தமிழக அரசின் காலநிலை மாற்ற செயல்திட்டம் பயனளிக்குமா?


"அந்தக் காலத்துல எல்லாம் ஆடிக் காத்து ஆளைத்தூக்கும், ஐப்பசியில அடைமழை அப்படிப் பெய்யும், இப்ப எல்லாம் மாறிப்போச்சு..." என்று மக்கள் புலம்பத் தொடங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இது வெறுமனே வானிலை மாற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பருவநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்தும்கூட, இதைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் நம் நாட்டில் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதில்லை. உலகளாவிய கருத்தரங்குகளில் பங்கேற்பது, சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, அதற்கான திட்டங்களை அறிவிப்பதுடன் மத்திய அரசின் கடமை முடிந்துவிடுகிறது. மக்களுக்கு நெருக்கமாக இருக்கிற மாநில அரசுகள் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டியதில்லை.

பருவநிலை மாற்றத்தின் விளைவாகவே அதீத மழை, கடும் வெயில், திடீர் வெள்ளம், புயல், சூறாவளி, வறட்சி என்று ஏதாவது ஒரு பகுதியில் பெரிய அழிவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தின் முக்கியமான காரணமாக, புவியின் வெப்பநிலை உயர்தலையே சுட்டிக்காட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட கடல் வெப்ப உயர்வு (எல் நியோ) காரணமாக, கடந்த 2015 டிசம்பரில் பெருவெள்ளப் பாதிப்புக்கு ஆளானது தலைநகர் சென்னை. இப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கும் பருவநிலை மாற்றமே காரணமாகக் கூறப்படுகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் மாநில அரசுகள்தான் இருக்கின்றன.

இந்தச் சூழலில், காலநிலை மாற்றச் செயல்திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, தமிழகக் காடுகளின் பரப்பை அதிகரித்து, நிலம் பாழ்படுதலை தடுத்தல், சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 'தமிழ்நாடு கிரீன் கிளைமேட் கம்பெனி' என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தைத் தொடங்குவதாகவும் அறிவித்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்படுவதற்கான செயல்திட்ட வடிவத்தின் மாதிரியை, தமிழகச் சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்தில் வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், அந்த அறிக்கையானது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழக சுற்றுச்சூழல் துறையானது அரசு அதிகாரிகளின் உதவியுடன் தன்னிச்சையாக உருவாக்கியது என்றும், இதை மக்களுக்கான செயல்திட்ட அறிக்கையாகக் கருத முடியாது என்றும் அப்போது எதிர்ப்புகள் உருவாகின.

சுந்தரராஜன்

"தற்போதைய அரசு வெளியிட்டுள்ள காலநிலை மாற்றச் செயல்திட்ட அறிக்கையானது எப்படியிருக்கிறது, அது பலனளிக்குமா?" என்று 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் சுந்தரராஜனிடம் கேட்டபோது, "இந்த அரசு பொறுப்பேற்றதுமே தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பெயரை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்று மாற்றியது. இதுநாள்வரை தமிழகத்தில் பருவநிலை மாற்றத் துறைக்கென ஒரு தெளிவான இலக்கோ, திட்டமோ கிடையாது. இந்த நிலையில் 3 அறிவிப்புகளை புதிய அரசு வெளியிட்டிருக்கிறது. 1. காலநிலை மாற்றத்துக்கான ஓர் இயக்கம் 2. சதுப்பு நிலம் பாதுகாப்பு இயக்கம் 3. பசுமைப்போர்வை அதிகரிப்பு இயக்கம். இந்த 3 திட்டங்களையும் செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு ’கிரீன் கிளைமேட் கம்பெனி’ என்ற தனி நிறுவனத்தையும் தொடங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. அரசுத் துறை செயலாளர்கள் எல்லாம் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பார்கள். எனக்குத் தெரிந்து இதுபோன்ற முயற்சிகளை சில மாநிலங்கள் எடுத்திருக்கின்றன என்றாலும், இதற்கென தனி நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது தமிழகம்தான் என்பதால், இதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்றார். அவருடன் மேலும் உரையாடியதிலிருந்து...

செயல்திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, உடனே செய்ய வேண்டிய வேலை என்ன?

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கார்பன் வெளியேற்றம் நடக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களை அரசு சேகரிக்க வேண்டும். உதாரணமாக, போக்குவரத்துத் துறை, தொழில் துறை, விவசாயம் போன்றவை எவ்வளவு கார்பனை வெளியிடுகிறது என்று துல்லியமாகக் கணக்கிட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கையே நாம் நிர்ணயம் செய்ய முடியும். இலக்கு நிர்ணயம் செய்யாமல் வேலை செய்ய முடியாது. அதைக் குறைப்பதற்கான தொழில்நுட்பம் எது என்பதையும் முடிவு செய்ய முடியாது. எனவே, இந்தக் கணக்கெடுப்பு முதலில் தேவை. இது சாதாரண வேலை அல்ல, ஒரு மிகப்பெரிய பணியின் சின்ன துவக்கப்புள்ளிதான். இன்னும் நிறைய தூரம் நாம் போக வேண்டியதிருக்கிறது.

காடுகள் அதிகரிப்பு பற்றிச் சொல்லியிருக்கிறார்களே, இது எந்த அளவுக்குச் சாத்தியமென நினைக்கிறீர்கள்?

2 விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, இருக்கிற காடுகளின் (இயற்கை காடுகள்) பரப்பளவை அதிகரிப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். உதாரணமாக, ஒவ்வொரு காடுகளையும் சுற்றியுள்ள பகுதிகளைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவித்துப் பாதுகாப்பது. பிறகு, அதுவே காடாக மாறும். அதன் பிறகு, இன்னொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதைக் காடாக மாற்றுவது. இப்படியே படிப்படியாகக் காடுகளின் பரப்பை விரிவாக்கலாம். இன்னொரு விஷயம், செயற்கைக் காடுகளை உருவாக்குதல். அதாவது, மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களை காடு போல வளர்த்தெடுப்பது. 100 ஏக்கரில் ஆலமரம், அத்திமரம், வேப்பமரம், புங்கை மரம் என்று வளர்த்தோம் என்றால், நாளடைவில் அதுவே இயற்கை காடுகளாக மாறிவிடும். காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல, புல்வெளிகள், புதர்கள், பறவைகள், சின்னஞ்சிறிய உயிரினங்கள் எல்லாம் சேர்ந்தவைதான். நாம் மரத்தைத்தான் வளர்க்க முடியும். நாளடைவில் காடுகள் தானாக உருவாகும். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில்கூட, இப்படி ஒரு காடு உருவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதெல்லாம் ஆரம்பத்தில், மனிதர்களால் வளர்க்கப்பட்ட தீக்குச்சி மரங்கள்தான். இப்போது அங்கு மான்களும், சிறுசிறு வன உயிரினங்களும் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு புறம், தமிழ்நாடு அரசு மணல் குவாரிகளுக்கு அனுமதி தரப்போகிறது, நாகப்பட்டினம் நரிமனில் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் கட்டத் திட்டமிடுகிறது போன்ற செய்திகள் வருகிறதே?

பெட்ரோ கெமிக்கல் என்பதும் ஹைட்ரோ கார்பன்தான். ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்த திமுக, இப்போது அதை அனுமதிக்கக்கூடாது. டெல்டா மாவட்டப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, வேறு எந்த தொழில் நடவடிக்கையும் அங்கே செய்யக்கூடாது. அரசே அப்படிச் செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஒருபுறம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், குறைக்கவும் திட்டங்களை அரசு நிறுவனம் அறிவிக்கிறபோது, இன்னொரு புறம் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் கட்டுவது, உடன்குடியில் அனல் மின்நிலையம் அமைப்பது, ஆறுகளில் மணல் குவாரிகளுக்கு அனுமதியளிப்பது, மலைகளை உடைத்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களைச் செய்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். மிக அதிகமான நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கிற சத்தீஸ்கரில் ஒரு அனல் மின்நிலையம் கூட அமைக்க மாட்டோம் என்று அம்மாநில அரசு சொல்லிவிட்டது. குஜராத்தும், மகாராஷ்டிராவும் கூட இனி புதிதாக எந்த அனல் மின்நிலையத்தையும் தொடங்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டன. ஆனால், நாம் உடன்குடியில் 4 அனல் மின்நிலையங்களைத் தொடங்குவோம் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. கார்பன் வெளியேற்றத்தில் அதிகமான பங்கு அனல் மின்நிலையங்களுக்குத்தான் இருக்கிறது. இனிமேல் தமிழ்நாட்டில் கொண்டுவரப்படுகிற எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, அது பெருஞ்சாலையோ, தொழிற்சாலைகளோ எதுவாக இருந்தாலும் சரி அது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு உதவுமா அல்லது இன்னும் மோசமாக்குவதற்கு உதவுமா, பருவநிலையில் இது என்ன மாதிரியான தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தும் என்று ஆய்வு செய்துவிட்டுத்தான் அனுமதியே அளிக்க வேண்டும். இல்லையென்றால், அரசின் முயற்சிகள் முழுப் பலனைத் தராது.

இவ்வாறு அவர் கூறினார்.

x