சிசேரியனா, சுகப்பிரசவமா எது வலியற்றது? : அவ(ள்) நம்பிக்கைகள்- 15


நம்பிக்கை :

"சிசேரியன் பிரசவம், சுகப்பிரசவத்தை விட சுலபமானது!?"

உண்மை :

இப்படி தாயும், குடும்பத்தாருமே நினைப்பது இப்போது அதிகரித்து வருகிறது. உண்மையில் மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்காயும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும் என்பது சொல்லிலும், நெல்லியிலும் மட்டுமல்ல சுகப்பிரசவத்திலும்தான்.

சமீப காலமாக, குழந்தையின்மைக்கான சிகிச்சைக்குப் பின் கருத்தரிப்பு, உடற்பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இரட்டை கர்ப்பம், இருதய நோய் போன்ற காரணங்களாலும், செட்டிலான பிறகே திருமணம் என்று கர்ப்பம் மற்றும் பிரசவத்தில் அதிகரிக்கும் தாயின் வயது காரணமாகவும், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. "பிரசவ வலி தாங்க முடியல..." என்று சிசேரியன் அறுவை சிகிச்சையைத் தாங்களாகவே தேர்ந்தெடுப்பவர்களும் இன்று அதிகம் உள்ளனர்.

அவர்களுக்கான அறிவுரைதான் இன்றைய முதுநெல்லி :

-முதலில் கர்ப்பகாலத்தையும், பேறு காலத்தையும் அச்சத்துடன் எதிர்நோக்காமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

-கர்ப்பகால உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

-சுகப்பிரசவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தாய் உணர்ந்து கொள்ளும் அதேவேளையில், சிசேரியன் அறுவை சிகிச்சையில் உள்ள பாதிப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

-எல்லாவற்றுக்கும் மேலாக, Epidural Analgesia எனப்படும் வலியில்லாப் பிரசவ முறையைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

இவையனைத்தும் சுகப்பிரசவத்துக்கான தீர்வுகளாக இருப்பதுடன், சிசேரியன் என்பதைப் பெருமளவு தவிர்க்கவும் உதவுகின்றன.

வலியில்லாமல் பிரசவம் சாத்தியம் என்ற நிலை இன்று பரவலான பிறகும், வேறு வழியில்லாததுபோல் சிசேரியனைத் தேர்ந்தெடுப்பதை தவிர்க்கலாம்!

நம்பிக்கை :

"வலியோடு குழந்தையைப் பெற்றால் பாசம் அதிகமாக இருக்கும்?”

உண்மை :

வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தாய்ப்பாசத்துக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.

Epidural Analgesia எனும் வலியில்லாப் பிரசவம் மூலமாக, சிரித்துக் கொண்டே குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் இன்றைய தாய்மார்களும் தங்கள் குழந்தையை பார்த்துக் கொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை என்பதே உண்மை.

x