அண்ணன் நம்பர்லேர்ந்து போன்...


அம்மிணி சரியாத்தான் சொன்னாங்க. ஆனா, என் காதுல இப்படி விழுந்துச்சு. “அண்ணன் நம்பர்லேர்ந்து நாலு தடவை கால் வந்துச்சு ஒங்களுக்கு.”

போய் எடுத்துப் பார்த்தா அது அன்நோன் நம்பர்!. மறுபடி அதே நம்பர்லேர்ந்து அழைப்பு.

“யாருங்க”ன்னு விசாரிச்சேன்.

பதில் குரலைக் கேட்டதும் ஈரக்குலை நடுங்கிச்சு. “ஒரு பார்ட்டியை அழைச்சுக்கிட்டு வரணும். எப்போ வரலாம்.”

“நா... நாளைக்கு”ன்னு ஒளறிக் கொட்டுனேன். “சரி”ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாரு. நான் வேர்த்துக் கொட்டி நின்னதை அம்மிணி பார்க்கலன்னு நினைச்சேன்.

அந்த நம்பரை பாலு வாட்ச்மேன் ஓல்ட்னு உடனே சேவ் பண்ணேன். அம்மிணி, “யாரு போன்ல... இவ்ளோ ஒதர்றீங்களே ஒங்க பாஸா”ன்னு கேட்டாங்க.

“பழைய வாட்ச்மேன் பாலு”ன்னு நடுங்கிட்டே சொன்னேன்.

“என்னவாம்..”னு சவடாலா கேட்டாங்க.

“தெரியல. நாளைக்கு வான்னு சொல்லிட்டேன்”னு சொன்னதும், “ஏன்தான் இப்பவும் நடுங்குறீங்களோ”ன்னு ஒரு லுக்கு விட்டுட்டு போயிட்டாங்க.

நாலு வருசத்துக்கு முன்னாடி எங்க அபார்ட்மென்ட் வாட்ச்மேனா பாலு இருந்தாரு. “நைட் டூட்டி. எட்டு மணிக்கு வரணும். காலைல ஏழுக்குப் போயிரலாம். லீவுன்னா முன்னாடியே சொல்லிரணும்”னு சொன்னப்போ பவ்வியமா தலை ஆட்டுனாரு.

ஆளு கச்சலாத்தான் இருப்பாரு. எங்க அபார்ட்மென்ட் ஆளுங்க, “ஏய்... பாலு”ன்னு அதட்டிக் கூப்பிட்டாலும் கண்டுக்க மாட்டாரு. முத மாசம் சம்பளம் வாங்கறவரை நூத்துக்கு நூத்துப்பத்து மார்க் வாங்கற மாதிரி நடந்துக்கிட்டாரு.

அப்புறம்தான் சிக்கல் ஆரம்பிச்சுது. ஆடிட் டயத்துல லேட்டா வந்தப்போ வாச கேட்டு பூட்டி இருந்துச்சு. “பாலு... பாலு”ன்னு கத்துனதுல பாவப்பட்டு அம்மிணியே எறங்கி வந்துட்டாங்க.

“அவன் நல்லாத் தூங்கிக்கிட்டுருக்கான்”னு சொல்லி கதவைத் தொறந்து விட்டாங்க. மறுபடி பூட்டிக்கிட்டு பாலுட்ட போனா, அப்படி ஒரு தூக்கம். காலைல பேசிக்குவோம்னு மாடிக்குப் போயிட்டோம்.

காலைல சாவி கொடுக்க வந்தப்போ விசாரிச்சா “ஒடம்பு சரியில்ல”ன்னு பாவமா சொன்னாரு. “இந்த வாரம் லேட்டா வருவேன்”னு சொல்லி வச்சேன். அன்னிக்கி நைட்டு வந்தப்போ கேட்டு தொறந்து கெடந்துச்சு!

சுர்ருன்னு ஏறுச்சு அதைப் பார்த்ததும். பாலுவை உலுக்கி எழுப்பினா சாவியை நீட்டுறான். “பூட்டிருங்க சார். நீங்க லேட்டா வருவீங்கன்னு பூட்டல.”

அந்த நேரத்துல வம்பு வேணாம்னு போயிட்டேன். மறுநாள் பாலுட்ட, “இதெல்லாம் சரியில்ல”ன்னு முறைப்பு காட்டினப்போ, சாவியை கொடுத்துட்டு போயிட்டாரு.

அன்னிக்கு நான் சீக்கிரமாவே வந்தாச்சு. நைட் பதினொரு மணிக்கு எனக்கு போன். எங்க அபார்ட்மென்ட்ல குடியிருக்கிறவர். ஊர்லேர்ந்து வந்த மனுசன், “கேட் பூட்டியிருக்கு”ன்னு கத்துனாரு.

சாவியை எடுத்துக்கிட்டு கீழே போனா கேட் வெளியே பூட்டி இருந்துச்சு. பாலு அந்த ஏரியாவுலயே இல்லை. வந்தவரு சொன்னாரு. “இதோட இது ரெண்டாவது தடவை. கேட்டை வெளியே பூட்டிட்டுப் போயிடறான்”னு.

சிட் அவுட்லயே ஒக்காந்துட்டேன். அரை மணி கழிச்சு சாவகாசமா சைக்கிள்ல வந்த பாலு என்னைப் பார்த்துட்டு அசால்ட்டா இறங்கினார். “டீக்குடிக்கப் போனேன்”னு பதில்.

“கேட்ட வெளியே பூட்டிட்டா...”ன்னு கேட்டா, அதுக்கும் சவடால் பதில். “நீங்க தானே தொறந்து போடாதேன்னு சொன்னீங்க.”

இவரு தெரிஞ்சு செய்யறாறா இல்லாட்டி ரூட்ல விடறாரான்னு குழப்பம். “இந்த மாசத்தோட நின்னுக்க”ன்னு வேகமா சொல்லிட்டேன்.

அப்பவே சாவியை நீட்டினார். திரும்பி சைக்கிள்ள ஏறிப் போயிட்டார். என் கையில கொத்துச் சாவியோட நின்னப்போ நானே வாட்ச்மேன் ஆயிட்ட பிரமை வந்துச்சு. கேட்டைப் பூட்டிட்டு மாடிக்குப் போயிரலாம்னா, யார் யார் எப்போ வருவாங்கன்னு தெரியாது. பால்காரர் ஒருத்தர் நாலரைக்கே காலைல வந்துருவார். தொறந்து போட்டா எது காணாமப் போகுமோ.

திணறிக்கிட்டு இருந்தப்போ அம்மிணி போன் அடிச்சாங்க. “கதவை உள்ர பூட்டிக்கவா. எவ்ளோ நேரம் காத்துக்கிட்டிருக்கிறது.”

பாலு அடிச்ச கூத்தைச் சொன்னேன். “சிட் அவுட்ல படுங்க இன்னிக்கு”னு அமைதியா தீர்வு சொல்லிட்டாங்க.

மறுநாள் போட்ட அவசர மீட்டிங்ல பாலுவுக்கு ஆதரவா நாலு பேர், எதிர்ப்பா எட்டு பேருன்னு பேசி குழப்பினாங்க. வேற ஒரு ஆளு நைட் டூட்டி பார்க்கக் கிடைக்கவும் மேட்டர் முடிஞ்சிருச்சு.

பாலுவை ரோட்டுல பார்த்தப்போ பைக்ல போனார். ஆளு கொஞ்சம் பூசினாப்ல இருந்தாரு. வேற வேலை கிடைச்சிருச்சுன்னு புரிஞ்சுது.

ஆறு மாசம் முன்னால ஒரு பார்ட்டியை கூட்டிக்கிட்டு வந்தாரு. “வீடு வாடகைக்கு இருக்கா”ன்னு. மாசம் ரெண்டு தடவை வருவாரு இதே போல.

அபார்ட்மென்ட்ல ஒருத்தர் சொன்னாரு. “அவன் கூட வம்பு வச்சுக்காதீங்க. இப்போ அவன் பழகற எடமே வேற”ன்னு ஒரு மாதிரி கண்ணைச் சிமிட்டுனாரு.

என்னைத் தவிர வேற யாரும் பாலுவைப் பார்த்து பயப்படல. “பாலுகிட்ட சொன்னேன். கப்புன்னு முடிச்சுக் கொடுத்துட்டான். எனக்கு அலைச்சலே இல்ல”ன்னு பெருமைப்பட்டாங்க.

“அவசரப்பட்டு அவனை நிறுத்தியிருக்க வேணாம்”னு நைசா என்னைச் சீண்டிட்டுப் போனாங்க.

மறுநாள் சொன்னாப்ல வந்துட்டாரு. “ஏ ப்ளாக்ல காலி ஆகுதுன்னு சொன்னாங்க”ன்னு.

“எனக்குத் தெரிஞ்சு இல்லியே”ன்னு அமைதியா சொன்னேன். “அவரே சொன்னாரு. ஓனரு அவர்ட்ட முடிஞ்சா அடுத்த ஆளை வச்சுட்டுப் போங்கன்னு சொல்லி இருக்காராம்”.

“எனக்குத் தெரியாது”ன்னு ஒரே பல்லவியைப் பாடுனேன். அவரு சொன்ன ஓனரே ஒரு வாரங்கழிச்சு போன் செஞ்சாரு.

“வீட்டை வித்துட்டேன். நல்ல பார்ட்டி கிடைச்சுது. செக்ரட்டரின்னு தகவல் சொல்லிரலாம்னு. வாங்கினவரு நம்ம அபார்ட்மென்ட் பத்தி முழு வெவரமும் தெரிஞ்சவரா இருக்காரு. ஒங்களையும் நல்லாத் தெரியுமாம்.”

“ஓ. அப்படியா”ன்னு கேட்டுக்கிட்டேன். இனி பாலு வரமாட்டாரு அந்த வீடு வாடகைக்கு இருக்கான்னு கேட்டு. எனக்கு பெருமூச்சு வந்துச்சு.

“எப்போ குடி வராராம்”னு யதார்த்தமா கேட்டேன்.

“இன்னிக்கே பால் காய்ச்சப் போறேன்னு சொன்னாரே” பழைய ஓனர் சொல்லிகிட்டுருக்கும் போதே, புது ஓனர் வந்து நின்னாரு.

ஆளைப் பார்த்ததும் நான் மயக்கம் போடாத குறை.

வேற யாரு... நம்ம பாலு!

x