மதுரை மக்களில் பெரும்பாலானவர்கள், ஒரு முறையேனும் கண்டிப்பாக 'புது மண்டபம்' சென்றிருப்பார்கள். ஏனெனில், பிறப்பு தொட்டு இறப்பு வரைக்கும் அத்தனை சடங்குகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் அலைச்சலின்றி ஒரே இடத்தில் கிடைக்கும் இடம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கும் புதுமண்டபம்.
மதுரையின் இன்றைய தலைமுறையினருக்கு புது மண்டபம் என்று சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது, பித்தளைப் பாத்திரக்கடைகளும் புத்தகக் கடைகளும்தான். ஆனால், பலருக்கு இது எதற்காகக் கட்டப்பட்டது என்ற வரலாறு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வசந்த மண்டபம் என்று சொல்லப்படும் இந்த மண்டபம், 1635-ல் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. வரிசைக்கு 20 தூண்கள் வீதம் 5 வரிசைகளில் மொத்தம் 100 தூண்கள் உள்ள இந்த மண்டபத்தைச் சுற்றியே இப்போதுள்ள கடைகள் இருக்கின்றன. வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவின்போது இங்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர்.
நாயக்கர்கள் காலத்தில் இந்த மண்டபத்தை, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் சென்று வந்த பின்னர் இளைப்பாறுவதற்கே பயன்படுத்தி வந்தனர். இப்போது இந்த மண்டபத்தில் புத்தகக் கடைகள் மற்றும் பித்தளைப் பாத்திரக்கடைகள் இருக்கும் பகுதியானது, அந்தக் காலத்தில் தண்ணீர் செல்லும் கால்வாயாக இருந்துள்ளது. ராணியர் வந்து இளைப்பாறும் பொழுதில் குளிர்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு. இந்த மண்டபத்தில் மீனாட்சியின் திக்விஜயக் காட்சியையும், சிவபெருமானுடைய ஊர்த்துவத்தாண்டவக் காட்சியையும் சிலைகளாக வடித்துள்ளனர்.
மண்டபத்தின் தூண்களின் நடுவில் உள்ள பட்டயக் கல்லில், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயிலிலும், தெற்கு வாயிலிலும் குதிரைகள் மண்டபத்தை இழுத்துச் செல்வது போன்று உருவாக்கி இருப்பதால், பார்ப்பதற்கு இம்மண்டபம் ஓர் ரதம் போன்று காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் நந்தி மண்டபத்தில் காணப்படும் 27 சிலைகளை இங்கும் செதுக்கி உள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த மண்டபம் ஓர் நூலகமாக செயல்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகே, இங்கு கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. சித்திரைத் திருவிழா வருகிறதென்றால், இங்குள்ள கடைகளில் கள்ளழகர் பக்தர்கள் உடுத்தும் உடைகளைத் தைக்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கும்.
அழகர் திருமாலிருஞ்சோலையிலிருந்து (அழகர் கோயில்) தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண புறப்பட்டு மதுரைக்கு வருவார். வரும்வழியில் அவருடைய பக்தர்கள் இம்மாதிரியான உடைகளை உடுத்தி, சித்திரை மாத சூட்டைத் தணிப்பதற்காக அழகரின் மேல் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். ஆண்டு முழுவதும் இந்த துணிகள் விற்பனையானாலும், சித்திரை மாதத்திலேயே அதிகம் விற்பனை ஆகுமென, இந்தக் கடையை நடத்துபவர்களில் ஒருவரான கார்த்திகேயன் எங்களுக்குச் சொன்னார்.
முன்பெல்லாம், திருவிழா முடிந்ததும் வைகை ஆற்றிலேயே இந்தத் துணிகளைத் தூக்கி எறிந்து விடுவார்களாம். ஆனால், இப்பொழுதெல்லாம் மறுஉபயோகப்படுத்த தொடங்கிவிட்டார்கள். நல்ல விஷயம்தான். அழகர் திருவிழாவுக்கு மட்டுமல்லாது, நெல்லையின் சுடலைமாடசாமி திருவிழாவுக்கும் இங்கிருந்தே துணிகள் வாங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.
இந்த வியாபாரத்தை பரம்பரையாகச் செய்துவரும் கார்த்திகேயனின் படங்கள், எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் முக்கியமான ஒன்று. அவரை மட்டும் தனித்துப் படமெடுக்காமல், அவரின் வியாபாரத்துக்கு மூலதனமான கருங்கச்சை, குல்லா மற்றும் அவரின் சிறிய கடை ஆகியவையும் சேர்த்து படமாக்கினேன். கார்த்திகேயனின் படத்தை எப்பொழுது பார்த்தாலும், அவர் சம்பந்தப்பட்ட அனைத்தும் ஞாபகத்துக்கு வந்துவிடும் எனக்கு.
புதுமண்டபத்தை ஓர் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்கூட அரசுக்கு இருப்பதாக, அங்குள்ளவர்கள் சொன்னார்கள். அப்படி மாற்றினால் அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கும், சுற்றுலா மேம்படும். ஆனால், இங்குள்ள கடைகளும், கார்த்திகேயன் மாதிரியான சிறு சிறு வியாபாரிகளின் வாழ்க்கையும் என்னவாகும் என்பதுதான் கேள்விக்குறி.