லென்ஸ் சிமிட்டும் நேரம் - 13


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்திரை திருவிழாவுக்காக மதுரை சென்றிருந்தேன். திருவிழாவுக்காக வைகையில் தண்ணீர் திறந்து விட்டிருந்தனர். நீண்டநாள் கழித்து வழிந்தோடிய வைகையைப் பார்த்தபோது, சந்தோஷமாக இருந்தது. அழகரை தூரத்தில் இருந்துதான் படமெடுக்க முடிந்தது. அவ்வளவு கூட்டம்.

அழகர் திருவிழாவுக்கு மாத்திரமல்ல... இன்னும் பல விஷயங்களுக்கும் பெயர் பெற்றது மதுரை. மணக்கும் மல்லி வகை வகையான உணவுகள், ஜிகர்தண்டா என மதுரையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் சுங்குடிப் புடவைகளும் உண்டு. வெயில் காலத்துக்கு ஏற்ற உடை சுங்குடிப் புடவை. அந்தப் புடவையை கட்டிப் பழகிய எனக்கு, அது நெய்யும் இடத்தையும் பார்க்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு ஆசை. இந்தப் பயணத்தில் அதுவும் சாத்தியமானது.

எனது சித்தப்பா நெசவுத் தொழிலில் இருந்ததால், தனது நண்பர்கள் சிலரது பட்டறைக்கு என்னை அழைத்துச் சென்றார் . வெளிச்சம் குறைவாக இருந்ததால் படங்கள் சற்று சுமாராகத்தான் வந்தன.

புடவையில் டிசைன் செய்து, பின்பு சாயம் போடுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் புரிந்துகொள்ளச் சற்று கடினமாகத்தான் இருந்தது. கைமுடிச்சு மற்றும் மெழுகில் டிசைன் செய்வது, வண்ணங்களை சேலையில் சாயமிடுவது போன்றவைகளை வரிசையாகப் படமெடுத்தேன்.

சித்தப்பா ரிட்டையர்ட் ஆகிவிட்டார். என்றாலும், அவர் பார்த்துவந்த வேலைகளை மற்றவர்கள் செய்வதைப் பார்த்தவுடன், அவரால் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க முடியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார். பழைய நண்பர்கள் கூடியதும் தங்களது மலரும் நினைவுகளைப் பேச ஆரம்பித்து விட்டனர். அந்தக் காலத்தில் பெண்கள் இந்த வேலைக்கு அதிகம் வரமாட்டார்களாம். காலப் போக்கில்தான் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தார்களாம்.

இது கொஞ்சம் சவாலான வேலை என்பதால், நெசவுத் தொழிலில் இருப்போரின் வாரிசுகளில் பெரும்பகுதியினர் இந்தத் தொழிலை அவ்வளவாய் விரும்புவதில்லை. கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், படித்துவிட்டு சென்னையிலோ பெங்களூருவிலோ வேலையில் செட்டிலாகிவிடுகிறார்கள். இது அவர்களின் பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், பரம்பரையாய் பார்த்து வந்த இந்தத் தொழில் தங்களோடு முடிந்துவிடுகிறதே என்ற மன வருத்தமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது.

x