். அவரது கண்திருஷ்டி பட்டு, சிலையின் 2 இடங்களில் விரிசல் வந்துவிட்டதாம்.

இந்தச் சிலையின் பின்புறத்தில் பெரிய விநாயகர் சிலை இருக்கிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் தொடங்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக, இக்கோயிலைக் கட்டும் முன்பாக இந்த விநாயகரை செதுக்கி இருக்கிறார்கள் சிற்பிகள்.

இங்கு வரும் மக்களை ஈர்க்கும் மற்றுமொரு விஷயம்... வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சரியாக கட்டப்படாத, பாதியில் நின்று போன திறந்தவெளி கல்யாண மண்டபம். இந்த மண்டபத்தின் தூண்களில் பல்வேறு கடவுள்களின் உருவங்களை அழகாக கலைநயம் பட செதுக்கி வைத்துள்ளனர்.

கல்யாண மண்டபம் ஏன் பாதியில் நின்று போனது என்பதற்கான காரணத்தையும் வழிகாட்டி விளக்கினார். விருபண்ணா கருவூல பொறுப்பாளராக இருந்த காலத்தில், கோயில் கட்டுவதாகக் கூறி பணத்தை விரயம் செய்வதாக மன்னரிடம் சிலர் புகார் செய்தார்களாம். இதை தீர விசாரிக்காத மன்னர், விருபண்ணாவின் கண்களை பிடுங்கிவிடும்படி உத்தரவிட்டாராம். மன்னரின் உத்தரவைக் கேள்விப்பட்ட விருபண்ணா, தானே தனது கண்களை பிடுங்கி எறிந்துள்ளார். ஆதலால், கல்யாண மண்டபமும் பாதியில் நின்று போனதாம். விருபண்ணா தனது கண்களை வீசி எறிந்த இடம் இன்னமும் ரத்தக்கறையுடன் காணப்படுகிறது

நவம்பர் மாதத்து வெயில் இதமாக இருந்ததால், வெளிப்பிரகாரத்தில் சற்று சிரமமில்லாமல் நடக்க முடிந்தது. அப்படி நடக்கும் பொழுது, பெரிய கால்தடம் ஒன்றையும் அதில் எப்போதும் நீர் வற்றாமல் இருந்ததால் வளர்ந்த பூஞ்சையையும் பார்த்தோம். அது சீதையின் பாதம் என்றும், சீதையை ராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்றபோது, ஜடாயு என்ற பறவை ராவணனை வழிமறித்து சண்டையிட்டது நம் அனைவருக்கும் தெரியும். அந்தச் சண்டை நடந்ததாகப் பல ஸ்தலங்களை குறிப்பிட்டுச் சொல்லுவார்கள். இந்த ஸ்தலத்திலும் அந்தச் சண்டை நடந்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஜடாயு ராவணனால் காயப்படுத்தப்பட்டு தரையில் விழுந்தபின் சீதை தன் பாதத்தை கல்லின் மேல் பதித்து, அதில் எப்பொழுதும் தண்ணீர் சுரக்கும்படி செய்ததாகவும், அந்த தண்ணீரைக் குடித்துவிட்டு ஜடாயு, ராமபிரான் வரும்வரை உயிர் பிழைத்திருந்து அவரிடம் விஷயத்தைக் கூறியதாகவும் நம்பப்படுகிறது.

இந்தக் கதைகள் அனைத்தையும் நம்மால் நம்ப முடியாவிட்டாலும், புராணக் கதைகளை சிறுவயது முதலே நாம் கேட்டுப் பழக்கப்பட்டதால் இந்தக் கதைகளும் சுவாரசியமாகவே இருந்தன.

x