இசை வலம்: ஓர் இனிய இசைச் சங்கமம்!


ஏதோ ஓர் ரயில் பயணத்தில் அறிமுகமாகி நம் மனத்தில் நீங்காமல் இடம்பிடித்த ஒருவரை, ஏதேச்சையாக மறுபடியும் இன்னொரு ரயில் பயணத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்? இந்த மாதிரியான எதிர்பாராத சந்திப்புகளின் ‘த்ரில்' அனுபவங்களை இசையில் பரிசோதித்துப் பார்ப்பதுதான் மாஷ்-அப். பெரிதான திட்டமிடல்கள், வானை வில்லாக வளைக்கும் பிரயத்தனங்கள் இல்லாமல், இயல்புக்கு நெருக்கமாக அமையும் மாஷ்-அப்கள் அபூர்வமாகத்தான் கிடைக்கும். அப்படிப்பட்ட அனுபவத்தை நமது செவிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது அபய்.வி, சுகன்யா வரதராஜனின் இந்த இசைச் சங்கமம்.

நாம் ரசித்து ரசித்துக் கேட்டுப் பரிச்சயமான, ‘ஆஹா...ஹா..' என்று தொடங்கும் ஹம்மிங்கைத் தொடர்ந்து, ‘புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்... உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்...' என்று சில வரிகள், அதைத் தொடர்ந்து ஜிலீரென ஒரு சலங்கை மாலையின் தழுவல், அதைத் தொடர்ந்து புராணகால `கர்ணன்' படத்தில் ஒலித்த `இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலை இருவரும் சேர்ந்து பாட... கேட்கும் நம் மனம் குதூகலிக்கிறது. ‘அன்பே சிவம்' படத்தின் ‘பூ வாசம் புறப்படும் பெண்ணே' பாடலுக்கும், ‘இரவும் நிலவும்' பாடலுக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமை, இரு மலர்களுமே ‘சுத்சரங்’ எனும் ராகச் சரடில் தொடுக்கப்பட்டவை என்பதுதான்! இந்த எதிர்பாராத சந்திப்புகளைத் திகட்டாத திருப்புமுனைகளோடு நமக்கு தரிசனப்படுத்துவதில்தான் அபய், சுகன்யாவின் திறமை பளிச்சிடுகிறது.

விஸ்வநாதன் - ராமமூர்த்தியைக் கவர்ந்த அதே ராகம் வித்யாசாகரையும் கவர்ந்திருக்கிறது. அவர்களைக் கவர்ந்த அதே ராகம், அபய், சுகன்யாவையும் கவர்ந்திருக்கிறது; கூடவே நம்மையும். இதற்கு நீங்கள் இசைந்துதான் ஆக வேண்டும்!

https://www.youtube.com/watch?v=Iq_tk4FBIXk

ஸ்ரீநிவாஸின் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி தபஸம், அவர் வாழ்ந்த காலத்திலேயே மிகவும் போற்றப்பட்ட கவி. அவருடைய புகழ்பெற்ற பாடலான `தேரே பஸம்’ பாடலை மெஹதி ஹாசன் பாடி, உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதே பாடலைத் தற்போது பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வசீகரக் குரலில் பாடிப் பதிவேற்றியிருக்கிறார்.

தென்னிந்தியப் பின்னணிப் பாடகர்களில் இந்துஸ்தானி இசையை முறையாகக் கற்றுக்கொண்டு சூஃபி, கஸல் பாணியில் சிறப்பாகப் பாடக் கூடிய கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீநிவாஸ். பாரம்பரியமான ஹீர் பாணியில் சிந்துபைரவி ராகத்தில் மந்திர ஸ்தாயியில் தொடங்கும் ஸ்ரீநிவாஸின் குரல் படிப்படியாக உத்வேகம் கொள்கிறது. இந்தப் பாணியில் பாடலைப் பாடுவது சறுக்கு மரத்தில் ரிவர்ஸில் ஏறுவது போல் சவாலான விஷயம்!

இந்தப் பாட்டு சர்க்கஸ் குறித்து ஸ்ரீநிவாஸிடம் கேட்டோம். “அந்த `ஸ்கேலில்' பாடும்போது யார் பாடினாலும் உருக்கமாகத்தான் இருக்கும். ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் இந்தப் பாடலின் வரிகளாக மேம்போக்காகத் தெரிந்தாலும், அது கடவுளைப் பற்றிய விஷயமாகவும் இருக்கும்; தெய்வீகமாகவும் இருக்கும். சூஃபி தபஸமின் வார்த்தைகளும் அவருடைய இசையும் நம்மை வேறு ஓர் உலகத்துக்குக் கொண்டுசெல்லும் வல்லமை கொண்டவை. பொறாமை, சண்டை எதுவுமே தேவையில்லை என்பதை இந்தப் பாடலைப் பாடும்போது என்னுடைய உள் மனதில் நான் உணர்ந்தேன். இந்த உணர்ச்சி இந்தப் பாடலைக் கேட்கும் எல்லோருக்கும் நிச்சயம் ஏற்படும். நான் பாடுவதால் அல்ல, அதுதான் அந்தக் கவியின் வார்த்தைகளுக்கு இசைக்கு இருக்கும் பலமாக நான் பார்க்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் மெஹதி ஹாசனுக்கு இந்தப் பாடலை நான் அர்ப்பணித்திருப்பதற்குக் காரணம், அவர் இந்தப் பாடலை மிகவும் நேர்த்தியாகப் பாடியிருப்பார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டுதான் இந்தப் பாடலைப் பாடினேன். அவர் மீதான என்னுடைய அளப்பரிய மரியாதையை வெளிப்படுத்தும் சிறு முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார் ஸ்ரீநிவாஸ்.

சூபி தபஸமின் வரிகளில் ‘தேரே பஸம்’ பாடலைக் காண

https://www.youtube.com/watch?v=IAS7KGLjqcE

மதுராஷ்டகத்திலிருந்து ஒரு மதுரம்!

இறைவனின் திருநாமமும், இருப்பிடமும், நினைவும், தரிசனமும் எப்படி இனிக்கிறது என்பதை அணுஅணுவாக விவரிக்கும் பாடல் ‘அதரம் மதுரம்... வதனம் மதுரம்... நயனம் மதுரம்... ஹசிதம் மதுரம்’. இந்தப் பாடலை இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி காந்தக் குரலில் பாடியிருப்பார்.

ஜீவாத்மா பரமாத்மாவின் மீது கொள்ளும் காதலே தெய்வீகக் காதல். இந்த அனுபவத்தை ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உணரலாம். கிருஷ்ண பக்தியை இந்த அடிப்படையில் அணுகுவதுதான் ஜெயதேவரின் அஷ்டபதி. ஏராளமான அருளாளர்கள் இந்த வழியில் மிகச் சிறந்த படைப்புகளை அளித்து, லௌகீக வாழ்க்கையிலிருந்து மனிதன் விடுபடுவதற்கான இலக்கியச் சேவையைச் செய்திருக்கின்றனர். இந்த அருளாளர்களின் வழியில் வந்தவர்தான் ஸ்ரீபாத வல்லப ஆச்சார்யா.

கிருஷ்ண தேவராயரின் அவையில் இடம்பெற்றிருந்த இவர் வியாச சூத்ர பாஷ்யம், பாகவத சுபோதினி, சித்தாந்த ரகசியா போன்ற பல அரிய நூல்களை சம்ஸ்கிருதத்தில் எழுதியவர். இவை எல்லாவற்றையும்விட, இவரை பக்தர்களுக்கு மிகவும் நெருக்கத்தில் கொண்டுவந்தது, இலக்கிய உலகுக்கு இவரின் கொடையான ‘மதுராஷ்டகம்’. மதுரம் என்றாலே இனிப்பு என்று அர்த்தம். அஷ்டகம் என்றால் 8 பத்திகளில் அமையும் பாடல்.

அப்படிப்பட்ட மதுராஷ்டகத்திலிருந்து ஒரு பாடலை ஷ்ரேயா கோஷல் தன்னுடைய சன்னமான குரலில் பாடி, கேட்பவர்களை மெய் மறக்கவைக்கிறார். பாரம்பரியமான சதுஸ்ர தாளத்தில் இந்தப் பாடல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், முகப்பு இசையிலேயே வீணை, புல்லாங்குழல், வலம்புரிச் சங்கு, பாஸ் கிடார், டிம்பொனி என்று நம்முடைய செவிக்கு ஓர் அறுசுவை விருந்து நடக்கிறது. இப்படியொரு அட்டகாசமான இசைக் கோவையில் தொடங்கினாலும் முடியும்போது, பாரம்பரியமான பஜனை பத்ததி சம்பிரதாயத்தோடு முடித்திருப்பதில் மரபும் நவீனமும் சங்கமிக்கின்றன. ‘மதுராபதி... அகிலம் மதுரம்’ எனும் வரியைப் பாடும்போது, ஷ்ரேயா கோஷலின் மதுரமான குரலை நீங்களும் உணரலாம்.

https://www.youtube.com/watch?v=1xyKRrsUnV4

மனதில் ரீங்காரமிடும் மாப்பிள்ளா பாட்டு!

கேரளத்தின் இஸ்லாமிய திருமண வீடுகளில் நடக்கும் வைபவங்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே மணமக்களுக்கென்றும் மணமகனுக்கென்றும் ‘மாப்பிள்ளா பாட்டுகள்’ பாடப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட பாடல்களின் தொகுப்பை மதீத் எனும் இசைக் கொத்தாக யூடியூபில் வெளியிட்டிருக்கின்றனர். அந்தத் தொகுப்பின் தொடக்கப் பாடலான `பால்நிலா புஞ்சரி' எனும் பாடலே, மானசீகமாக அந்தத் திருமண வீட்டாரோடு நம்மையும் சஞ்சரிக்க வைக்கிறது.

பாத்திமாவின் கருணையைப் பேசும் இந்தப் பாடல், மணமகளின் குணத்தையும் அதனூடே வர்ணிக்கிறது. சிக்கல் இல்லாத எளிமையான வார்த்தைகள், மிதமான இசை, வளமான குரல் வளம். இந்த சேர்மானத்தில் கேட்பவர்களை லயிக்க வைப்பதுதான் மாப்பிள்ளா பாட்டுகள். ஓ.எம்.கருவரக்குண்டு எழுதிய பாடல்களுக்கு கே.ஏ. லத்தீஃப் அமைத்திருக்கும் மிதமான இசையும் மார்கோஸ், ராதிகா திலக்கின் அபரிமிதமான குரல் வளமும் கேட்கும் நம்மை கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன.

மாப்பிள்ளா கானத்தைக் கண்டு ரசிக்க:

https://www.youtube.com/watch?v=MH5dIL0aV9Y

x