முதுகுவலி ஊசியும், வயிற்றுக்கு பெல்ட்டும்! : அவ(ள்) நம்பிக்கைகள்-16


நம்பிக்கை :

"பிரசவத்தின்போது முதுகில் போடப்படும் ஊசியின் வலி, வாழ்நாள் முழுதும் முதுகில் நீடிக்கும்..?”

உண்மை :

சிறு வயதில் போட்ட தடுப்பூசி... அட... அது கூட வேண்டாம். சமீபத்தில் கரோனாவுக்கு உங்கள் கையில் செலுத்தப்பட்ட தடுப்பூசி இப்பவும் உங்களுக்கு வலி ஏற்படுத்துகிறதா? இல்லைதானே! பிறகு, தண்டுவடத்தில் போடும் ஊசி மட்டும் எப்படி வலிக்கும்?

உண்மையில் உங்கள் கையில் போடப்படும் ஊசியை விட மிக மெல்லிய அளவிலான (23 அல்லது 25 G), மயிரிழை போன்ற ஊசி மட்டுமே முதுகில் போடப் பயன்படுத்தப்படுகிறது. அதை செலுத்தும்போதே வலி தெரியாது எனும்போது, போட்ட நெடுநாட்களுக்குப் பிறகு மட்டும் எப்படி வலிக்கும்?

ஆனால், பிரசவத்துக்குப் பிறகும் முதுகு வலிக்கிறதே அது எதனால் என்ற சந்தேகம் வரக்கூடும். உண்மையில் கர்ப்ப காலத்தில் அதிகம் விரிவடையும் தண்டுவடம், இடுப்பு மற்றும் தொடைகளின் தசைகளும், தசைநார்களும், பிரசவத்துக்குப் பின் பழைய நிலைக்கு முற்றிலும் திரும்புவதில்லை. என்றாலும், தொடர்ந்து தகுந்த உடற்பயிற்சிகள் மூலம் அதை பழைய நிலைக்குக் கொண்டு வருவது அவசியம் என்பதுடன், அதை நாங்கள் பரிந்துரைத்தும் வருகிறோம்.

ஆனால், பிரசவத்துக்குப் பிறகு தொடர் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும், உணவு முறைகள் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்களால்தான் முதுகுவலி வருகிறதே தவிர்த்து, தண்டுவட ஊசி இதற்குக் காரணம் இல்லை என்பதே உண்மை.

இதில் இன்னும் முக்கியமாய் கவனிக்க வேண்டியது, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, உடலில் சுரக்கும் ’என்டார்ஃபின்கள்’ எனும் நரம்பியல் வேதிப்பொருள் உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதுடன், பெரும் வலி நிவாரணியாகவும் விளங்குகின்றன என்பதால், உடற்பயிற்சிகள் முற்றிலும் முதுகுவலியைப் போக்கிவிடும்.

நம்பிக்கை :

"பிரசவத்துக்குப் பிறகு வயித்துக்கு பெல்ட் போட்டா, வயிறு குறைஞ்சுடும்."

உண்மை :

Abdominal Corset என அழைக்கப்படும் வயிற்றுக்கான பெல்ட்டுகள், உண்மையில் நீங்கள் சாதாரணமாக வயிற்றுக்கு மேல் அணியும் பாவாடை அல்லது பேன்ட்-க்கு சமமானவையே.

இந்த பெல்ட்டை அணிந்திருக்கும்போது வயிறு உள்ளடங்கியதுபோல் காட்சி தருமே அன்றி, வயிற்றை இதனால் குறைக்க முடியாது.

முன்பு சொன்னதுபோல் தொடர் உடற்பயிற்சிகளும், உணவு முறைகளும் மட்டுமே பிரசவத்துக்குப் பின்பு வயிற்றைக் குறைக்கவும், முதுகுவலியைப் போக்கவும் உதவுமே தவிர, பெல்ட் எந்த விதத்திலும் உதவாது என்பதைத் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

x