லென்ஸ் சிமிட்டும் நேரம் - 11


எனது போட்டோ ஆல்பத்தில் இருக்கும் பூக்களில், லில்லிகள் அனைத்தும் என் வீட்டில் பூத்தவைகளே. இதில் வெள்ளை, இளஞ்சிவப்பு நிறங்களை அடுத்து மஞ்சள் நிற லில்லியையும் சேர்க்க விரும்பி, நான் ஏறி இறங்காத நர்சரிகள் இல்லை. போன வருடம்தான் அந்தச் செடி லால்பாக்கில் என் கண்ணில் பட்டது. மிகுந்த ஆசையுடன் வாங்கி வந்து வீட்டில் வைத்தேன்.

செடி கிடைக்கும்வரை ‘எப்போது கிடைக்கும்’ என ஏங்கிக் கொண்டிருந்த நான், அதை வாங்கிவந்து வைத்தபிறகு ‘எப்போது பூக்கும்’ என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த அளவுக்கு என்னை எதிர்பார்ப்பின் விளிம்புக்கே இழுத்துச்சென்று விட்டது, இந்த மஞ்சள் லில்லி செடி.

மஞ்சள் லில்லியின் சிறப்பம்சம் என்னவென்றால், மழை பெய்தால் மட்டுமே பூக்கள் பூக்கும். அதனால், என்னை ஆறேழு மாதங்கள் காக்க வைத்துவிட்டன. எங்கள் வீட்டு ‘சேட்டையின் சிகரமான’ வெள்ளைப் பூனையானது, கோடையின் சூடு தணிக்க பூந்தொட்டிகளில் ஓய்வெடுப்பது வாடிக்கை. அதுக்கும் மஞ்சள் லில்லி செடி பிடித்துப் போனதோ என்னவோ, அங்கேயே போய் அடைகாத்து தூங்க ஆரம்பித்தது. அதை விரட்ட வழி தெரியாமல் இருந்த நேரத்தில்தான் எனது சிங்கப்பூர் தோழி ஒருத்தி, “தொட்டிகளில், உபயோகப்படுத்தாத டூத் பிரஷ்களைக் குத்தி வை” என யோசனை சொன்னாள். சிங்கப்பூரில் பூனைகளைச் சமாளிக்க இப்படித்தான் செய்வார்களாம்.

அவள் சொன்னபடியே பூந்தொட்டியில் டூத் பிரஷ்களை செருகி வைத்தாயிற்று. அதைப் பார்த்த பாலாஜி, “பாத்தும்மா... மஞ்சள் லில்லிக்குப் பதிலா டூத் பிரஷ் வளர்ந்துடப் போகுது” என சிரிக்காமல் சொன்னார். அப்போதைக்கு அவரை முறைத்தாலும் உள்ளுக்குள் நானும் மெலிதாகச் சிரித்துக் கொண்டேன்.

ஒருவழியாக வருண பகவான் தயவில் மழைபெய்ய, 2 பூக்கள் பூத்துவிட்டன. அந்த 2 பூக்களையும் பல்வேறு கோணங்களில் படமும் எடுத்தாகிவிட்டது. அதைத்தான் உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

இப்போது வருடந்தோறும் என் வீட்டில் லில்லிகள் பூக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அதை வெவ்வேறு கோணங்களில் படங்கள் எடுத்தும், பிராசஸ் மற்றும் வண்ணங்களில் மாற்றங்கள் செய்தும் பதிவிட்டு வருகிறேன். எப்படி நான் சலிக்காமல் இவைகளை படங்கள் எடுத்துப் பதிவிடுகிறேனோ, அதே மாதிரி என் படங்களை ரசிப்பவர்களும் சலிக்காமல் எனக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த ஊக்கம் தான், ஒவ்வொரு முறையும் என்னை புதிது புதிதாய் யோசிக்கவைத்துக் கொண்டே இருக்கிறது.

x