அடிமைத்தளையில் ஆதிக்குடிகள்; நம் பார்வை எங்கே தவறுகிறது?


சமூகத்தின் கடைநிலையில், சமவெளிகளில் சமூகத் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் பூர்வகுடிகளின் உயர் வாழ்வியல் பண்புகளையும், அவர்களுக்கு இன்றளவும் தொடரும் அநீதிகளை, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சினிமா எனும் காட்சி ஊடகம் வழியே அப்பட்டமாய் பேசுகிறது ‘ஜெய் பீம்’.

‘ஜெய் பீம்’ காண்போரைக் கலங்கவைத்தது மட்டுமின்றி, மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இன்னமும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாத, விளங்க முடியாத புதிராகவே உள்ள பழங்குடிகளின் உலகளாவிய பார்வையையும், அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியையும் ஜெய் பீம் காட்சிகளால், வசனங்களால், இசையால், மவுனத்தால், உணர்வால் முழுமையாகக் கடத்தி இருக்கிறது.

பழங்குடிகள் என்றால், மலைகளில்தான் வசிப்பார்கள் எனும் பொதுவான எண்ணம் சமவெளியில் வாழ்வோருக்கு உண்டு. எங்கோ மலைகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி ஓரளவு தெரிந்தவர்கள்கூட, தங்கள் அருகாமையில் வாழும் சமவெளி பழங்குடிகளைப் பற்றி அறியாமல் வாழ்வது விநோதமானது; துரதிருஷ்டவசமானது. சமவெளியில் நமக்கு மிக அருகில் பொதுச்சொத்து ஆதாரங்களான நிலம், நீர், வனத்தையொட்டிய முல்லை நிலம் ஆகியவற்றை தாயாக, தெய்வமாக வணங்கி தனித்துவமாக வாழ்பவர்கள் சமவெளி இருளர்கள். ஆனால், வனத்தில் வாழும் இருளர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே நம்மில் சிலரின் கருத்தாக உள்ளது.

இருளர்கள் இன்றைக்கும் பிற சமூகங்களிடம் இருந்து முற்றிலும் விலகி ஊருக்கு ஒதுக்குப்புறங்களில், நீர் ஆதாரங்கள், கடற்கரையோரங்கள், சிறு குன்றுகள் போன்ற தனித்தப் பிரதேசங்களில் பல தலைமுறையாக வாழ்கிறார்கள். வேட்டையாடுதல், எலி பிடித்தல், பாம்பு பிடித்தல், மூலிகை மருத்துவம், நீர் நிலைகளில் மீன் பிடித்தல் என இருளர்கள் சமவெளி பொதுச்சொத்துகளை நம்பி வாழும் ஆசைகளற்ற எளிமையான பூர்வகுடிகள்.

சந்தைக்காக எதையும் உற்பத்தி செய்யாதவர்கள் மட்டுமின்றி, தனியுடைமையில் நம்பிக்கையற்றவர்கள். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கல் சூழலில் இவர்கள் சார்ந்து வாழ்ந்துவரும் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் தனிநபர்கள், பெருமுதலாளிகளின் கரங்களுக்குச் செல்வது தொடர்கதையாகிறது. இதனால், இருளர் பழங்குடி மக்களின் கழுத்து நெரிக்கப்படுகிறது. வளர்ச்சியில் ஆர்வம் இல்லாதவர்கள், பிற்போக்கானவர்கள், வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாதவர்கள் என இருளர்கள் மீது முத்திரை குத்தப்படுகிறது. அதுவே ஒருகட்டத்தில், இருளர் மக்கள் பல இடங்களில் முன்பணம் பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக தங்கள் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தளையில் சிக்கித் தவிக்கக் காரணமாகி விட்டது.

செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல் குவாரிகள், கரும்பு வயல்கள், தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் இருளர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள், கொடுமைகள், பாலியல் சித்ரவதைகள் கணக்கில் அடங்காதவை. அதையெல்லாம், ஜெய் பீம் போல எத்தனை படங்கள் எடுத்தாலும் முழுமையாகச் சொல்லிமுடித்துவிட முடியாது. சமவெளியில் வாழும் இருளர்கள், இப்போதும் இனச் சான்றிதழ் பெறமுடியாமல் தவிப்பதாலேயே, கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தொடர்ந்து அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

நகைகளை களவுகொடுத்த பஞ்சாயத்து தலைவரின் மனைவியிடம், “நானும் உங்க ஊர்காரன்தாம்மா, என்னைப் போய் திருடன்னு சொல்றீங்களே...” என்று ராஜாக்கண்ணு சொல்லும்போது, “ஏண்டா... நானும் நீயும் ஒண்ணாடா?” என்று கேட்பது, எத்தனை பெரிய கொடுமை. இப்படித்தான் பல இடங்களில், இருளர் குடிகளை கிராமத்தோடு சேர்க்காமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். பல இருளர் குடியிருப்புகள் கிராம வரையறையில் சேராமல் வெறும் குடியிருப்பாகவும், குடியிருக்கும் குடிசைக்கு நிலப் பட்டா இல்லாமலும் வாழ்கின்றனர்.

அடிப்படையில், இருளர்கள் பேரன்பையும், சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டவர்கள். வேலை பார்க்கும் இடங்களில்கூட குடும்பமாக ஆண், பெண், குழந்தைகள் வேறுபாடின்றி அனைவரும் ஒட்டுமொத்தமாக உழைப்பை செலுத்தக்கூடியவர்கள். வேலை நிமித்தமாக கணவன் மனைவி பிரிவதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார்கள். தாங்கள் காதலித்து விரும்பியவருடன் உடன்போக்கு திருமணங்களை அதிகம் மேற்கொள்ளும் இம்மக்களிடம் வரதட்சணை கிடையாது. இவர்களின் குடிசைகளுக்குக் கதவுகள் கிடையாது, இங்கு திருட்டு என்பதும் இல்லை. குடும்ப வன்முறை இல்லை, பொய்யில்லை, அடுத்தவர்களைக் குறித்துப் புறணி பேசுதல் இல்லை.

இந்தப் பூர்வகுடிகள் சிறந்த கதை சொல்லிகள். தங்களது அனுபவங்கள், கலாச்சாரம், கடந்த கால வரலாறு, நம்பிக்கைகள், கலை, வாழ்வியல், பட்டறிவு எனும் பாரம்பரிய மரபார்ந்த அறிவு, தாங்கள் அனுபவித்த துயரங்களை வாய்மொழியாகவே கடத்துவார்கள். குறிப்பாக, முதியவரிடம் இருந்து அடுத்தவருக்கும், இளையோர்களுக்கும் நேர்த்தியாகச் சங்கிலித் தொடராக இருக்கும். இப்படியான உயிர்ப்பான உரையாடலே, பூர்வகுடிகளை இன்னும் சிறந்த ஜனநாயகவாதிகளாக தக்கவைத்து உள்ளது.

கீழடி அகழாய்வை நினைத்துப் பெருமிதமும், மகிழ்வும் அடைகிறோம். ஆனால், அதே உணர்வோடு நம் சமூகத்தின் ஆதிக்குடியாய், பண்பாட்டின் அடையாளமாக கீழடியாய் நம் கண்முன்னே வாழும் ஆதி பூர்வகுடிகளை கொண்டாட மறக்கிறோம். நம் பார்வை எங்கே தவறுகிறது? ஜெய் பீம் திரைப்படம், நடந்த உண்மை சம்பவத்தை திருப்பிப் பார்ப்பது மட்டுமல்ல... நம் அருகாமையிலேயே வாழும் நமது பூர்வகுடிகளை கண்ணியமாக வாழவைக்க, நாமும் அரசும் நினைக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மையையும் உரக்கச் சொல்கிறது.

நமது மொழி ஒடுக்கப்படும் போதும், இனத்தின் பெயரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போதும், நேரெதிர் கலாச்சார திணிப்பைக் கண்டும் வெகுண்டு எழும் நாம், பூர்வகுடிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டும்காணாமல் கண்களையும், இதயங்களையும் கதவடைத்துக் கொள்கிறோம்.

பழங்குடிகள் பொதுவாக அமைதிவழி சமூகத்தினர். வன்முறையை ஒருபோதும் விரும்பாதவர்கள். அரசு நிர்வாக கட்டமைப்புகள் மீது பெரிதும் நம்பிக்கை அற்றவர்கள். தாங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதின் வெறுப்பாகக்கூட இது இருக்கலாம். இதனாலேயே தங்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும்போது காவல் துறை, நீதிமன்றங்கள் மீது சிறிதும் நம்பிக்கை அற்றவர்களாகிப் போகிறார்கள்

ஒருமுறை, தேனி மாவட்டம் போடி அருகே பழங்குடி இளம்பெண் ஒருவர், பெற்றோர் முன்னிலையில் 4 கொடியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து, “ஏன், எங்களிடம் முன்பே நடந்ததைச் சொல்லவில்லை, காவல் நிலையத்திற்கு ஏன் போகவில்லை?” என்று கேட்டேன். அதற்கு, “நாங்கள் பளியராக பொறந்தா இப்படித்தான் பண்ணுவாங்க. அதுதான் எங்க தலைவிதி. எங்களால அவங்கள பெருசா என்ன செஞ்சுட முடியம்? கலெக்டரைப் பார்க்க எப்படி தேனிக்குப் போறது?” என்று அப்பாவித்தனமாய் கேட்டார்கள் அந்தப் பெற்றோர். இப்படித்தான், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எங்கு போய் எப்படி நியாயம் கேட்பது என்றுகூட தெரியாத நிலையில், அந்த மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக்கூட, ஏற்கெனவே தங்களுக்காகத் தீர்மானிக்கப்பட்ட விதியாகவே கடக்கவே நினைக்கிறார்கள்.

பூர்வகுடிகள் இடதுசாரிகளுக்கு முன்னுதாரணமாக வாழும் பொதுவுடைமைவாதிகள் என்பது, பழங்குடிகளிடம் கற்றறிந்தவர்கள் கண்ட உண்மை. அதனால்தான், அந்த மக்களுக்கு ஒன்று என்றால் இடதுசாரிகள் ஓடோடி வருகிறார்கள். பழங்குடிகளுக்கான இடதுசாரிகளின் தீவிரச் செயல்பாடுகள் விலைமதிக்க முடியாதது. அதேநேரத்தில் பழங்குடிகளின் இயக்கங்கள், அதன் தலைவர்களின் தலைமைத்துவத்தையும் அங்கீகரித்து உறுதிசெய்ய வேண்டும் என்ற குரலும் பழங்குடி மக்களிடம் இல்லாமல் இல்லை.

ஜெய் பீம் படத்தில், காவல் சித்ரவதையில் ராஜாக்கண்ணுவிடம் அவரது தம்பி, “நாம குற்றத்தை ஒத்துக்கிடுவோம். அடி தாங்க முடியல” என்பார். “வேண்டாம்பா நம்ம காயம், வலி இப்போ இல்லனா எப்போனாலும் ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் மட்டும் எந்த காலத்திலும் மாறவே மாறாது” என்பார் ராஜாக்கண்ணு. உண்மையிலேயே அந்த மக்கள் இப்படியான குணாதிசயம் கொண்டவர்கள்தான். அதையும் துளியும் மிகையில்லாமல் சொல்லி இருக்கிறது படம். ஆம், ‘என்னைவிட சமூகம் மேன்மையானது’ எனும் அம்பேத்கரின் வரிக்கு, இலக்கணம் தருபவர்கள் அந்தமக்கள்.

பூர்வகுடிகளுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை நாமும் ஒப்புக் கொள்வோம். அப்போதுதான், இனியாவது அதை சரிசெய்ய முடியும். வரலாற்று நெடுகிலும் இயற்கையைப் பாதுகாக்க பழங்குடிகள் செய்த தியாகமும், உயிரிழப்பும், அநீதிகளால் மாண்ட பழங்குடிகளின் உயிரிழப்பும், தியாகமும் ஜெய் பீம் கதைகளாக ஏராளம் இங்குண்டு. அத்தனை கதைகளுக்கும் முடிவுகளை மாற்றி எழுதும் காலம் இனியாவது கனியட்டும். நம் பூர்வகுடிகள் நிம்மதியாக வாழட்டும்!

கட்டுரையாளர்: வழக்கறிஞர் - பழங்குடி மக்களின் உரிமைக்கான செயற்பாட்டாளர்

x