கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் அகால மரணம், இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 49 வயதில் மரணம் என்பதைப் பலராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மேலும், மாரடைப்பு என்பது உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளாதவர்களையும், அதிக எடை உடையவர்களையும்தான் தாக்கும் என்ற எண்ணத்தின் மீது புனித் ராஜ்குமாரின் மரணம் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
காரணம், புனித் ராஜ்குமார் தன் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அனுதினமும் உடற்பயிற்சிக்காகக் கணிசமான நேரம் செலவிடுபவர். அவரது மரணம் சம்பவித்த அன்று காலை, உடற்பயிற்சி முடித்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று கடந்த செப்டம்பர் மாதம் பாலிவுட் நடிகரான சித்தார்த் ஷுக்லா உடற்பயிற்சி முடிந்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்ற செய்தியும், அவர் உடற்பயிற்சிக்கூடத்தின் படிக்கட்டில் ஏறும்போது மாரடைப்பால் சரிந்து விழுவதாக ஒரு காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலானது. பிறகு அந்தக் காணொலி போலியானது என்ற செய்தி வந்தாலும், அவர் இறந்ததற்கான அழுத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை.
தற்போது புனித் ராஜ்குமார் இறப்புக்குப் பிறகு, உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வரும் என்பது போன்ற சமூக வலைதள மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு செய்திகள் அதிகம் பரப்பப்படுகின்றன. உடல் பருமன், இதய நலம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க அறிவியலும் மருத்துவமும் உடற்பயிற்சியைப் பரிந்துரைக்கும்போது, இது மாதிரியான செய்திகள் மக்களிடையே குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பலர் இப்போது உடற்பயிற்சி செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து, உடற்பயிற்சி ஆர்வலர் தினாவிடம் பேசியபோது, “உடற்பயிற்சி செய்தால் இதயக் கோளாறு வரும் என்று இதுவரை எந்த ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதயத்தைப் பலப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சிகள் உதவிகரமாக இருக்கின்றன என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்ததற்கு இதுவரை நிச்சயமான காரணங்கள் சொல்லப்படவில்லை. அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். அவருக்கு ஒரு வார காலமாக நெஞ்சில் லேசாக வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. நெஞ்சில் வலி ஏற்பட்டபோதே அவர் மருத்துவரை அணுகியிருக்க வேண்டும்.
மாரடைப்பு ஏற்படுவதற்குப் பரம்பரை பரம்பரையாக மரபணுவில் இருக்கும் குறைபாடுகள்கூட காரணமாக இருக்கலாம். இதுமட்டுமல்லாமல் உணவுப் பழக்கவழக்கங்கள், போதை வஸ்துகள் என்று பல காரணிகள் இருக்கக்கூடும். உடல் பருமன் பெரும் சிக்கலாக இருக்கும் நமது இன்றைய சமூகத்தில், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத காரணத்தினாலேயே பெரும்பாலோனோருக்கு மாரடைப்பு போன்ற சிக்கல்கள் வருகின்றன. புனித் ராஜ்குமார் மாதிரி, உடற்பயிற்சி செய்யும் ஓரிருவருக்கு மாரடைப்பு வந்துவிட்ட காரணத்தினாலேயே உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வரும் என்று கூறுவது சரியான வாதமாக இருக்காது” என்றார்.
அத்துடன், “நூற்றுக்கணக்கானோர் உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான உடற்கட்டையும் உடல் நலனையும் பெற்று நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறார்களே? அவர்களை ஏன் நாம் கவனிக்க மறுக்கிறோம்? ஆக, ஒட்டுமொத்தமாக உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வரும் என்று சொல்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பெரும்பாலும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக்கூட மரபணுவில் ஏற்படும் கோளாறு காரணமாக இதுபோன்ற சிக்கல்கள் உருவாவதற்குக் கணிசமான வாய்ப்புள்ளது.
உங்கள் குடும்பத்தில் உங்கள் மூதாதையர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட அல்லது வேறு ஏதேனும் பரம்பரை வியாதிகள் இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்பு ஒரு சிறந்த மருத்துவரை அணுகி, நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்குத் தகுதியானவர்தானா, உங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியின் அளவு என்ன என்பதை எல்லாம் ஆலோசித்து அறிந்த பின்பு உடற்பயிற்சிக் கூடத்திற்குள் நுழைவது சாலச்சிறந்தது” என்றார் தினா.
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி தொழில்முறை பளு தூக்கும் வீரரான, சிங்கப்பூரில் வசிக்கும் லெனின் கோபிநாதனிடம் பேசும்போது, “மரபணு ரீதியாகவோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைபாடுகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் உடற்பயிற்சி ஆரம்பிப்பது மட்டுமன்றி, ஒரு நல்ல உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனையும் எடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு என்ன பரிந்துரைத்துள்ளார் என்பது உங்கள் உடற்பயிற்சியாளருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கும் மேலாக உங்கள் உடற்பயிற்சியாளர் தகுதியானவர்தானா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்வதும் அவசியம்.
உங்கள் உடற்பயிற்சியாளர், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு பற்றி என்ன படித்திருக்கிறார், அவருடைய தகுதி என்ன என்பன போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்பே அவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். உடற்பயிற்சியின்போது அதீத சோர்வாக உணர்ந்தாலோ, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ சிறிதும் யோசிக்காமல் உடற்பயிற்சியை உடனே நிறுத்திவிட்டு உங்கள் உடற்பயிற்சியாளரிடம் தெரிவியுங்கள்.
அசவுகரியம் தொடர்ந்து நீடித்தால், யோசிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். மேலும், வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்கள் சொந்த உடல்நிலை பற்றிய உங்களது புரிதல் மேம்படும். சத்தான உணவுகள், தினமும் குறைந்தது 8 மணிநேரத் தூக்கம், சரியான உடற்பயிற்சி ஆகியவை உங்கள் இதயத்தை மட்டுமல்லாது முழு உடலையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்கும். இதில் துளியளவும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.
உடற்பயிற்சி அறிவியல் இன்று பல மடங்கு மேம்பட்டிருந்தாலும், பரபரப்பான ஒரு விஷயம் பேசப்படும்போது அதனுடன் இணைத்துப் பல கட்டுக்கதைகளையும், அறிவியலுக்கு ஒவ்வாத ஃபார்வேர்டு மெசேஜ்களையும் அனுப்புவது இன்று பலருக்குப் பொழுதுபோக்காகிவிட்டது. இதுபோன்ற தகவல்களால் மனக்குழப்பம் அடையாமல், அறிவியல் சொல்லும் வழி நடந்தால் ஆயுசு கெட்டி என்பதைப் புரிந்துகொண்டால் நிம்மதியும் நிலைத்திருக்கும்!