லென்ஸ் சிமிட்டும் நேரம் - 12


பூக்களை படமெடுப்பதில் எனக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உண்டோ அதே அளவுக்கு சோழர்கள், ஹொய்சாளர்கள் மற்றும் விஜய நகரப் பேரரசின் கட்டிடக்கலைக்கு அடையாளமான புராதன சின்னங்களை படமெடுப்பதிலும் ஆர்வம். சோழர்களின் கட்டிடக்கலைக்கு தஞ்சை, தாராசுரம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள் மிகச் சிறந்த சான்றுகள்.

இந்தக் கோயில்களுக்குச் சென்றபோது, நான் ரசித்து எடுத்த சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கோடை விடுமுறையில் பிள்ளைகளை சுவாரஸ்யமான ஓர் இடத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென தீர்மானித்து, தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தேர்வு செய்தோம்.

கும்பகோணத்திலிருந்து 5 கி .மீ. தொலைவில் இருக்கிறது தாராசுரம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜ சோழனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பெற்றுள்ளது. சிறிய கோயில் தான் என்றாலும் அங்கிருக்கும் சிற்பங்களும், அதன் வேலைப்பாடுகளும் மனதைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

கோயிலின் பிரதான மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தை தேர் வடிவிலும், அதைப் பாய்ந்து செல்லும் 2 குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போலவும் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். மண்டபத்தின் தூண்களில் சோழர்களின் புலிச் சின்னங்களை மறந்துவிடவில்லை. அங்கிருக்கும் பிற தூண்களிலும் சின்னச் சின்னதாய் ஏகப்பட்டச் சிற்பங்கள். ஆங்காங்கே புத்தர் சிலையும் தென்படுகின்றன.

இங்குள்ள ஓர் படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவரில் குஞ்சரக்காளை எனும் சிற்பத்தைக் காணலாம். காளை உடலும், யானை உடலும் தலைப்பகுதியில் ஒன்று சேர்வதைப் போல் காணப்படும் இவ்வகையான சிற்பம் அரிதானவை.

வாலி, சுக்ரீவன் ஆகியோருடைய சண்டைக் காட்சியும் அப்பொழுது மறைமுகமாக தாக்கிய ராமனின் சிற்பமும் இங்கு இடம்பெற்றுள்ளன. தாராசுரத்தின் அழகிய சிற்பங்களை ரசித்துவிட்டு, பின்பு தஞ்சை பெரிய கோயிலுக்குப் புறப்பட்டோம்.

தஞ்சாவூரில் வண்டியிலிருந்து இறங்கி சாலையை கடக்கும் பொழுதே, பிரம்மாண்டமான கேரளாந்தகன் திருவாயில் எங்களை வரவேற்றது. அதுவரை போட்டோவாக மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோயிலை, முதன் முதலில் நேரில் பார்த்த போது சற்றே பிரமித்துப்போனேன். வெயில் சுள்ளென்று சுட்டெரித்தது. ஆகையால் கோயிலில் கூட்டமும் குறைவாகவே இருந்தது. எதை எடுப்பது எதை விடுவது எனத் தெரியாமல், அங்கே கண்ணில் பட்டதை எல்லாம் க்ளிக்கித் தள்ளினேன்.

அடுத்து, கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் அங்கு சென்ற போது, நேரம் மதியத்தைக் கடந்திருந்தது. சில காலம் சோழர்களின் மாற்றுத் தலைநகரமாக திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் இன்னமும் கம்பீரம் குறையாமல் நிற்கிறது. தஞ்சை பெரிய கோயிலும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், ஆங்காங்கே சில வேறுபாடுகள்.

வெயில் காரணமாக அங்கே என்னால் அதிகமான படங்களை எடுக்கமுடியவில்லை. ஆனாலும், சக புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்களைப் பார்த்து நான் இன்ஸ்பயர் ஆகியிருந்த சிற்பங்களை மட்டும் மறக்காமல் படம்பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

x