நெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-14


நம்பிக்கை :

"9-வது மாதம், வெண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் அதிகம்..?”

உண்மை :

கர்ப்பிணிப் பெண்ணின் எடை கூடுவதற்கான வாய்ப்புகளே இதில் அதிகம்.!

மிதமான அளவிலான கொழுப்பு, கரு வளர்ச்சிக்கு அவசியம்தான். ஆனால், அதை 9-வது மாதத்தில் அதிக அளவில் உட்கொள்ளும்போது கலோரி அளவு கூடுவதால் எடை கூடுவதுடன், செரிமானமின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது..

மேலும் சுகப்பிரசவம் என்பது, இயல்பான முறையில் குழந்தை பிரசவிக்கும் நிலை என்றிருக்க, இதில் முக்கியப் பங்கு வகிப்பது, "power, passage and passenger" எனும் ‘3 P’ தான்.. அதாவது, பிரசவ வழிப்பாதை, பிரசவ வலியின் தன்மை மற்றும் பயணிக்கும் குழந்தையின் நிலை ஆகிய மூன்றையும் சார்ந்ததுதான் சுகப்பிரசவமே தவிர, இதில் உணவுகளின் பங்கு எதுவுமில்லை என்பதே உண்மை!

நம்பிக்கை :

"பிரசவத்துக்கு முன் சீரகத் தண்ணீர் குடித்தால் பிரசவ வலி இருக்காது?"

உண்மை :

பொதுவாக நம் அகத்தைச் சீர் செய்வதால் அதைச் சீரகம் என்று சொல்கிறோம்.

நமது அன்றாட சமையலில் சேர்க்கப்படும் சீரகத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்பது உண்மை. சீரகத்தில் செரிமான நொதிகளைத் தூண்டும் பண்புகள் உண்டு. செல்களின் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதில் நிறைந்துள்ளது. சீரகத்தில் காணப்படும் ஆண்டி ஆக்சிடென்டுகள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டும். என்றாலும், இது எல்லாம் நிலையான ஆரோக்கியத்துக்கு உதவுமே தவிர, சீரகத் தண்ணீருக்குப் பிரசவ வலியைக் குறைக்கும் வல்லமை எதுவும் கிடையாது.

உண்மையில் சீரகத் தண்ணீரைக் குடித்த பின் வலி நிவாரணம் ஏற்பட்டதாகக் கர்ப்பிணி உணர்ந்தால், அது செரிமானம் சம்பந்தப்பட்ட பொய் வலியாகத்தான் காணப்படுகிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கோவிட் தடுப்பூசி கருவை பாதிக்குமோ!? : அவ(ள்) நம்பிக்கைகள் - 13

x