பேசிக்கிட்டாங்க...


நாகர்கோவில்

ஒரு பூங்காவில் இரு பெரியவர்கள்...

“ஏன் சார்... அமெரிக்க நாடுகள்னாலே எல்லாம் ஒண்ணு போலத்தானே இருக்கணும். ஆனா, வட அமெரிக்கா மாதிரி தென் அமெரிக்கா அவ்வளவு செழிப்பா இல்லையே?”

“என்ன பண்றது... அங்கேயும் நம்ம இந்தியா போல வடக்கு வாழுது, தெற்கு தேயுதுபோல...”

“அட போங்க சார்! எப்பப் பார்த்தாலும் பழைய கதையா பேசிக்கிட்டு...”

“பழைய கதையா? இப்பவும் சதர்ன் ஸ்டேட்ஸ்கிட்ட வசூலிக்கிற ஜிஎஸ்டி வரியை வச்சுத்தானே வடக்கு வாழுது. எல்லாம் அதே கதைதான்!”

- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

ஈரோடு

பன்னீர்செல்வம் பார்க் அருகில்...

“ஒன்னாந் தேதி பள்ளிக்கூடம் திறந்தது என் ஒய்ஃபுக்குத்தான் ரொம்ப சிரமமாப் போய்டுச்சு.”

“என்னாச்சு?”

“இவ்வளவு நாளும் ஸ்கூல் இல்லாததால ஏழு மணிக்குத்தான் எழுந்திரிப்பா. இப்ப ஆறு மணிக்கு முன்னாடி எழுந்தால்தான் பையன எட்டு மணிக்கு ஸ்கூலுக்கு அனுப்ப முடியும். அதான் ஒரே புலம்பல்!”

“எல்லாம் சரி... நீ எத்தனை மணிக்கு எழுந்திரிப்ப?”

(கப்சிப் ஆகிறார் நண்பர்)

- கமலக்கண்ணன்.இரா, சித்தோடு

திருச்சி

டாஸ்மாக் கடையில் ஊழியரும் வாடிக்கையாளரும்

“சார்... காலங்கார்த்தாலே கடன் கேட்டு உயிரை வாங்காதீங்க.”

“தினசரி வந்து போற இடத்துல இப்படி பேசாதப்பா... மனசு வலிக்குது!"

“அப்ப காசு குடுங்க.”

"தீபாவளிக்கு எல்லாம் செலவாயிடுச்சு. அடுத்த மாசம் தர்றேன்... நானெல்லாம் குடிக்கறதை நிப்பாட்டுனா பெட்ரோல் விலை 200 ரூபாயாகிடும்யா!"

-சிவம், திருச்சி

தஞ்சாவூர்

கடைவீதியில் இருவர்...

“என்ன தம்பி இது? முன்னாடியெல்லாம் சிவகாசிக்கே போய் மூட்டை மூட்டையா வெடி பர்சேஸ் பண்ணிட்டுவருவே... இந்தத் தடவை ஒரே ஒரு வெடிக்கட்டு வாங்கிட்டுப் போறியே?”

“என்னண்ணே பண்றது? வெடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம்னு கவர்மென்ட் டைம் குடுத்துடுச்சு. முன்னாடி மாதிரி பத்தாயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குனா வீட்டுல வச்சு வேடிக்கைதான் பார்க்கணும்.”

“பொல்யூஷன் பிரச்சினை இருக்குப்பா... அதனால வேற வழியில்லை. ஆன்லைன்லதான் வெடி வெடிக்கணும்னு அவசரச் சட்டம் போடாம இத்தோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு...”

- நே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

தஞ்சாவூர்

பள்ளியின் வாயிலில் வாட்ச்மேனும் மாணவனின் தந்தையும்...

“அட என்ன சார்... இத்தனை நாளைக்குப் பிறகு ஸ்கூல் திறக்குது. முத நாளே லேட்டா வர்றீங்களே?"

“லேட்டா வரணும்னு எனக்கென்ன வேண்டுதலா? ஒன்றரை வருஷத்துல ரூட்டையே மறந்துட்டேம்பா.”

“ஆனா உங்க பையன் என்னை மறக்கலை சார். பார்த்ததும் ‘ஹாய் வாட்ச்மேன் அங்கிள்’னு சொல்லிட்டான். பசங்க நல்லா படிக்கணும் சார்.”

(மாணவனின் தந்தை மகிழ்ச்சியுடன் தலையாட்டுகிறார்!)

- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

x